ஆரம்பப் பள்ளி/சீ. பாஸ்கர்

பள்ளிக்கூட முதல்மணி 
காதுகளில் புகுமுன்
மகிழ்ச்சியைத்தந்த மரத்தடி ஆட்டம்
வராதவனுக்கும் சேர்த்துசொன்ன 
வருகைப் பதிவு 
சிறுநீர் பாய்ச்சி வளர்த்த 
சின்னஞ்சிறு செடி
வீட்டுப்பாடம் முடிக்காத மாணவன்
மறைத்துவைத்த மூங்கில் குச்சி
வகுப்புத் தேர்விலிருந்து தப்பிக்க
வற்புறுத்தி வரவழைத்த வாந்தி
தற்காலிகமாய்த் தோன்றிய
தலைசுற்றல்

சத்துணவு வாங்கும் வரிசையில்
சகமாணவனோடு இட்ட சண்டை
ஆசிரியரையும் ஆயாவையும் 
ஏமாற்றி வாங்கிய இரண்டாம் முட்டை
ஆசிரியர் இல்லாத நேரங்களில்
வகுப்பறையில் துள்ளிக்குதித்த
மாணவர்கள்
“மான் ” அவர்கள்
பள்ளிக்கூட கடைசிமணி
காதுகளில் புகுந்த பின்
கும்பலோடு சேர்ந்திட்ட கூச்சல்

செய்த சேட்டைகள் அனைத்தும்
கை கட்டி வாய்மூடிக்கொண்டது
மாலைநேர டியூசன் எடுக்கும்
வகுப்புவாத்தியார் வீட்டில்