
இமையம் க்ரியா ராமகிருஷ்ணனாலும், சுந்தர ராமசாமியாலும், காலச்சுவடாலும் முன்வைக்கப்பட்டவர். பெருமாள் முருகன் காலச்சுவடாலும், கண்ணனாலும் முன்வைக்கப்பட்டவர். அவர்கள் வழியாகவே இவர்களின் முன்னேற்றமும் அங்கீகாரமும் நிகழ்ந்தது.
அவர்களின் நூல்களை தரமான வெளியீடுகளாக கொண்டுவர, சர்வதேச அளவில் அவர்களை கவனப்படுத்த க்ரியா ராமகிருஷ்ணன், சுந்தர ராமசாமி, காலச்சுவடு எனும் ஆளுமைகளும் அமைப்புகளும் எடுத்த முயற்சி சாதாரணம் அல்ல. எல்லாவகையிலும் இமையத்துக்கும் பெருமாள் முருகனுக்கும் நிகரான படைப்பாளியான கண்மணி குணசேகரன் என்ன அடைந்தார் என்பதுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளவும்.
க்ரியா , காலச்சுவடு இரு அமைப்புகளுக்கும் மாறிவரும் உலகச்சூழலில் ‘மாற்று எழுத்து’ எனப்படும் தலித், பழங்குடிகள் மற்றும் பிற எழுதப்படாத சமூகங்கள் பற்றிய எழுத்தின் வணிகமதிப்பு தெரிந்திருந்தது. ஆகவே இமையமும் ,பெருமாள் முருகனும் அவர்களுக்கு தேவைப்பட்டனர். அவர்களுக்கு லாபமும் ஈட்டித்தந்தனர். ஆனால் அவ்வாறு முன்கணிப்பதும், அதைப் பயன்படுத்திக் கொள்வதும்தான் ஒரு வணிக நிறுவனத்தின் திறன். ஆகவே அதை அவர்களின் வெற்றி என்றே நினைக்கிறேன். தமிழுக்கு அவர்கள் அதனூடாக ஒரு பங்களிப்பை ஆற்றினர் என்றும் மதிப்பிடுகிறேன்.
சுந்தர ராமசாமியைப் பொறுத்தவரை இந்த வணிகக் கணிப்பு அவரிடம் இல்லை. அவருக்கு உகந்த அழகியலாக இருந்தது இயல்புவாதம்தான். 1990களில் அவருக்கு அடுத்த தலைமுறையில் நான், கோணங்கி,சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் மிகுபுனைவு, மையமற்ற எழுத்துமுறை என சென்றபோது சுரா இயல்புவாத எழுத்தை முன்வைக்கும் பொருட்டு இமையத்தை ஆதரித்தார்.
க்ரியா, காலச்சுவடு ஆகியவை பிராமண அமைப்புகள். சுந்தர ராமசாமி, க்ரியா ராமகிருஷ்ணன், காலச்சுவடு கண்ணன் ஆகியோர் பிராமணர்கள். இவர்களை நான் நன்கறிவேன். இவர்களில் சுந்தர ராமசாமியை என் ஆசிரியராக எண்ணுகிறேன். க்ரியா ராமகிருஷ்ணன் மேல் எனக்கு மதிப்பு இல்லை. ஆனால் இவர்கள் எவரையும் பிராமணியச் சாதிமனநிலை கொண்டவர்கள் என நான் நினைக்கவில்லை. சுந்தர ராமசாமி அதற்கு நேர்எதிரான மனநிலை கொண்டவர் என்றே மதிப்பிடுகிறேன்.
இமையம், பெருமாள் முருகன் போன்றவர்கள் நான்கொண்டுள்ள இந்தவகையான மதிப்பீடுகள் கொண்டவர்களல்ல. அவர்கள் மனிதர்களை சாதியை மட்டும்கொண்டே மதிப்பிடும் அரசியலையே இதுவரை வெளிப்படுத்தியவர்கள். பிறப்பால் பிராமணர்கள் அனைவருமே அவர்களுக்கு ‘பார்ப்பனர்கள்’ மட்டுமே. ஆனால் ‘பார்ப்பன’ அமைப்புகளிடமும் ‘பார்ப்பனர்’களிடமும் சரண் அடைந்து அவர்களைப் பயன்படுத்திக் கொண்டு மேலே செல்ல எந்த தயக்கமும் அவர்களுக்கு இருக்கவில்லை.
அவ்வாறு மேலே சென்றபின் அடுத்த நிலைக்கான தாவலில் இன்று முந்தைய காலகட்டத்தை நிராகரித்தாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இமையமும் பெருமாள் முருகனும் முன்வைக்கும் அண்மைக்கால ’அதியதிதீவிர’ பார்ப்பனிய எதிர்ப்பின் ரகசியம் இதுவே. அது மனுஷ்யபுத்திரனின் பாதை. அவருக்கு முன் சல்மா சென்று வென்ற பாதை. இனி பலரும் செல்லவிருக்கும் பாதை. வாழ்க என்று மட்டுமே சொல்லவிழைகிறேன்.
சில காலம் முன்பு இமையம் அசோகமித்திரன் பற்றி மிகக்கடுமையான ஓர் மதிப்பீட்டை முன்வைத்தார். அது இலக்கிய மதிப்பீடு அல்ல, சாதியக் காழ்ப்பு மட்டுமே. அதைப்பற்றி என்னிடம் கேட்கப்பட்டபோது நான் சொன்னது இதுவே ‘இமையத்திற்கு இப்போது ஒரு பார்ப்பனிய எதிர்ப்பு முகம் தேவையாகிறது. ஓர் எளிய இலக்கை தெரிவுசெய்கிறார். அவ்வளவுதான்.
- ஜெயமோகன்
