பார்வை ஒன்றே போதுமே/குமரன்

அவள் ஐயர்லான்டிலிருந்து இந்தியாவிற்கு கிளம்பும் போதே அவள் பெற்றோர்கள், நண்பர்கள் பயமுறுத்தினார்கள். இந்தியாவில் நடந்த நிர்பயா என்ற வழக்கை அவளிடம் விவரித்தார்கள்.
ஆனால் அதை அவள் பொருட்படுத்தவே இல்லை. எந்த ஊரில்தான் பெண்களை மரியாதையாக பார்த்தார்கள்?

மரியாவிற்கு இந்தியா செல்ல வேண்டும் என்ற அவா இன்று நேற்றல்ல. அவள் சிறு வயதில் இருந்தே உள்ளது. அவள் நண்பி குமாரி, அவளுடன் ஐந்தாவது கிரேட் வரை படித்தவள், தமிழ்நாட்டில் உள்ள கோவில்களையும் நல்லாட்சி புரிந்த மன்னர்களை பற்றி விவரித்த செய்திகளை கேட்டதிலிருந்தே அந்த ஆசை மொட்டாகி இப்போது மலராகி விட்டது. அந்த மலர் மனதில் இருந்து உதிர்வதற்கு முன் பார்த்து விட வேண்டும் என்ற உறுதி அவளிடத்தில் ஏற்பட்டது.

மரியாவிற்கு இப்போது வயது 24. இளமையின் வனப்பும் முகத்தின் அழகும் இவளைப்பார்ப்பவர்களை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும்.

ஐயர்லாண்டு நாட்டின் தலைநகரம், டூப்ளின் நகரம், ஒன்றும் கலாசாரத்தில் பின் தங்கியது அல்ல. புதினங்கள், நாடகங்கள் மற்றும் கவிதைகளுக்காக புகழ் பெற்ற நகரம். ஆகவே இன்னொரு கலாச்சாரம் செறிந்த தமிழ்நாட்டிற்கு வர அவள் மிகவும் விரும்பினாள். ஆக, அதற்கான ஏற்பாடுகளை செய்து இதோ கிளம்பி விட்டாள். டூப்ளீன் ஏர்போர்ட்டில் இருந்து கிளம்பியாகி விட்டது.

சென்னை ஏர்போர்ட் வந்து சேர்ந்து இமிகிரேஷன் முடிந்து வெளியே வந்து அவள் முன்பதிவு செய்த காரில் ஏறினாள். கார் டிரைவர், ராஜன், ஒரு இளைஞன். மிக அமைதியாக மதுரைக்கு கார் ஓட்டிக்கொண்டிருந்தான். கண்ணாடியில் அவளைப்பார்த்து கொண்டே ஒட்டிக்கொண்டிருந்தான். மரியாவிற்கு “என்ன இவன் கண்ணாடியில் பார்த்துக் கொண்டேயிருக்கிறானே” என்று எரிச்சலாகவும் பயமாகவும் இருந்தது.

அவள் ஐந்து நாளைக்கு மொத்தமாக முன்பதிவு செய்திருந்தாள். “ஐயோ இவனோடு ஐந்து நாள் ஓட்ட வேண்டுமே ” என்ற எண்ணமே அவளுக்கு அயர்ச்சியாக இருந்தது. முகத்தை தன்னிடம் இருந்த துணியினால் மூடிக்கொண்டாள்.

ராஜன் ஒரு ஹோட்டலின் முன் நிறுத்தி கதவை திறந்து விட்டான்.
“மேடம், இங்கு டாய்லெட்ஸ் நன்றாக இருக்கும். உணவும் உங்களுக்கு பிடித்த மாதிரி ஓரளவு கிடைக்கும்” என்று நல்ல ஆங்கிலத்தில் கூறினான். அவளுக்கு சரியான நேரத்தில் வண்டியை நிறத்தினானே என்று நிம்மதி வந்த்து.

அவள் அவனையும் சாப்பிட அழைத்த போது நாசுக்காக மறுத்தான். “என் அம்மா எனக்காக காலை உணவு கொடுத்திருக்கிறாரகள்” என்று கூறினான்.
மரியா உள்ளே இருக்கையில் அமரந்து சாப்பிடும் போது எல்லோரும் அவளை பார்வையாலேயே மொய்த்து கொண்டிருந்தார்கள். தலையை திருப்பிய போது லவுஞ்சிலிருந்து ராஜன் அவளையே பார்த்து கொண்டிருப்பதை பார்த்தாள். எரிச்சலாக இருந்தது அவளுக்கு.

அவள் பக்கத்து டேபிளில் இருந்தவன் திடீரென்று அவள் எதிரில் உட்காரந்து எங்கிருந்து வருகிறாய், எங்கே போகிறாய், அது இது என்று அசடு வழிய ஆரம்பித்தான் . அவளுக்கு , அவன் கேட்ட விதமும் அவன் வாயிலிருந்து வந்த மதுவின் வாடையும், சிறிய பயத்தை கொடுத்தது. அப்போது ராஜன் அவள் அருகே வந்து “போகலாமா மேடம்” என்று அழைத்தான். உடனே இவளும் சரி தப்பித்தோம் என்று கிளம்பினாள்.

மதுரை வந்தவுடன் அவள் பதிவு செய்த ஹோட்டலில் ரூம் வரை வந்து விட்டு விட்டு ,” கதவை யாரென்று தெரிந்து கொண்டு பிறகு திறவுங்கள் ” என்று கூறி சென்றான்.

இப்படியே அவள் சென்ற மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் மற்றும் அனைத்து இடங்களிலும் அவள் கூட நிழல் போல் தொடர்ந்து சென்றான். அவளுடைய கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்தான்.

மெல்ல மெல்ல அவளுக்கு அவனுடைய புத்திசாலித்தனமும், அக்கறையும் பரிவும் அவன் மீது நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்கியது.

இப்போது அவனிடம் சரளமாக பேச ஆரம்பித்தாள். கடைசியாக சென்னையை நெருங்கிய போது அவள் அவனுக்கு நன்றியை தெரிவித்து விட்டு “ஏன் வண்டியை ஓட்டும் போதும் மற்ற நேரங்களிலும் என்னையே முறைத்து கொண்டே இருந்தீர்கள்” “ஏன் என் அழகு உங்களை மயக்கி விட்டதா” என்று கேட்டாள்.

அவன் சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு மெதுவாக கூறினான்.
“உங்கள் அழகை நான் அழகாக மட்டுமே பார்த்தேன். ஆராயவில்லை. எல்லோருமே கெட்டவர்கள் அல்ல. உலகம் முழுதுமே நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள். அதில் எனது தேசமும் அடங்கும் .ஒரு ஆண் மகனுக்கு அழகான மனைவி அமைந்தால் மற்றவர்கள் முன்னால் பெருமையாக இருக்கலாம். ஆனால் மிகப்பெரிய கவலை வரும், இவளை எப்படி பாதுகாப்பது என்று. சிலருக்கு சந்தேகமும் வரும். வாழ்வில் நிம்மதியை விட பய உணர்ச்சியே மேலோங்கி இருக்கும். நான் உங்களையே பார்த்துக்கொண்டிருந்தது உங்களின் தேவைகளை அறிந்து கொள்ளவே அன்றி வேறு எதுவும் இல்லை மேலும் உங்களை யாரும் நெருங்காமல் இருக்கவே நான் பார்த்துக்கொண்டே இருந்தேன்” “தவறாகப் பட்டிருந்தால் மன்னிக்கவும்” உங்களை நன்றாக நடத்தும் பண்புமிக்க தைரியமான ஆண் மகன் கிடைக்க வாழ்த்துகள் ” என்றான்.

ஐயோ, இவன் பார்வை நமக்குத் தப்பாக பட்டதே என்று வெட்கப்பட்டாள் மரியா.

One Comment on “பார்வை ஒன்றே போதுமே/குமரன்”

Comments are closed.