குடிமகனின் ஒருநாள்/அனங்கன்

வீட்டில்வந்து கொடுத்தார்கள்
அவனிடம் கொடிகட்டச்சொல்லி.
“காசு கொடுப்பீர்களா…”என்றான்.
தலையில் அடித்துக்கொண்டு
போனார்கள்.

தொடர்விடுமுறையில் வேலை இல்லை…
அவனுக்கு
கைநடுங்குகிறது.
கொடிகொடுப்பதற்குப்பதிலாய் காசு
கொடுத்திருக்கலாம்.
இன்றொருநாள் தியாகிகளைப்பற்றி
பேசுகிறார்கள்….நாங்கள் கூட
பலவகையில் தியாகிகள்தான்…
அவனுக்கு
சிரிப்புவருகிறது.

“காசுவாங்காமல்”
எந்த ஜனநாயகக்கடமையாற்றியும்
அவனுக்குப் பழக்கமில்லை.

விடுமுறைகள் “இருப்பவர்களுக்கு”
கொண்டாட்டமாய் இருக்கிறது.
கூட்டம்கூட்டமாய் வாகனங்களில்
பறக்கிறார்கள்.

எங்காவது சோறுபோட்டு”கட்டிங்”
கொடுத்தால் …
எந்தக்கொடியையும் தூக்கிப்பிடிக்க
அவன் தயார்தான்.

கள்ளச்சந்தையில் சரக்குவிற்கும் இடத்தை
தேடிப்போனான்…
இனாமாய் யாரிடமாவது
வாங்கிக்குடிக்க..
அவன் போல்தான்
அங்கு பெரும்பாலும்.

வயிறுபசித்தது…
கொடியால்
வயிற்றைக் கட்டிக்கொண்டான்….
எதுவுமே நடக்காமல் இரவு
கடந்துபோனது.

One Comment on “குடிமகனின் ஒருநாள்/அனங்கன்”

Comments are closed.