
யானை
கடலைப் போல,
வானத்தைப் போல,
பார்க்கப் பார்க்க,
பார்த்துக் கொண்டேயிருக்க
பார்த்துச் சலிக்காத
யானை.
பிரம்மாண்ட உருவம்.
கர்வமின்றி, கருணையும்,
சோகமும் நிரம்பிய
குட்டிக் கண்கள்.
விசிறியென வீசியபடியே,
கேட்டுக் கொண்டேயிருக்க,
அகன்ற காதுகள்.
வழுவழுவென நீண்ட தந்தம்.
வளைந்தும், நெளிந்தும்,
குழைந்தும், அசைந்தபடியே
தும்பிக்கை.
கோயில் தூண்களென
பேருருவம் தாங்கும்
மாற்றி மாற்றி
வைத்தபடியான கால்கள்.
எழுதவோ,வரையவோ
கை தூண்டும்
கரும்பலகையெனப்
பரந்த மேனி.
பார்த்தது போதும் வாவென
தாய் இழுத்துச் செல்ல,
திரும்பித் திரும்பிப்
பார்த்தபடி போகும்
குழந்தையை,
பார்த்திருக்கும் யானையின்
குட்டிக் கண்களிலும் சோகம்
என்றுதான் தோன்றுகிறது.
மதுவந்தி.
