
அது ஒரு சனிக்கிழமை மாலை
மடிக்கணினியில் மூழ்கிகிடக்கிறேன்.
இன்னும் ஒயவில்லை என் அலுவல்கள்.
கடை வீதி வரை சென்றுவருவதாய்
சொல்லிவிட்டு மனைவியும் மகளும்.
வேலை …வேலை …. சற்றே கண்ணயர்ந்தேன்
“அந்த அறையில் யாரும்மில்லை “
என்ற தலைப்பொன்றைத் தந்து விட்டு
எப்பொழுதும் போல் மறைந்து கொண்டது எனது கவி மனம்.
சட்றென்று விழித்துக் கொண்டேன்.
ஆசுவாசபடுத்திக் கொண்டு மெல்ல மனனம் செய்கிறேன்
அந்த தலைப்பை என் மனதில்.
கண்மூடித் தியானிக்கிறேன்
என் வீட்டில் யாரும் இல்லாத அறை ஒன்றை
அது அம்மா தனது கடைசி கால வாழ்வை கழித்த அந்த அறை….
பத்துக்கு பத்து அதன் அளவு
ஒரு சாய்வு நாற்காலி,
மாதுளம் செடி எட்டி பார்க்கும் ஜன்னல்
அதற்கு அருகில் ஒரு மரக்கட்டில்
அதற்கு கீழ் மலம் ஜலம் கழிக்கும் டப்பா
தலைமாட்டில் இரண்டடுக்கு கொண்ட
ஒரு மர ஸ்டூல்
அதன் மேல் தளத்தில்
மாத்திரை டப்பா
போனவுடன் கூடிய டையரி ஒன்று
உயரமான பிளாஸ்க்
கிழ் தளத்தில்
அந்த வார ஆனந்த விகடன், குமுதம்
அவற்றின் கீழ் ஜெயகாந்தன் அல்லது பாலகுமாரன் கதை புத்தகங்கள்
அன்றைய செய்தி தாள்
மற்றும் சீரான இடைவெளில் கேட்டுக் கொண்டே இருக்கும் உயிர்ப்பை உணர்த்தும் அம்மாவின் தொண்டை கமறல் சத்தம் .
கவிதைக்காக மீண்டும் அந்த அறையை திறந்து பார்க்கிறேன் ஒரு முறை
இப்பொழுது முற்றிலும் மாறி மகளின் படிப்பறையாகி இருக்கிறது
கதவை மெல்ல சாத்திவிட்டு
வரவேற்பறையில் வந்தமர்ந்து
கவிதை எழுத முயல்கிறேன்
ஒரு வெள்ளை தாளில் தலைப்பிடுகிறேன்
“அந்த அறையில் யாரும்மில்லை”
முதல்வரி எழுத முயன்ற போது
ஏதோ சத்தம் கேட்கிறது வீட்டுக்குள்ளிருந்து
மீண்டும் எழுத முயல்கிறேன்
இப்பொழுது அம்மாவின் அறையிலிருந்து சத்தம் கேட்க்கிறது
கமறல் சத்தம்
பதறி எழுகிறேன்
மெல்ல அம்மாவின் பழைய அறையை
திறந்து பார்க்கிறேன்
அதற்க்குள் வாயில் கதவை யாரோ தட்டுகிறார்கள்
அந்த அறையில் யாரும்மில்லை
