
வேப்ப அரச புங்கையென
பலவகை மரங்கள் சூழ்ந்த பள்ளிவளாகத்தில்
ஒதுக்கப்பட்டிருந்தது
ஒரு வகுப்பிற்கு ஒரு மரம்
மரத்தின் பெயர்களை சொல்லி
வகுப்புகளை அழைக்கும் பழக்கம்
எல்லோருக்கும் இருந்தது
நான்குப்பக்க சுவர்களில்லை
வெயில்மழையை மறைக்கும் கூரையில்லை
இருந்தாலும் சொல்லிக்கொண்டோம்
வகுப்பறை என்று
எத்தனையோமுறை
சண்டையில் இடிந்து விழுந்திருக்கிறது
பூமிபூஜை போடாமலே நானும் நண்பனும்
சேர்த்துக்கட்டிய மண்வீடு
ஒவ்வொரு மாணவனும்
ஒரு குறளை வாசிக்க
வருகைப்பதிவேட்டில்
பெயரில்லாத பறவையின் குரலும்
சேர்ந்துகொள்ளும் எங்களுடன்
கண்முன்னே நிற்கிறது
கணிதப்பாடவேளையில்
நான்கு மாணவர்கள் கைபிடித்து
அழைத்துவந்த கால்முளைத்த கரும்பலகை
சுருண்டு இருந்த உலகவரைபடத்தை
தூக்கிநிறுத்த சமூகஅறிவியல் ஆசிரியரின்
ஒப்புதலுக்கு காத்து நின்ற
வளர்ந்த இரண்டு மாணவர்கள்
மணிஓசை இல்லாமலே
அவ்வப்போது மாணவர்களுக்கு
இடைவேளையை பரிசளித்த
காக்கைகள்
நீர் மூலக்கூறு உருவாவது பற்றி
வேதியியல் ஆசிரியர் சொன்னதை கவனிக்காமல்
மரத்திலிருந்து உதிர்ந்தப்பூவினைவைத்து
தாவரவியல் படித்த மாணவர்கள்
தேர்வுநாட்களில் மழைவரவேண்டி
மனதிற்குள் யாகம் வளர்த்த மாணவர்கள்
வேப்பமரத்தின் கீழ் கற்றக்கல்வி
இன்றும் இனிக்க
அமர்ந்து படித்த அத்தனை மரங்களும்
போதிமரங்களானது வாழ்க்கையில்
காற்றும் தந்து கற்றும் தந்த
மரங்களைக்காண
பால்யகால நண்பர்களுடன்
ஊர்த்திரும்ப
மரங்களிருந்த இடத்தில் உருவாகியிருந்த
கட்டிடங்களின் சுவர்களில் வரைந்திருந்தது
மரக்கன்றுகள் நடும் மாணவர்களின் ஓவியம்

Miga arumaiyana kavidhai !👏👏👌
காற்றும்தந்து கற்றும்தந்த மரங்கள்!!👏👏🙏
அருமை!!!பள்ளி நாளை நினைவூட்டியது.இதம்!!!