நூதனத் திருட்டு/ரேவதி பாலு

‘இரவு 10 மணி இருக்குமா’ கல்பனா கைக்கடிகாரத்தை பார்த்துக் கொண்டாள். இந்த நேரத்தில் வேளச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த அந்த பறக்கும் ரயிலில் இங்கொன்றும் அங்கொன்றுமாக ஐந்தாறு பேர்கள் மட்டுமே இருந்தார்கள்.

கல்பனாவுக்கருகில் அமர்ந்திருந்த ஒரு வாலிபன் கையில் இருந்த ஃபோனில் ஆழ்ந்திருந்தான் .எதிரே முக்காடிட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த ஒரு பெண்மணி அடுத்த ஸ்டேஷனில் இறங்க ஆயுத்தப் பட்டுக் கொண்டிருந்தாள். ஒரு சாயம் போன புடவை அதையே தலைக்கு முக்காடாகவும் போட்டுக்கொண்டு ஒரு கிழிந்த பையை எடுத்துக்கொண்டு இறங்கிய அவளை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. வண்டி நின்றதும் இறங்கிய அந்த பெண் திடீரென்று ஜன்னல் புறமாக குரல் கொடுத்தாள்.
” அம்மா ஒரு கீரை கட்டு வாங்கி என் காலுக்கு அடியில வச்சிருந்தேன். அந்த மறந்துட்டேன். அதை கொஞ்சம் எடுத்து கொடுக்குறீங்களா” என்று.

கல்பனா குனிந்து கீரை கட்டு உள்ள பையை எடுக்க முயலும் போது வாலிபன் சடார் என்று அவள் கையில் இருந்து அந்த பையை பறித்து தானே ஜன்னல் அருகில் சென்று அந்த பெண்ணிடம் கொடுத்தான்.
அந்தப் பெண் அவனிடம் கோபமாக சீறினாள். “நான் அந்த அம்மாகிட்ட தானே கேட்டேன். உன்கிட்டயா கேட்டேன்? பொம்பளன்னா ஒடனே பல்லிளிச்சிக்குனு வந்துருவீங்களே” என்றாள் .

அதற்குள் வண்டி வேகம் எடுத்து புறப்பட்டு விட்டது. கல்பனாவும் அந்த இளைஞன் ஏன் அப்படி செய்தான் என்று புரியாமல் அவனை சற்று முறைத்து பார்க்க, உடனே அந்த வாலிபன் பதில் சொன்னான்.
” அம்மா உங்களுக்கு தெரியாது .இப்ப இது ஒரு நூதனமான திருட்டு. ஏதோ ஒன்றை சீட்டுக் கடியில வச்சுட்டு எடுத்துக் கொடுங்க என்று இறங்கியதும் சொல்ல வேண்டியது. நீங்க எடுத்து குடுப்பீங்க இல்ல? அப்ப சட்டென்று உங்கள் கழுத்து செயினை அறுத்துக் கொண்டு ஓடி விடுவார்கள் .இரவு நேரங்களில் நடைபெறும் புது மாதிரியான திருட்டு இது,” என்றான். கல்பனாக்கு தூக்கி வாரி போட்டது. வாயை மூடிக்கொண்டு திருவான்மியூர் வந்ததும் இறங்கி விடுவிடு என்று நடந்தாள். இந்த புதுவிதமான திருட்டை கேள்விப்பட்ட பயத்தில் உடம்பு இன்னமும் நடுங்கிக் கொண்டிருந்தது

2 Comments on “நூதனத் திருட்டு/ரேவதி பாலு”

Comments are closed.