இருப்பிடச் சான்று/ஆர்க்கே

தூக்கம் விடுத்து எழுந்தபின்
ஒளிர்ந்து விழிக்கிறது கைபேசி.

படமும் வரிகளும் சேர
காலைக்கு முகமன் கூறுகின்றன
தினம் தினம்.

இரவு நன்கு உறங்கி எழுந்தோம்
இன்னும் உயிர்த்திருக்கிறோம்
என்பதன்
காணா, பேசா, விழையா
அகப்பாசத்தின்
வெளிப்பாடன்றோ
சிறியதாய் ஓரிரு வார்த்தைகளுக்குள்
நிகழ்ந்து விடுகிற
இந்த தகவல் பரிமாற்றம்.!

அவரவர் வாழ்க்கை
அவரவர் தினங்கள்
அவரவர் உலகம்
என்றான பின்
கைக்குள் வந்துவிட்ட
இந்த தகவல் கமண்டலத்தில்
நமக்குள்ளாகிவிட்ட
“எப்படி இருக்கே!?”
காவிரியின்
கையடக்க பிம்ப பிரதிநிதிதானே
இந்த
தொடுதிரை தொடர்
மின்மினி சேதிச் சங்கிலிகள்.!