சுதந்திரம்/செ.புனிதஜோதி

ஒவ்வொரு
சுதந்திரதின
நன்நாளில்
நினைவுகள்
கரம்பிடித்து
அழைத்துச்செல்கிறது
பள்ளி மைதானத்திற்கு.

இந்தியநாடு என்நாடு
இந்தியமக்கள் எம் மக்கள்
பாடலுக்கு
இறுக்க ஆடையைக்கட்டி
ஆடிக் கொண்டிருக்கிறாள்
நிலையை அறியாமல்

மறைந்த
விடுதலை தலைவர்களைப்
பற்றி
மேடையில் ஒப்பித்துக்
கொண்டிருக்கிறான்
கரன்சி மந்திரமென
அறியாமல்

ஆரஞ்சு மிட்டாய்
கரையக்கரைய
வெயில் ஒழுக,ஒழுக
பசுமரத்தாணியாய்
நிலைப்பெற்ற
கொண்டாட்டங்களை
மீண்டும் எண்ணிப்பார்ப்பதில்,
பூ பூக்கும் இளமைக்குள்
சென்று திரும்புவதில்
எங்கள் சுதந்திரங்கள்
பட்டொளிவீசி பறக்க
அனுமதி அளித்துள்ளனர்.