மெய்வருத்தம் பாரார்/பிரபு மயிலாடுதுறை

நள்ளிரவைத் தாண்டியிருந்த நேரத்தில் சென்னை-தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் எழுப்பிய பேரொலியும் தடதடப்பும் ஆனந்த நடராஜனின் உறக்கத்தைக் கலைத்தது. தனது சட்டைப்பையிலிருந்து ரோலக்ஸ் கடிகாரத்தை எடுத்து நேரத்தைப் பார்த்தார். ரயிலில் பாதை விளக்குகள் மட்டும் எரிந்து கொண்டிருந்த நிலையில் எண்கள் மட்டுமே கண்களுக்குத் தெரிந்தன. வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தார். வினாடி முள் சீராக சுழன்று கொண்டிருந்தது. அதன் சுழற்சியை மனம் எங்கோ அதிர்வாக உணர்ந்தது.   உலோகம் உருவாக்கப்படும் அதிர்வு. மனம் ஒரு கணம் பதறி துடித்தது.  நேரம் இரண்டு முப்பது. கடிகாரத்தை பையில் வைத்துவிட்டு தனது படுக்கை இருக்கையில் இரண்டு முறை புரண்டு படுத்தார். புரள்வதன் மூலம் மனநிலை மாறும் என நம்பினார். எதிர்ப்பக்கம் உறங்கிக்கொண்டிருந்த பேத்தியைக் கண்டார். அவளுக்கு, அடுத்த நாள் சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழாவில் நடன நிகழ்ச்சி. மெல்லிய சந்தன நிறப் போர்வையால் உடல் முழுவதையும் முகத்தையும் சேர்த்து போர்த்தி ஆழமான உறக்கத்தில் இருந்தாள். மருதாணி இடப்பட்டிருந்த பாதத்தின் மேற்புறம் மட்டும் கண்ணுக்குத் தெரிந்தது. பொற்பாதம் என்ற சொல் மனதில் எழுந்தது. மீண்டும் மீண்டும் அச்சொல் ஒலித்தது. உறக்கத்துக்குள் ஆழத் துவங்கினார்.
மதுராந்தக நல்லூரிலிருந்து சிதம்பரம் வருவது அதுவே முதல் முறை என்பதால் எல்லாமே புதிதாக இருந்தது. வீட்டில் தேவாரத்தில் ஓயாது ஒலிக்கும் தில்லைச்சிற்றம்பலம். வகுப்பு ஆசிரியர்கள் பேச்சில் எப்போதும் வெளிப்படும் வார்த்தையாக சிதம்பரம்.  கிராமத்திலிருந்து சினிமா பார்த்து வருபவர்கள் கூறும் தியேட்டர்களின் பெயராக சிதம்பரம்.    அம்மாவின் கனவு என்னை  அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியப் பணிக்கு அனுப்ப வேண்டும் என்பது. அம்மாவுக்கு சிதம்பரம் என்றாலே அண்ணாமலை பல்கலைக்கழகம்தான்.   மகன் உத்தியோகத்துக்கு வந்து குடும்பப் பொறுப்பை பார்க்க வேண்டும். ஊரை விட்டு வெளியே கூட செல்ல முடியாத அளவுக்கு எதுவாக இருந்தாலும் யோசனை. உணவுக்கு குறைச்சலில்லை. அதைத் தவிர அத்தனையுமே குறைச்சல்தான்.
அப்பாவிடம் பணம் மட்டும்தான் இல்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஊரில் இருந்த ஒரு மிராசுதார் குடும்பம் சொத்துபத்துகளை வந்த விலைக்கு விற்றுவிட்டு பட்டணத்தோடு போய் குடியேறி காண்ட்டிராக்ட் வேலை செய்து வந்தார்கள். அவர்கள் பராமரித்து வந்த சிவன் கோயிலுக்கு ஒரு வேலி நிலத்தை எழுதி வைத்து அதன் பராமரிப்புக்காக அப்பாவின் தாத்தாவை நியமித்து விட்டு பூஜைகளைச் செய்ய ஓர் அந்தணர் குடும்பத்தை ஏற்பாடு செய்தார்கள். ஆலய பாராவிற்கு ஒரு குடும்பம். 
அந்த ஒரு வேலி நிலத்தின் வருமானத்திலிருந்து அம்மூன்று குடும்பங்களும் மூன்று தலைமுறைக்கு மேலாக ஜீவித்திருந்தன. ஆயிரம் பேருள்ள கிராமம். சிவன் கோயில். திடலுடன் சேர்ந்த திரௌபதி அம்மன் கோவில். இரண்டு பிள்ளைமார் தெருக்கள். குடியானவர்களின் தெருக்கள். ஊர் எல்லையின் துவக்கத்திலும் ஊரின் முடிவிலும் இருக்கும் சேரிகள். ஊரில் பிறந்து அதன் எல்லைக்குள்ளேயே பெரும்பாலும் வாழ்ந்து வருடத்துக்கொரு முறை சிதம்பரம் தேரைப் பார்த்தால் பெரும் மகிழ்ச்சி அடைந்து பட்டணம் போய் வருபவனை மாமனிதனாக நினைத்து வாழும் மக்கள்.
அப்பா காங்கிரஸில் இருந்தார். எங்கள் வீட்டின் ஃபோட்டோக்கள் அனைத்தும் பயந்த முகத்துடன் வெளிறிப் போய் வெறித்துப் பார்த்தபடி இருக்கும். தாத்தா பாட்டியின் ஃபோட்டோ. அம்மா அப்பாவின் கல்யாண ஃபோட்டோ. கோயிலுக்கு நிலம் எழுதி வைத்தவரின் ஃபோட்டோ. காந்தியின் ஃபோட்டோ மட்டும் சிரித்தபடி இருக்கும். முன்னால் நீட்டிக் கொண்டிருக்கும் தாடை. கண்ணாடிக்குப் பின்னால் இருக்கும் கண்ணிலும் பீறிடும் சிரிப்பு. சிரிப்பால் ஏற்படும் உடல் குலுங்கல் கூட புகைப்படத்தில் பதிவானதுபோல் தோன்றும். வெள்ளாடையை உடல் மேல் போர்த்தியிருப்பார். சிரிப்பு. பொக்கை வாய் சிரிப்பு. தன்னைக் காண்பவர்களைக் கண்டு சிரிப்பு. பார்ப்பவர்களைத் தொத்திக் கொள்ளும் சிரிப்பு.
ஊர்க்காரர்களுக்கு அப்பா ஒரு தேவனைப் போல.  ஊரின் எல்லா விஷயங்களுக்கும் அவரிடம்தான்ஆலோசனை. நிலப்பரிவர்த்தனை, பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்படும் சிக்கல்கள், மாரியம்மன் கோவில் திருவிழா ,சிவன் கோயில் விவகாரங்கள், கலெக்டரை சென்று பார்ப்பது எல்லாம் அப்பாவின் வேலை.  தெளிவான மனிதராகத்தான் அப்பா இருந்தார்.  சின்ன ஊரும் கோவிலும் ஊர் மனிதர்களும்தான் வாழ்க்கை என்று இருந்து விட்டார். அவர் கையிலும் குடும்பத்திலும் காசு என்பது ஒட்டவில்லை. அவர் கவனத்திலும் அது இல்லை. அம்மாவுக்கு கவலையும் கனவுகளும் இருந்தன.
ஒருமுறை சிதம்பரத்துக்கு வந்த முதலமைச்சரை கிடையாய் கிடந்து ஊருக்கு அழைத்து வந்து விட்டார் அப்பா. ஆஜானுபாகுவான கன்னங்கரிய மனிதர். எங்களுக்கெல்லாம் ஒரு மனிதரின் கரங்கள் இவ்வளவு நீளமாக இருக்க முடியுமா என்று வியப்பு. சலவைக் கஞ்சியின் மொரமொரப்பு வெளிப்படும் கதராடை. நிற்பதில் நடப்பதில் விரைவைக் காட்டக்கூடிய தன்மை. ஊருக்கு வந்ததுமே கேட்டார்.
“இங்கே ஸ்கூல் எங்க இருக்குண்ணேன்?”
“ஐயா!இந்த ஊர்ல ஸ்கூல் இல்லங்கய்யா. திண்ணைப் பள்ளிக்கூடம்தான் இருக்கு.ஸ்கூலுக்கு நாலு மைல் போகணும்ங்க ஐயா”.
“இங்க உள்ள பிள்ளைகள் எப்படி படிக்கும்ணேன். இங்க மிராசுதார் யாரு”.
ஊரின் பெரிய பண்ணை பவ்யமாக வந்து நின்றார்.
“ஸ்கூலுக்கு இடம் கொடுங்க. அது பெரிய புண்ணியம். மத்த ஏற்பாட்டை கலெக்டரை பார்க்கச் சொல்றேன்”.
வேண்டுகோளாகவும் இல்லாமல் கட்டளையாகவும் இல்லாமல் முதலமைச்சர் கூறி முடித்தார்.
“அய்யா சொல்ற படியே செஞ்சிடறோம்”.
“உங்க காசைப் போட்டு ரேடியோ வாங்கி வைங்கண்ணேன். தில்லியில என்ன நடக்குது மாஸ்கோவில என்ன நடக்குது நியூயார்க்ல என்ன நடக்குதுன்னு நம்மூர்க்காரனுக்கு தெரியணும்னேன்”.
முதலமைச்சர் வந்து சென்ற சில மாதங்களில் ஒரு துவக்கப்பள்ளி உருவானது. பெரிய பண்ணை ஊருக்கு நடுவாந்தரமாக இருந்த புஞ்சை மனையை அரசாங்கத்துக்கு தானமாக கொடுத்தார். அப்பா சிதம்பரத்தில் இருந்த தனவான்களிடம் பேசி மேஜை பெஞ்ச் வாங்கிப் போட்டார். வீட்டில் சும்மா இருந்த பெண் குழந்தைகள் கூட படிக்க வந்தன.

ரேடியோ மாரியம்மன் கோவில் திடலுக்குப் பக்கத்தில் இருந்த வீட்டில் வாங்கி வைக்கப்பட்டது. காலையில் வானொலியில் வந்தே மாதரம் ஒலிக்கும். அதன் பின்னர் மாநிலச் செய்திகள்.
காலை 7.15 ஆகாசவாணி தில்லியிலிருந்து ஒலிபரப்பாகும் செய்திகள். மாலை 6.30 செய்திகள். இரவு 7.15 தில்லி ஒலிபரப்பு செய்திகள். மனிதக்குரல் ஒரு கருவியில் அவர்கள் ஊரிலேயே கேட்பது பெரும் ஆச்சரியம். மக்கள் கூடி நிற்பர். அன்று தொடங்கிய செய்தி கேட்கும் பழக்கம் இப்போதும் தொடர்கிறது. பொது ரேடியோவின் விளைவால் ஆர்வமும் ஆவலும் ஏற்பட்டு மெல்ல சிலர் சொந்தமாக வாங்கினர். இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம். எப்போதும் ஒலிக்கும் திரையிசை. பாடல்களின் வழியாக உருவாக்கிக் கொள்ளும் உலகம். பெண்கள் பாடல்களின் வழியாக சொற்களின் வழியாக இசையின் வழியாக கற்பனையான அவர்களுக்குப் பிடித்தமான உலகுக்குள் சென்று கொண்டிருந்தனர். ஆண்களின் பிரியமும் தோழமையும் திரைப்பாடல்களில் சாத்தியமாயிருந்தது ஊர்ப் பெண்களின் பெருவியப்பு. வீடும், சமையலறையும், தொழுவமும், கிராமக் கோயிலும் மட்டுமே புற உலகம் என்றிருந்த நிலையில் மாற்றத்தை ரேடியோவிலிருந்து வரும் பாடல்கள் வழியாகவே கனவு கண்டனர்.
நினைவு தெரிந்த நாள் முதல் அம்மா புத்தகமும் கையுமாகத்தான் இருப்பாள். கல்கி, கணையாழி, தீபம், ஆனந்த விகடன் இதழ்கள் வாசித்துக்கொண்டே இருப்பாள். அண்டை வீட்டுப் பெண்கள்,நடவுப் பெண்கள் எல்லாரும் கதை கேட்பார்கள்.
‘நினைவு த்தகத்தையே வச்சுக்கிட்டிருக்கீங்க. நம்ம வாழ்க்கை இந்த ஊருக்குள்ள தான். அப்படி என்னதான் படிச்சீங்களோ!’
“புத்தகம் படிக்கிற நேரத்திலயாவது ஊர் வம்பு வந்து சேராம இருக்கும்ல. எல்லாமே சரியா இருக்கற ஒரு இடம் உலகத்துல இருக்கு. அதை நாம கதையிலதான் படிக்கிறோம். அது கதைன்னு தெரிஞ்சாலும் அப்படி ஒரு இடமா என்னைக்காவது ஒரு நாள் நாம இருக்கற இடம் மாறும்னு நம்பிக்கை வருதுல்ல.”
அம்மாவுக்கு எப்போதுமே நம்பிக்கை அதிகம். நான் மூத்த பிள்ளை. எனக்கு அடுத்து மூன்று தங்கைகள். தம்பி இளைய பிள்ளை. ஒரு பள்ளி ஆசிரியை போல் எப்போதும் சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருப்பாள். இராமாயணம், மகாபாரதம், நாயன்மார் கதை, ஆண்டாள் கதை, பாரதி பாடல்கள், காந்தி கதை, முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர். அம்மா கதைகளால் ஆன ஓர் உலகில் நாம் வாழ்கிறோம் என நம்பவைத்து விடுவாள். அல்ஜீப்ரா, ஜியோமெட்ரி, கணித தேற்றங்கள், இலக்கணக் குறிப்புகள் என கிராமத்துக் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்துக்கொண்டு மானசீகமாக பள்ளி ஆசிரியையாகவே வாழ்ந்தாள். கோலம் போடுவது, தோரணம் சீவுவது, மலர் அலங்காரம் என பல விஷயங்களை பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சொல்லித் தருவாள். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மிக மெல்லிய வேறுபாட்டின் கோடு ஒன்று இருந்தது. மௌனப் போராட்டம் இல்லாத மனித உறவு உண்டா?
எஸ்.எஸ்.எல்.சியில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சிப் பெற்றேன். வீடு, மாட்டுக்கொட்டகை, வயல், கோயில், திடல், திண்ணைப் பள்ளி, பள்ளிக்கூடம் ஆகியவையே நான் புழங்கிய இடங்களாக இருந்திருக்கின்றன. அப்பாவுக்கு சினிமாவில் ஆர்வம் இல்லை. எனவே தியேட்டருக்கு வந்ததில்லை. அப்பாவுடன் முதல் முறையாக சிதம்பரம் வந்தேன். வீதிகள் அவ்வளவு பெரிதாக இருக்க முடியும் என்பது நம்ப முடியாததாக இருந்தது. மாட்டு வண்டிகளே அபூர்வமான எங்கள் ஊருக்கு அண்மையில் பேருந்துகள் அடிக்கடி சாலைகளில் செல்வதைப் பார்த்தபோது பயந்தே போய் விட்டேன். தில்லை ஆலயத்தின் கோபுரங்கள் வானத்தைக் கையால் தொடும் முயற்சிபோல் இருந்தன. கீரை விற்பவர்கள், காய்கறி வியாபாரிகள், பால்காரர்கள், குதிரை வண்டிக்காரர்கள், ரிக்ஷாக்கள், சைக்கிளில் பேப்பர் போடுபவர் ஆகியோரை ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அப்பா ரயில் நிலையத்துக்கு அழைத்துப் போனார். அங்கே இருந்த பெஞ்சில் உட்கார வைத்தார். அது ஒரு மரத்தின் நிழலில் அமைந்திருந்தது.
“தம்பி! நீ இங்கேயே இரு. இப்ப மாயவரம் போகும் ரயில் வரும். அதுல சீர்காழி வரைக்கும் போய் நண்பர் ஒருத்தர்ட்ட ஒரு லெட்டர் வாங்கிட்டு வந்துடறேன். ஸ்டேஷனுக்குப் பக்கத்துலதான் அவர் வீடு. அடுத்த ரயிலுக்கு இங்க வந்துடுவேன். மணி இப்ப ஏழு. நான் ஒன்பதரை மணிக்கு வந்திடுவேன்.”
தெருபோல நீளமாக இருந்த ரயில் வந்தது. கருப்புப் புகை முன்புறத்திலிருந்து மேல்புறமாக வெளியே சென்று கொண்டிருந்தது. அது எழுப்பும் சத்தம் உற்சாகமாகவும் கிலியாகவும் இருந்தது. என்னையும் அழைத்துப் போனால் என்ன என்று நினைத்தேன். அப்பாவிடம் சொல்ல முடியாது. அவர் சொல்வதை கேட்டுக் கொள்வதே பழக்கமாகவும் ஆகி விட்டது. வண்டி போனவுடன் மனதில் ஒரு நிம்மதியும் வந்தது. ‘அப்பாடா’ என்றிருந்தது.
இந்த வாரம் ஆனந்த விகடன் வாசித்தீர்களா? என விகடன் தாத்தா புத்தகக் கடையில் போவோர் வருவோரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். பல பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் அடுக்கி இருந்தன. தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்தேன். கணையாழி, அமுதசுரபி, கல்கண்டு என பல சஞ்சிகைகள். புத்தகக் கடைக்குப் பக்கத்தில் உணவு விடுதி. பூரியின் மணமும் உருளைக்கிழங்கு குருமாவின் மணமும் ஒரு மயக்கத்தையும் பசியையும் கொண்டு வந்தது. பிரம்பில் செய்த பெரிய விளையாட்டு மட்டைபோல ஒன்றின் நடுவே பூட்டு போட்டு பூட்டியது போன்ற அமைப்பு ஒரு அறையில் மாட்டியிருந்தது. வெள்ளை மேல் சட்டையும் கால் சட்டையும் அணிந்த மனிதர் அந்த அறையில் இருந்தார். மக்கள் வருவதும் அமர்வதும் கடப்பதுமாயிருந்தனர். வேர்க்கடலை, கொய்யாப்பழம் விற்கும் பெண்கள் அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தனர். ஒரு மிகப் பெரிய கடிகாரம் வெள்ளைப் பின்புலத்தில் கருப்பு முள் கொண்டதாய் நேரத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. அது மணி அடிக்குமா என்று மனதில் சந்தேகம் ஏற்பட்டது. நிமிட முள் சீரான தாளத்தில் நிமிடத்துக்கு ஓரொரு அலகாக எடுத்து வைத்துக்கொண்டிருந்தது.
தனியர்களாகவும் குழுக்களாகவும் மாணவர்களும் பொதுமக்களும் வந்துகொண்டும் சென்றுகொண்டுமிருந்தனர். நால்வர், ஐவர் அல்லது எழுவர் என மாணவர்கள் கூட்டாக இருந்தனர். பல்வேறு குடும்பங்கள் ரயிலுக்காகக் காத்திருந்து பிளாட்ஃபாரத்தில் அமர்ந்திருந்தன. அவர்களின் குழந்தைகள் இருப்புப்பாதையைப் பார்க்க தளத்தின் விளிம்பு வரை சென்றனர். குழந்தைகளின் அம்மாக்கள் அங்கே போகக்கூடாது என விடுத்த எச்சரிக்கையைக் குழந்தைகள் பொருட்படுத்திக்கொள்ளவில்லை. அப்பாக்களிடம் சலித்துக்கொண்டு சொன்னார்கள். சிலர் அதட்டினர்; சிலர் காதில் வாங்காமல் வெறித்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் அம்மாக்கள் எரிச்சலடைந்து கத்தினர்.
வேடிக்கையின் சுவாரசியம் முடிந்து மனம் நிலை கொள்ளாமல் குழம்பத் துவங்கியது. இவை எதுவுமே வேண்டாம் என ஊருக்குச் சென்று விட்டால் என்ன. அங்கே ஏதாவது செய்வதற்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஊரைத் தாண்டாத ஒரு பாதுகாப்பான வாழ்க்கை வாழ்ந்து விட்டால் போதுமே! அம்மாவுக்கு எதையாவது நினைத்து விட்டால் அதை எப்படியாவது பிறரைச் செய்து வைத்துவிட வேண்டும். அப்பாவிடம் மட்டும் அம்மா நினைப்பது எதுவும் நடப்பதில்லை. அவரிடம் அவர் ஏற்காத ஒன்றை யாராலும் கட்டாயப்படுத்தி விட முடியாது. நினைவு தெரிந்த நாள் முதல் அம்மாவால் கதையாக என் எதிர்காலம் சொல்லப்பட்டிருக்கிறது. கிராமத்திலேயே இருந்து விடக்கூடாது; பல ஊர்களுக்குச் செல்ல வேண்டும்; உன் மீது தான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். வீட்டை நீதான் முன்னேற்ற வேண்டும். வார்த்தை ஒவ்வொன்றிலும் தன் உணர்வை மெல்லிய சோகத்தை ஏக்கத்தை ஏற்றிச் சொல்லும் அம்மாவுக்கும் எதுவும் பேசாமல் தான் நினைக்கும்படி மட்டுமே எல்லாம் நடக்க வேண்டும் என எதிர்பார்க்கும் தந்தைக்கும் இடையில் சிக்கிக்கொண்ட ஒருவனாக என்னை எண்ணிக்கொண்டேன். பிளாட்ஃபாரத்தில் இருக்கும் கடிகாரத்தைப் பார்த்தேன். பெரிய முள், சிறிய முள். அப்பாவும் அம்மாவும் என எண்ணிக்கொண்டேன். ஒவ்வொரு நிமிடத்திலும் நிகழும் முள்ளின் நகர்வு ஒரு திடுக்கிடல் போலவோ ஓர் அதிர்வைப் போலவோ தோன்றியது. அப்பாவின் அருகாமையை மனம் விரும்பத் தொடங்கியது. ரயில் வருகிறதா என எதிர்பார்க்கத் தொடங்கினேன். கொல்லுப்பட்டறையில் கொதி உலோகம் மீது ஒத்திசைவாய் விழும் அடிகளின் காட்சி மனதில் எழுந்தது. நான் அடித்து நொறுக்கப்படுவதுபோல; அனலில் உருகி உலோகத் திரவமாய் கொதிப்பது போல.
இரண்டு ரயில்கள் வருவதற்கான அறிவிப்பு வந்தது. இந்த இடத்தை விட்டு சென்றுவிட வேண்டும் என்று தோன்றியது. எங்காவது சென்றுவிட்டால் அப்பா தேடுவார்; பின்னர் கோபமாக திட்டுவார் என்பதால் எங்கும் செல்லாமல் அப்பாவைத் தேடும் கண்களுடன் அங்கேயே அமர்ந்திருந்தேன். அப்பா சில நிமிடங்களில் வந்து விடுவார் என மனதின் ஒரு பக்கமும் அவர் வரவே போவதில்லை என்று மனதின் இன்னொரு பக்கமும் சொல்லிக்கொண்டிருந்தது. வட திசையிலும் தென் திசையிலும் செல்லும் இரு ரயில்களும் சென்று விட்டன. அப்பா வரவில்லை. ஊர்க்காரர்கள் யாராவது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று பார்த்தேன். எல்லாமே புதிய முகங்கள். மெல்ல வந்த வழியை ஞாபகப்படுத்திக்கொண்டு சென்று விடலாமா என்று யோசித்தேன். புறத்தில் நிகழும் காட்சிகள் எதுவும் மனதுக்குள் செல்லவில்லை. அப்பா அப்பா அப்பா என்ற சொல்லே உள்ளுக்குள் இறைஞ்சலாக எதிர்பார்ப்பாக ஆத்திரமாக ஒலித்துக்கொண்டிருந்தது. காற்று புகையாகவும் வெயில் கொதி எண்ணையாகவும் நான் அதில் வதைபடுபவனாகவும் தோன்ற ஆரம்பித்தது. சில மணி நேரங்களில் ஒரு ரயில் வருவதற்கான அறிவிப்பு மணியைப் பணியாளர் ஒருவர் அடித்தார். ரயில்வே ஊழியர்கள் தெய்வத்துக்கு முழுக்காட்டி தீபம் காட்ட ஆலயப் பணியாளர் மும்முரமாய் செயல்படுவதுபோல செயலாற்றத் தொடங்கினர். ரயில் வந்தது. அப்பா இறங்கி வருவதை தூரத்திலேயே பார்த்து விட்டேன். எழுந்து நின்று கொண்டேன்.
“தம்பி! சீர்காழியில நண்பர் வீட்டில காத்திருந்தேன். அவர் வெளியில் ஒரு வேலையா போயிருந்தார். நேரமானதால சொன்ன ரயில்ல திரும்ப முடியல. அடுத்த ரயில்ல வந்தேன்.”
“நான் பயந்துட்டேன்.”
“எதுக்கு பயம்? யாரைப் பார்த்து பயம்? எல்லா இடத்துலயும் நமக்கு வேண்டியவங்கதான் இருக்காங்கன்னு நினைக்கணும். மனுஷங்க எல்லாரும் நமக்கு வேண்டியவங்கதான். சரியா?”
அப்பா என்னைக் கூட்டிக்கொண்டு ரயில் நிலையத்துக்கு வெளியே வந்தார். சில அடி தூரம் நடந்ததும் நான் ரயில் நிலையத்தைத் திரும்பிப் பார்த்தேன். மனதிற்கு அணுக்கமான இடமாகத் தோன்றியது. அங்கேயே இருக்க வேண்டும் என்று தோன்றியது. சிதம்பரத்தில் படித்தால் அடிக்கடி இங்கே வரலாம் என்று நினைத்தேன்.
அப்பாவுடன் ரயில் நிலையத்தையும் ரயில்வே கேட்டையும் தாண்டி பிச்சாவரம் சாலையில் நீண்ட தூரம் நடந்து சென்றேன். பொட்டலாகவும் சில இடங்கள் நஞ்சையாகவும் இருந்தது. இறுக்கமாக வேலியிடப்பட்டிருந்த ஒரு வீட்டின் படலைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தோம். சேவலும் கோழியும் புதிதாக எங்களைக் கண்டு அபயக் குரல் எழுப்பின. அங்கே இருந்த வாத்துகள் சிதறி ஓடாமல் கழுத்தை ஆட்டி எங்களைப் பார்த்தவாறு குரலின் கார்வையை அதிகரித்தன. ஆட்டுப் புழுக்கையின் நெடி அங்கே எங்கணும் பரவியிருந்தது. பிராணிகளின் குரல் மாற்றம் கண்டு ஒரு பண்ணையாள் எங்களை நோக்கி வந்தார்.
அப்பா அவரிடம், “ஜவஹர் தம்பியைப் பார்க்கணும். மதுராந்தகநல்லூரிலிருந்து வர்ரோம்,” என்றார்.
“அண்ணன் வந்துடுவாங்க. உள்ளே ஒக்காருங்க.”
பெரிய ஓட்டு வீட்டின் திண்ணையில் ஒரு பகுதி படிக்கட்டு அமைக்கப்பட்டு மேலேறிச் செல்லும் விதமாய் இருந்தது. ஒரு பெரிய மேஜை மீது புத்தகங்களும் காகிதங்களும் கோப்புகளும் கிரமமில்லாமல் கிடந்தன. நாங்கள் அமர்ந்திருந்த நாற்காலிக்கு மேஜையின் எதிர்புறம் இருந்த நாற்காலியின் மேலே ஒரு வயதான தாடிக்காரரின் படம் இருந்தது. அந்தப் படத்தை நான் கூர்ந்து பார்த்தேன். அவரது தாடியின் மீதுதான் முதலில் கவனம் இருந்தது. அவர் எதையோ ஆழமாக யோசிப்பவர் போல் இருந்தார். கோபமாக இருப்பவர் போலவும் தனக்குள் ஆழ்ந்தவராகவும் இருந்தார். அப்புகைப்படத்தைப் பார்க்க பார்க்க அவர் மனதுக்கு நெருக்கமானவராக ஆகிக்கொண்டிருந்தார்.
குள்ளமான குண்டான கண்ணாடி அணிந்த ஒரு மனிதர் சைக்கிளில் படலைத் திறந்து கொண்டு உள்ளே வந்து மீண்டும் படலை மூடி விட்டு திண்ணையில் இருந்த நாற்காலியில் நாங்கள் அமர்ந்திருப்பதைப் பார்த்து விட்டு எங்களை நோக்கி வந்தார். அங்கிருந்த வாத்துக்களும் கோழியும் ஆடும் சேவலும் சினேகமாக குரலெழுப்பி அவரைப் பின் தொடர்ந்தன.
அப்பாவிடம், “தோழர் வணக்கம். என்ன திடீர் தரிசனம். எப்பவுமே நீங்க இங்க வரப் போறீங்கன்னா தகவலை எடுத்துக்கிட்டு போஸ்டு கார்டு வந்துடுமே,” என்றார்
நான் அவருக்கு எழுந்து இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொன்னேன்.
அவரும் இரு கைகளையும் கூப்பினார். பிரியத்துடன் பார்த்தார்.
“என்னுடைய மூத்த மகன். ஆனந்த நடராஜன். எஸ்.எஸ்.எல்.சி பாஸ் செய்திருக்கிறான். பாலிடெக்னிக் சேர்ப்பதற்காக அழைத்து வந்தேன். இன்று அப்ளிகேஷன் வாங்கி நிரப்பி ஆஃபிஸில் கொடுத்துவிட்டு போகலாம் என்று வந்தேன். அப்படியே உங்களையும் அறிமுகம் செய்து வைக்கலாம்னு அழைச்சுட்டு வந்தேன்.”
“ஆனந்த நடராஜன். டான்ஸ் ஆடுறவன் சந்தோஷமாத்தானே இருப்பான். டான்ஸ் ஆடுற ராஜா வேற. அந்த டான்ஸைப் பார்க்கிறவன் எப்படி இருக்கான்னு யோசிக்கணும். இல்லையா?” என்றார் ஜவஹர்.
என் பெயருக்கு இவ்வளவு விளக்கம் தந்ததால் அவரை நான் மிகவும் விரும்ப ஆரம்பித்தேன். அவர் ஒரே நேரத்தில் அலட்சியமானவராகவும் பிரியம் கொண்டவராகவும் இருந்தார்.
“இந்த ஃபோட்டோ யாருடையது,” என்று கேட்டேன்.
அவர் ரொம்ப சந்தோஷமாகி விட்டார்.
“அவர் கார்ல் மார்க்ஸ். சாதாரண மனுஷன் சந்தோஷமா இருந்தாதான் மனுஷன் உருவாக்கின உருவாக்குற எந்த அமைப்புக்கும் அர்த்தம் இருக்கும்னு சொன்னவர். எல்லா மனுஷனுக்கும் எல்லா வாய்ப்பும் சமமா கிடைக்கிற ஒரு சிஸ்டத்தை கற்பனை செய்த பல பேர்ல ஒருத்தர்.”
அவர் தீவிரமா எதையோ யோசிக்கிற மாதிரி இருக்காரே. எங்க வீட்டில உள்ள ஃபோட்டோவில காந்தித் தாத்தா சிரிச்சுகிட்டே இருப்பார்.
அவர் என் கண்களை உறுதியாகப் பார்த்தார்.
“தாத்தா அனுபவஸ்தர் இல்லையா. பலவிதமான வாழ்க்கையைப் பார்த்தவர். பல நாடுகளில் வாழ்ந்தவர். மனுஷனோட நல்ல சுபாவத்தையும் கெட்ட சுபாவத்தையும் புன்னகையோடும் சிரிப்போடும் கடப்பவன் தான் மனுஷனுக்காக வேலை செய்ய முடியும்னு அனுபவப்பட்டவர். கோட்ஸே துப்பாக்கியால் சுட்ட போது கூட அவருக்கு வருத்தம் இருந்திருக்காது.”.
அவர் துக்கித்ததுபோல் இருந்தது. சில வினாடிகள் கனமான மௌனம் நிலவியது.
“அவரை ஏன் கொல்லணும்னு நினைச்சாங்க.”
“உலகத்துல அரசியல் பல ஆயிரம் வருஷமா இருக்கு. அதுக்குள்ள மன்னர்கள் இருந்திருக்காங்க. மகாராணிகள், இளவரசிகள் இருந்திருக்காங்க. தளபதிகள் இருந்திருக்காங்க. கொள்ளைக்காரர்கள் இருந்தாங்க. மத குருமார் இருந்தாங்க. படைவீரர்கள் இருந்தாங்க. பணக்காரங்க இருந்தாங்க. பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பின்னாலதான் உலகத்துல ஜனநாயகம்னு ஒரு விஷயம் பத்தி பேச்சு வந்தது. பிறகு அது பரவலாச்சு. அரசியலுக்கு உள்ள காந்தி சாதாரண மனிதர்களை அதிகமாககொண்டு வந்தார். சாதாரண மனுஷனின் வாழ்க்கைப்பாடுல இருக்கிற கஷ்ட நஷ்டமும் சுக துக்கமும்தான் அரசியல் யோசிக்க வேண்டிய விஷயம்னு சொன்னார் விவேகானந்தர்.” ‘என் நாட்டுல ஒரு நாய் உணவில்லாமல் இருந்தாலும் அதுக்கு உணவு கொடுக்கறது தான் என்னுடைய மதம்’னு சொன்னாரே அத அரசியலுக்கு கொண்டு வந்தவர் காந்தி. சாதாரண மக்களைப் புழு பூச்சியா நினைச்சவங்க அவங்க மேல அன்போ அக்கறையோ இல்லாதவங்கதான் காந்தியைக் கொன்னாங்க.
ஒரு மாமனிதன் கொல்லப்படுவது மகத்தான ஒருவனைக் கொல்ல நினைக்கும் வன்மம் ஆகியவற்றை நினைத்தபோது பேரச்சமாய் இருந்தது.
“மணி ரெண்டாகுது. இங்க எப்பவுமே கூட ரெண்டு பேருக்கு சோறு வடிச்சிருக்கும். யாராவது வந்துட்டும் போய்ட்டும் தான் இருப்பாங்க. யாரும் வரலைன்னா தண்ணி ஊத்தி வச்சு மறுநாள் பழையதா சாப்டிடுவேன். நீங்க சாப்டுட்டு பாலிடெக்னிக் ஆஃபிஸ் போய்ட்டு வாங்க.”
ஜவஹர் உணவு பரிமாறினார். அவர் ஊறுகாய் எடுக்க உள்ளே சென்றபோது அப்பாவிடம் ஜவஹர் அவர்களை என்னன்னு சொல்லி கூப்பிடணும்னு கேட்டேன். அப்பா அதை அவரிடம் சொன்னார்.
“தோழர்ன்னு கூப்பிடு. காம்ரேட்ன்னு கூப்பிடு. ஜவஹர்ன்னு வேண்ணாலும் சொல்லு. செயல்பாட்டில நாம எல்லாரும் இணைஞ்சிருக்கோம். ஒட்டு மொத்த லௌகிகமும் சேர்ந்து இணக்கமா இருக்கறதுதான். ஒருத்தன் தோழனா இருக்கும் போதுதான் அவனைப் புரிஞ்சுக்க முயற்சி செய்யறோம். அவன் மேல அக்கறைப்படறோம்.”
காம்ரேட் என்ற சொல் புதிதாகவும் ஈர்ப்பு மிக்கதாகவும் இருந்தது. உணவருந்தி விட்டு காம்ரேடின் சைக்கிளை எடுத்துக் கொண்டு பாலிடெக்னிக்குக்கு சென்றோம். பெரிய கேட், காம்பவுண்டு, தொடர் கட்டிடங்கள், காக்கி சட்டையும் பேண்டும் அணிந்த மாணவர்கள் என அங்கே கண்ட ஒவ்வொரு காட்சியும் மனதில் ஒரு கலக்கத்தை உண்டு செய்வதாய் இருந்தது. அலுவலகத்தில் பல மாணவர்கள் வரிசையில் நின்று சேர்க்கை விண்ணப்பம் வாங்கி அருகில் இருந்த பெஞ்சுகளில் அமர்ந்து நிரப்பிக் கொண்டிருந்தனர். அப்பா காலியாய் இருந்த வகுப்பறை ஒன்றின் பெஞ்சில் அமர்ந்து டெஸ்கில் வைத்து நிரப்பினார். நான் பக்கத்திலிருந்து வேடிக்கை பார்த்தேன். என்னுடைய கையெழுத்தைப் போடச் சொன்னார். நான் கையெழுத்து இட்டேன்.
“கையெழுத்து ரன்னிங் லெட்டர்ஸ்ல போடணும். இப்படி பேரை எழுதக்கூடாது.”
எனக்கு ஒன்றும் புரியவில்லை.
ஃபார்ம் எடுத்துக்கொண்டு ஒரு ஆசிரியரைப் பார்க்கச் சென்றோம். அவரிடம் அப்பா அறிமுகப்படுத்திக்கொண்டு ஃபார்மையும் தனது நண்பரிடம் வாங்கி வந்த கடிதத்தையும் தந்தார்.
“பையன் நல்ல மார்க் எடுத்திருக்கான். சிபாரிசுக்கு அவசியமில்லை. அப்ளிகேஷனை பெட்டியில் போட்டுட்டு போங்க. அட்மிஷன் கார்டு வீட்டுக்கு தபால்ல வரும்.”
காம்ரேட் வீட்டுக்கு வந்து சைக்கிளைக் கொடுத்துவிட்டு அப்பாவுடன் ஊருக்குத் திரும்பினேன். சிதம்பரத்தின் மீது விருப்பமும் விலக்கமும் கலந்தே இருந்தது. ஊரிலேயே இருந்து விடலாம் எனவும் சிதம்பரத்தில் அலைந்து திரிவது போலவும் கற்பனைகள் மாறி மாறி வந்தன. ஊரில் தெரிந்தவர்கள் எல்லாம் அட்மிஷன் பற்றி கேட்டார்கள். சிலர் ஏன் பி.யூ.சி சேரக்கூடாது எனக் கேட்டனர். அம்மாவுக்கு நான் தொழில்நுட்பம்தான் படிக்க வேண்டும் என்பதில் தீராத விருப்பம் இருந்தது. அப்பாவும் அதை வழிமொழிந்தார்.
சில நாட்களில் சேர்க்கை அட்டை வந்தது. பாலிடெக்னிக் கல்லூரியிலும் விடுதியிலும் சேர்ந்தேன். காம்ரேட் ஜவஹர்தான் லோக்கல் கார்டியன். விடுதி அறையில் நான்கு மாணவர்கள் தங்கியிருந்தோம். சபேசன், கோவிந்தன், மாரிமுத்து ஆகியோர் சக அறைவாசிகள். சபேசன் காட்டுமன்னார்கோவில் அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை விசாகப்பட்டினத்தில் அரசு மின்சார இலாகாவில் வேலை பார்த்தார். ஆங்கிலத்தை ஒரு மொழியாக பள்ளியில் படித்திருந்தாலும் தொழில்நுட்பத்தின் எல்லா பாடங்களையும் ஆங்கிலத்தில் படிக்க கிராமத்து மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டோம். ஆங்கிலம் என்பதை அவரிடம் சந்தேகம் கேட்டு சொல்லித் தரச் சொல்லி மனப்பாடமாக ஒப்பித்து கற்றுக் கொண்டோம். எல்லா தாளும் ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும் என்பதால் கடுமையாகப் படிக்க வேண்டியிருந்தது. கோவிந்தனுக்கும் மாரிமுத்துக்கும் சொந்த ஊர் திருவாரூர் அருகே புலிவலம். கிட்டத்தட்ட எல்லா மாணவர்களும் கல்விக் கட்டணம் செலுத்தவும் விடுதியின் மெஸ் கட்டணம் செலுத்தவும் கெடு விதிக்கப்படும்போது சிரமப்படுவர். வீட்டுக்கு கடிதம் எழுதுவர். வீட்டில் கையில் இப்போது பணம் இல்லை என்பார்கள். எப்போதும் பணம் பணம் என கேட்டால் என்ன செய்வது என்று திட்டுவார்கள். மாணவர்கள் திண்டாடிப் போய் விடுவர். ஒவ்வொரு மாதமும் கடப்பது என்பது பெரும்பாடாக இருந்தது. பெரும்பாலானோர் கேளிக்கையின் பக்கமே போக மாட்டார்கள். பட்டயம் வாங்கி விவசாயம் இல்லாமல் வேறு ஒரு உத்தியோகத்துக்குப் போனால் போதும் என்றிருப்பார்கள். அவ்வப்போது காம்ரேட் வீட்டுக்கு நண்பர்களோடு செல்வேன். வாசிக்க புத்தகங்கள் தருவார். மனிதன் உருவாக்கிய அனைத்துமே பரிசீலித்து சீர் செய்து முன்னெடுக்க வேண்டியவையே என்பார். படிப்பும் படிப்பால் பெறும் அறிவும் அறிவின் வழியே அடையும் அதிகாரமும் தான் ஏழைகளையும் சாதாரண மக்களையும் கடைத்தேற்றும் என்பார். அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. எப்போதும் யாராவது வந்துகொண்டு இருப்பார்கள். எல்லாவற்றையும் இழுத்துப்போட்டு செய்வார். எல்லா கட்சிக்காரர்களும் அவரிடம் வருவார்கள். விவாதிப்பார்கள். ஆலோசனை கேட்பார்கள். நிலத்திலிருந்த வந்த வருமானத்தை ஊருக்கே செலவு செய்வார். அவருக்காகச் செய்து கொள்ளும் செலவு என்பது புத்தகங்கள் வாங்குவது மட்டும்தான்.
முதலாண்டில் வருடத்தின் கடைசியில் தேர்வு நடைபெற்றது. செய்முறை சேர்த்து மொத்தம் 8 தாள்கள். எல்லா தாளிலும் தேர்ச்சி பெற வேண்டும். ஒன்றில் தவறினாலும் எல்லா தாளையும் திரும்பவும் அடுத்த வருடம்வரை காத்திருந்து எழுத வேண்டும். எங்கள் அறையில் சபேசன் ஒருவர்தான் தேர்ச்சி பெற்றார். கோவிந்தனும் மாரிமுத்துவும் மூன்று தாள்களில் தோற்றனர். நான் ஒரு தாளில் தோற்றேன். பெரும்பாலான மாணவர்கள் துக்கத்தால் அழுதனர். படிப்பைத் தொடர முடியுமா பெற்றோருக்குப் புரிய வைக்க முடியுமா என்பது பெரிய கேள்வியாக இருந்தது. இந்த வருடம் செலவு செய்த தொகை வீண்தானா என்பதுதான் தோல்வியடைந்த மாணவர்களின் பெரும்பாலான பெற்றோரின் கேள்வியாக இருந்தது. விடுதியின் அறையிலிருந்து விதிமுறைகளின்படி வெளியேற வேண்டும். கடைசி நம்பிக்கையும் இழந்து போன வெறுமையுடன் ஊருக்குப் புறப்பட்டனர். பறவைகள் அந்தியில் கூட்டையும் விருட்சம் வெட்டப்பட்டு வெறுமையாக்கப் பட்ட இடத்தில் திகைத்து அலறிப் பறக்கும் பறவைகளைப் போலானோம்.
நான் ஊருக்குத் திரும்பினேன். அம்மாவும் அப்பாவும் என் நிலையைப் புரிந்து கொண்டனர்.
“ஒரு பேப்பர்லதானே ஃபெயில் ஆயிட்ட. மத்த பேப்பர்ல நல்ல மார்க்தான் எடுத்திருக்க. அடுத்தப் பரீட்சைக்கு இன்னும் ஒரு வருஷம் இருக்கு. தினமும் எல்லா பாடமும் படி. சின்ன வயசில சந்திக்கிற இந்த தோல்வி ஒரு விதத்தில நல்ல அனுபவம் தான். நாளையும் பொழுதையும் வீணாக்காதே. இத ஒரு வாய்ப்பா பயன்படுத்திக்க. பணக் கஷ்டம் எப்பவும்தான் இருக்கு. பொறுப்பு உணர்ந்து நடந்துக்க.”
அம்மாவுக்கு எவ்வளவு பெரிய சிக்கலும் நாலு வாக்கியம் தான். அப்பாவும் வருத்தப்படாதே என்றார். ஊரில் இருப்பவர்கள் கேட்கும் கேள்விகள் எனக்கு எரிச்சலூட்டின. சில நாட்களில் காம்ரேடின் வீட்டுக்கு வந்து விட்டேன். அவர் கல்வி அமைச்சருக்கு தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வந்து தேர்ச்சி அடையாத பாடத்தில் மட்டும் மீண்டும் தேர்வு எழுதுவது போல் தேர்வுத் திட்டம் அமைப்பது கிராமப்புற மாணவர்களின் கல்விக்கு உதவுவதாக இருக்கும் என மனு அனுப்பினார். வரும் ஆண்டுகளில் அவரது கோரிக்கையைப் பரிசீலிப்பதாக அமைச்சர் தன் கைப்பட பதில் அனுப்பியிருந்தார்.
காலையிலும் மாலையிலும் படிப்பது. பகல் நேரத்தில் சைக்கிளில் சிதம்பரத்தைச் சுற்றி வருவது என்பது வாடிக்கையானது. நடராஜர் ஆலயம், தேரடி, தெற்கு வீதி குதிரை வண்டிகள், ரெயில் நிலைய பெஞ்சுகள், போட் மெயில் ரயில், அட்மினி பிளாக், அதில் உள்ள கடிகாரம் ஆகியவற்றை தினமும் சென்று வேடிக்கை பார்ப்பேன். காம்ரேடின் நூல் நிலையத்தில் இருந்த நூல்களை வாசிப்பேன். அவருடைய வயல் பணிகளில் அவருக்கு உதவுவேன்.
ஒரு மாலைப் பொழுதில் வாணியத் தெருவில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ஒரு பழைய பெரிய ஓட்டுக்கட்டிடத்தின் வாசலில் நிறைய சைக்கிள்கள் நின்று கொண்டிருந்தன. உள்ளே வழிபாட்டின் மணியோசை கேட்ட வண்ணம் இருந்தது. நான் சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே வந்தேன். அங்கே ஒரு சிறு ஆலயமும் காரியாலயமும் சற்று தள்ளி தங்கக்கூடிய அறைகளும் இருந்தன. கொல்லையில் இருந்த மாட்டுக்கொட்டகையும் கிணற்றடியும் கூடத்திலிருந்து பார்க்கும்போது தூரத்தில் தெரிந்தன. தீட்சிதர்கள் ஆறுமுகப் பெருமானுக்கு பூசனைகள் செய்து தீபத்தால் ஆராதித்துக் கொண்டிருந்தனர். அழகிய ரோஜாப்பூ நிறம்கொண்ட வட இந்தியர் ஒருவர் அங்கே இருந்தார். வெள்ளை வேட்டி அணிந்து தோளில் வெண் துண்டு போர்த்தியிருந்தார். வழிபாட்டில் பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். வழிபாடு முடிந்ததும் தீபத்தை ஒற்றி கண்ணில் வைத்துக் கொண்டோம். உணவருந்தி விட்டு செல்லலாம் என சொன்னார்கள். வாழை இலையில் எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளி சாதம், மா ஊறுகாய், தயிர்சாதம் ஆகிய உணவுகள் பரிமாறப்பட்டன. விரும்பி உண்டேன். பந்தி அறையின் ஏற்பாடுகளை அங்கே இருப்பவர்கள் கவனித்துக்கொண்டிருந்தனர். நான் சிறிது நேரம் இருந்துவிட்டு வந்து விட்டேன். அடுத்த சில நாட்களுக்கு அந்த இடமும் அங்கே இருந்த மனிதர்களும் நினைவில் இருந்துகொண்டே இருந்தனர். சில நாட்களுக்குப்பின் அங்கே சென்றேன். வாசலில் அன்று பார்த்த வட இந்தியர் நின்று கொண்டிருந்தார்.
“வணக்கம். என் பெயர் ஆனந்த நடராஜன்.”
“வணக்கம். தம்பி. நீங்க மூணு நாள் முன்னாடி வந்திருந்தீங்க இல்லயா.”
அவரது தமிழ் தெளிவாகவும் உச்சரிப்பு நூதனமாகவும் இருந்தது. உள்ளே அழைத்துச்சென்று அங்கேயிருந்த காரியாலயத்தில் உட்கார வைத்தார். திருச்செந்தூர் முருகனின் படமும் அலைகடல் கரையில் இருக்கும் செந்தூர் ஆலயமும் அழகிய ஓவியமாக இருந்தது.
“நீங்க சிதம்பரம் காரரா?”
“சிதம்பரத்துக்கு பக்கத்தில உள்ள மதுராந்தகநல்லூர். இங்கே பாலிடெக்னிக்கில் படிக்கிறேன்.”
“அப்படியா.”
நான் அவரைப் பற்றி கேட்டேன்.
“என் பெயர் விஸ்வநாத். காசி என்னுடைய சொந்த ஊர். மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் பி.ஈ படித்தேன். ராணுவத்தில் வேலை பார்த்தேன். பதினைந்து வருஷம் முடிந்ததும் ஊருக்கு வந்துட்டேன். காசியில் ரேடியோ விற்பனை செய்யும் கடை வச்சிருந்தேன். அங்கே குமாரசாமி மடத்தில் உள்ள தமிழ்த் துறவிகளுடன் பழக்கம் இருந்தது. குமரகுருபரர் மேல விவேகானந்தர் மேல ஈடுபாடு உண்டு. இந்தியா முழுக்க பல தடவை ரயில்ல சுத்தி இருக்கேன். சில மாசமா சிதம்பரத்துல இருக்கன்.”
“உங்க குடும்பம்.”
“காசியில அம்மா, அப்பா, அண்ணன், தம்பி எல்லாம் எங்க பூர்வீக வீட்டில் ஒரே குடும்பமா இருக்காங்க. அப்பா ரிடையர்டு ஹெட் மாஸ்டர். அண்ணன் வக்கீலா இருக்கார். தம்பி ரேடியோ வியாபாரத்தை பார்த்துக்கிறார். நான் திருமணம் செஞ்சுக்கல. நாடோடியா அலைஞ்சுட்டு இருக்கேன். வருஷத்துக்கு ரெண்டு அல்லது மூணு தடவை வீட்டுக்குப் போவேன். மத்தபடி பல இடமும் போவேன் வருவேன். இவ்வளவுதான் என்னைப் பத்தி சொல்ல இருக்கு. காசி மடத்தோட சிதம்பரம் காரியாலயம் இந்த இடம். வாங்க உங்களுக்கு எல்லா இடமும் காட்டறன்.”
மடத்தின் எல்லா இடத்துக்கும் அழைத்துச் சென்று காட்டினார். நான் எங்கள் கல்லூரியின் தேர்வு முறை பற்றியும் கிராமப்புற மாணவர்கள் கடினமான சூழ்நிலையின் விளைவால் பின்னடைவைச் சந்திப்பது பற்றியும் சொன்னேன். அவர் அக்கறையோடு கேட்டுக்கொண்டார். அவர் சில விஷயங்களை யோசிப்பதும் சிலவற்றைப் பரிசீலிப்பதும் சில முடிவுகளுக்கு வருவதும் அவர் முகத்தின் குறிப்புகளில் தெரிந்தது.
“ஆனந்த்ஜி! என்னால உனக்கும் உன் ஃபிரண்ட்ஸ்க்கும் ஒரு சில விஷயங்கள்ல உதவ முடியும். ஸ்ரீ காசி மடம் அதிபர் என்னை சிதம்பரம் மடத்தின் காரியாலய வேலைகள பார்க்கச் சொல்லியிருக்காங்க. படிக்கணும்னு நினைக்கற ஆனா பணக் கஷ்டம் இருக்கற பையன்க இங்க வந்திடுங்க. எங்களுக்கு மடத்தின் வேலைகள்ல உதவி செய்ங்க. நான் காலையிலும் மாலையிலும் உங்களுக்கு உங்களோட பாடத்தை சொல்லித் தரேன். நீங்க எல்லாரும் மடத்திலேயே தங்கிக்கொள்ளலாம். இங்க தினமும் யாத்ரீகர்களுக்கும் பக்தர்களுக்கும் இரண்டு வேளை சாப்பாடு போடுவாங்க. நாம இங்கய சாப்டிட்டு இங்கயே தங்கி இங்க உள்ள வேலையை செஞ்சுட்டு படிக்கவும் செய்யலாம்.”
பம்பரமாக சுழன்று வேலை பார்த்தேன். மாரிமுத்துவுக்கும் கோவிந்தனுக்கும் கடிதம் எழுதி வரச் சொன்னேன். பக்கத்து கிராமத்தில் இருந்த மாணவர்கள் வீட்டுக்கு நேராகச் சென்று பார்த்து விபரம் சொன்னேன். அவர்கள் நண்பர்களின் முகவரிக்கு கடிதம் எழுதினோம். சில வாரங்களில் இருபது பேர் சேர்ந்து விட்டோம். எல்லாருக்குமே காசி விஸ்வநாத் ஐயா மீது பெரிய மரியாதையும் பிரியமும் ஏற்பட்டது. அவரும் திருப்பனந்தாள் சென்று காசி மடத்தின் அதிபரிடம் விஷயத்தைச் சொல்லி ஒப்புதல் பெற்று வந்தார். ஒரு வளர்பிறை சஷ்டி தினத்தில் விஸ்வநாத் ஐயா வகுப்புகளை ஆரம்பித்தார்.
அவருடன் இருந்து தங்கிப் படித்த – சேர்ந்து பல வேலைகள் செய்த- அந்த ஆறு மாதங்கள் எங்கள் வாழ்க்கையின் வசந்தகாலப் பொழுதுகள். அந்நினைவுகளின் இனிமையையும் அந்நாட்கள் மீளாதா என்ற துக்கத்தையும் நாங்கள் ஒரு சேர இப்போதும் சுமக்கிறோம். வகுப்பு ஆரம்பித்த தினத்தன்று ஜவஹர் காம்ரேடும் வந்திருந்தார்.
விஸ்வநாத் ஐயாவின் அன்றைய பேச்சு எங்கள் மனதில் சாசனமாய் ஆனது.
“பிரியமானவர்களே! உங்களுடன் இருப்பது பெரிய சந்தோஷம் தருகிறது. எங்கோ தென்னிந்தியாவின் ஒரு கோடியில் பிறந்து தனது மொழியின் மாபெரும் கவிஞனாகவும் ஹிந்தி கவிஞர் துளஸிதாஸின் குருவாக இருந்தவரும் தென்னக சைவத்தின் பணியை காசியில் மேற்கொண்டவருமான ஸ்ரீகுமரகுருபரரின் மடத்தில் நாம் நம்மை மேம்படுத்திக் கொள்ளவும் நம்மால் சாத்தியமான பணிகளைச் செய்யவும் மடத்துக்கு உதவவும் கூடியிருக்கிறோம். இந்தியா சுதந்திரத்தை அனுபவிக்கத் துவங்கியிருக்கும் இக்காலத்தில் ஜனநாயக அரசின் வளையத்துக்குள் நாட்டின் அனைத்து பிரஜைகளையும் கொண்டு வர வேண்டிய கடமை கல்வி கற்ற சிந்திக்கக் கூடிய ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. பேதம் அறியாமையின் வெளிப்பாடு. ஒருங்கிணைத்தல்தான் ஞானிகளின் பாதை. பெரும்பாலான மக்களுக்கு கல்வியைக் கொண்டு சேர்த்தலே இப்போது நம் நாட்டுக்குத் தேவையான பணி. உங்களுக்கு உதவ எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பது தெய்வ சங்கல்பம் என்றே கருதுகிறேன்.
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்- செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்
என்ற குமரகுருபரரின் சொற்கள் நமக்கு எப்போதும் துணையிருக்கும்.”
இராணுவத்தில் இருந்தவர் ஆதலால் அன்றாடப் பணிகளைச் செய்வதில் பணியைத் திட்டமிடுதலில் ஒருங்கிணைப்பதில் இராணுவத்தின் பாணிகளை அறிமுகப்படுத்தினார். எல்லாவற்றிலும் சீரான ஒழுங்கு என்பது தான் ஐயாவின் வாழ்க்கை. அவரிடமிருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொண்டோம். வருடத்தின் கடைசியில் நடந்த பரீட்சையில் நாங்கள் அனைவருமே தேர்ச்சி பெற்றோம்.
விஸ்வநாத் ஐயாவுக்கு நாங்கள் ஒரு பெரிய சுவர்க் கடிகாரம் அன்புப் பரிசாக வழங்கினோம். அவர் எங்கள் வகுப்பு நடைபெறும் அறையில் கரும்பலகைக்கு அருகில் அதை மாட்டினார்.
ரெயில் நிலைய கடிகாரம் என் நினைவில் வந்தது.

(விருட்சம்  103 வது இதழ் – செப்டம்பர் 2017)

One Comment on “மெய்வருத்தம் பாரார்/பிரபு மயிலாடுதுறை”

  1. சிதம்பரத்தையும் குருபர்ர் மடத்தையும் கண் முன்னே கொண்டு வந்துள்ள கதை. கார்ல் மார்க்ஸ் பற்றிய விளக்க வரிகள் “சாதாரண மனுஷன் சந்தோஷமா இருந்தாதான் மனுஷன் உருவாக்கின உருவாக்குற எந்த அமைப்புக்கும் அர்த்தம் இருக்கும்னு சொன்னவர். எல்லா மனுஷனுக்கும் எல்லா வாய்ப்பும் சமமா கிடைக்கிற ஒரு சிஸ்டத்தை கற்பனை செய்த பல பேர்ல ஒருத்தர்.” அருமை. பாராட்டுகள்.

Comments are closed.