தங்கேஸ் கவிதை

ஒரு முன்னறிவிப்பில்லாத விண்வெளிப்பயணத்திற்கு

 விரையும் ஒருபறவை 

சிறகுகளை  மறந்து வைத்து விட்டு வந்து விடுகிறது 

தன் கூட்டிலேயே

மெளனங்கள் சூழ்ந்த வெற்றிடத்தில்

திகைத்து நிற்கும் போது

எதிரில் தென்படுகிறது 

வார்த்தைகளை மறந்து வைத்து விட்டு வந்த ஒரு கவிதையின் உருவம்

வார்த்தைகளற்ற கவிதையும்

சிறகற்ற பறவையும் சிநேகிதம் கொள்ள

பொதுவான வெளிெயன்று எதுமில்லை

கடலாய் பரவியிருக்கும் 

அடர் மெளனத்தை தவிர

தன்னை பிறிதொன்றில் அடையாளம்

கண்டு கொள்வதென்பது

பிறிதொன்றை தனக்குள் முழுமையாய்

அனுமதித்தல் என்ற வண்ணம்

ஒன்றையொன்று தழுவி இன்புறும் வேளையில்

பேரண்டங்களையெல்லாம் 

தன் வயிற்றில் உடையாத நீர்க்குமிழிகளாக உருட்டி விளையாடும்

மகாமெளனம் 

இரண்டையும் தன்னுள்

விழுங்கி விடுகின்றது பேதமற

தாமதமாய் உடலை சுமந்து வந்து சேர்ந்த

சிறகுகளும் வார்த்தைகளும்

அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கின்றன

யுகம் யுகங்களாக