அமெரிக்காவின் தேசியப் பறவை கழுகு/Boston Bala

அமெரிக்காவின் தேசியப் பறவை கழுகு. அந்தக் கழுகைப் போலவே நாலைந்து போலிப் பறவைகள் உண்டு,

கழுகைப் போலவே உலா வரும். Prairie Falcon (Falco mexicanus), Red-Tailed Hawk (Buteo jamaicensis), Turkey Vultures (Cathartes aura), Black Kite (Milvus migrans) என நால்வரை உடனடியாக நினைவு கூறலாம். பருந்து, ராசாளி, கூளி, சுவணம் எனத் தமிழில் சொல்கிறார்கள்.

தூரத்தில் இருந்து பார்த்தால் எல்லாம் பெரிதாக இருக்கிறது. இறக்கையைப் பெரிதாக விரித்து பிரும்மாண்டமாகப் பறக்கிறது. கூகை குழறும் என்பார்கள்; கழுகு வீருடுகிறது என்பார்கள்; இரண்டும் முன்னே பின்னே கேட்காதவருக்கு அனைத்தும் கத்தல் சப்தம்.

உயரப் பறக்கும் கழுகிற்கும் இராஜாளிக்கும் என்ன வித்தியாசம் என்று இப்பொழுது ஏன் ஆராய வேண்டும்?

ஏன் என்றால், தலைவர் ஏதோ கழுகு, காகம் உவமேயம் சொல்லியிருக்கிறார் அல்லவா!?

கங்க பத்திரம் ஓர் கோடி கை விசைத்து அரக்கன் எய்தான்;
கங்க பத்திரம் ஓர் கோடி கணை தொடுத்து இளவல் காத்தான்;
திங்களின் பாதி கோடி, இலக்குவன் தெரிந்து விட்டான்
திங்களின் பாதி கோடி தொடுத்து, அவை அரக்கன் தீர்த்தான். 6.18.109 (௧௦௯)
–கம்பராமாயணம், நாகபாசப் படலம்–இந்திரஜித், இலக்குவன் போர்.

பொருள்:– இநத்திரஜித், கழுகின்‌ சிறகுகளையுடைய அம்புகள்‌ ஒரு கோடியைக்‌ கைகளால்‌ தொடுத்து விரைந்து எய்தான்‌ ; இளவலாகிய இலக்ஷ்மணனும்‌ கழுகின்‌ சிறகுகளையுடைய ஒரு கோடி அம்புகளைத்‌ தொடுத்து அவ்வம்புகளைத்‌ தடுத்தான்‌ ; அரைச்சந்திரன்‌ போன்ற முகப்பினையுடைய கோடி அம்புகளை இலக்குவன்‌ ஆராய்ந்து இந்திரசித்தின்மேல்‌ விட்டான்‌ ; இந்திரசித்தும்‌ அரைச்சந்திர அம்புகளை கோடி தொடுத்து அவ்வம்புகளை அறுத்தான்‌.

குறிப்பு: -கங்கம்‌ – கழுகு. பத்திரம்‌ – சிறகு. கழுகின்‌ சிறகுகள்‌ பொருந்திய அம்புகள்‌ கங்கபத்திரம்‌ எனப்பட்டன. பாதிமதி போன்‌.ற முகப்பினை உடைய அம்புகள்‌ என்பார்‌, ’திங்களில்‌ பாதி’ என்றார்‌. இதுகாறும்‌ இந்திரசித்து விடுத்த அம்புகளை மட்டுமே அறுத்துக்‌ கொண்டிருந்த இலக்குவன்‌ இப்போது திங்களிற்‌ பாதியை ஒத்த அம்புகளை இந்திரசித்தின்மேல்‌ விடுத்தான்‌ என்றவாறு. தீர்த்தல்‌ – அழித்தல்‌.

விக்ரம் படத்தில் கமல் விதவிதமானத் துப்பாக்கிகளை வைத்து சுட்டுத் தள்ளுவார். அவருக்கு சளைக்காமல் ஜெயிலரில் ரஜினியும் ‘மனிதன்’ போல் ரகரகமாக குண்டு போடுகிறார்.

நடுவில் எதற்கு கம்பராமாயணம் என்று கேட்கிறீர்களா?

1993ல் ’கலைஞன்’ படத்தில் இந்திரஜித் என்னும் கதாபாத்திரத்தில் கலைஞானி நடிக்கிறார். அந்தக் கலைஞன் விக்ரமில் விட்ட அம்புகளை சமாளிக்க இளவல் ஜெயிலரில் எய்கிறார். இதைத்தான் அன்றே கம்பர் பாடியிருக்கிறார். அந்த கங்கபத்ரம் = பின் நுனியில் கழுகின் சிறகுகள் பொருத்தப்பட்ட அம்புகளை (பத்ரம் என்றால் சிறகு) இசை வெளியீட்டு விழாவில் குறிப்பால் உணர்த்துகிறார் இரஜினி.

அதெல்லாம் இருக்கட்டும்? படத்தை ரசித்தேனா? மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கிறதா? தமிழ் சினிமாவின் மைல் கல்லா? ரஜினியின் நடிப்பிற்கு சிகரமா? அடுத்த ஆர்.ஆர்.ஆர். மாதிரி ஆஸ்காருக்கு அனுப்பலாமா?

அகாடெமி விருதுகளில் புதியத் தலைப்பாக ‘செயற்கையாக தானியங்கியாக உருவாக்கிய உயிர் போன்ற இயக்கம் காட்டும் படங்களுக்கான விருது’ ஒன்றை வழங்கினால், அது நிச்சயம் ஜெயிலருக்குக் கிடைக்கும்!