ரிச்சியும் நானும்/விட்டல்ராவ்

என் இந்த வயதுக்கு காலையில் முதல் காரியமாய் தினசரி செய்தி இதழ்களில் புரட்டிப் பார்க்கும் விசயங்களில் காலமானார் பகுதியும் ஒன்று. தெரிந்தவர்களும் நெருக்கமானவர்களும் தினமும் இறந்துகொண்டே இருக்கும்போது எல்லோரது மறைவும் தினசரிகளில் வெளிவந்து விடுவதில்லை. மரண அறிவிப்புகளுக்கு பணம் செலுத்தவேண்டி இருப்பதாலும் வெகுசிலரே அதை செய்வார்கள். நமக்கு வேண்டியவர்களில் யாராவது போய்விட்டிருப்பார்களா? அவ்வாறு தெரிந்தவர்கள் காலமானதற்கு புகைப்படத்தோடு அறிவுப்பு வரும்போதெல்லாம் தேடிப்பிடித்து தொலைபேசியில் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவிப்பதையும் ஒரு கடமையாய் கொண்டிருப்பவன் நான். இம்மாதிரி சமயத்தில்தான் ஒரு நாள் அந்த மறைவுச்செய்தி என்னை சற்று ஸ்தம்பிக்க வைத்துவிட்டது.
சீனிவாச டாங்கேயின் மரணம்.
சீனிவாச டாங்கேயின் மரணச் செய்தியும் அவனது புகைப்படமும் வெளியாகியிருந்ததைக் கண்டு நான் எவ்வளவுக்கு துயரமுற்றேனோ, அதே அளவுக்கு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்த மற்றொரு தகவலைக் கண்டு ஆச்சரியமும் குழப்பமும் அடைந்தேன். டாங்கேயின் பிரிவில் ஆழ்ந்த துக்கத்தைப் பகிர்ந்து கொள்பவர்களாய் அவனது மனைவி, மகள், சகோதரியின் பெயர்களோடு அவர்களுக்கு சிறிதும் சம்மந்தமில்லாத ஒரு நபரின் பெயரும் அதில் கடைசியில் காணப்பட்டது.
ரிச்சர்டு பால் புஸ்ப துரைராஜ். சுருக்கமாய் ரிச்சி என்று எங்கள் வட்டத்தில் அழைக்கப்பட்டவன் பெயர். அது கடைசியாக இடம்பெற்றிருந்தது.
டாங்கே ரொம்ப ரொம்ப சின்னப் பையனாயிருந்தபோது அந்தப் பகுதியில் நானும் இருந்திருக்கிறேன். அவனை எங்களோடு சேரவேண்டாமென்று அவனுடைய அம்மா மிரட்டியதாய் அவனே எனக்குச் சொன்னான்.
நாங்கள் பெரிய பையன்கள், அசிங்கமானவர்கள், கெட்டவார்த்தைகள் பேசுபவர்கள், அடுத்த வீடுகளிலுள்ள மா, கொய்யா, பப்பாளி, பப்ளிமாஸ் கந்தமூல கனிவர்க்கங்களைக் களவாடுபவர்கள், எங்களோடு சேர்ந்தால் கெட்டுப்போய்விடுவான் என்றெல்லாம் அவனுடைய அம்மா எச்சரித்து எங்களோடு சேரக்கூடாதென்று கண்டித்து வைத்திருந்தாள்.
டாங்கே அழகான பையன். அவனைவிட மூன்று வயது அதிகமான அவனது அக்கா சோனு அவனை விட அழகு. அவர்கள் வீட்டில் பாட்டி ஒன்று உண்டு என்பது சொன்னால்தான் தெரியும். ஊமையும் செவிடுமான பாட்டி. வீட்டின் உள்ளுக்குள்ளேயே நடமாடி வருபவள். அவர்கள் எங்கே வெளியில் போவதென்றாலும் பாட்டியை வெளியில் போர்டிகோவில் விட்டு வீட்டை பூட்டிக்கொண்டுதான் போவார்கள். டாங்கேயின் அம்மா, அப்பா ஆங்கில சினிமாவுக்குப் போகும் நாட்களில், சோனு, சீனுவாஸ் இருவரையும் பாட்டியுடன் விட்டுவிட்டு போவார்கள். வீட்டை பூட்ட வேண்டிய அவசியமிருக்காது.
பன்னிரண்டிலிருந்து பதினாறு வயதான பையன்களைக் கொண்டதான எங்கள் வட்டம் கிரிக்கெட், கால்பந்து, கேரம் போன்ற ஆட்டங்களிலும் கூடி பேசி சிரித்து பொழுதுபோக்கும் சமயங்களிலும் ஆறே வயதான சீனிவாச டாங்கேயைச் சேர்த்துக் கொள்ளமாட்டோம். தெருவில் அவனோடு விளையாட அவன் வயதில் பிள்ளைகளே கிடையாது. எங்கள் வட்டத்தில் ரிச்சிக்கு முதிர்ச்சி அதிகம். பதினாறு வயதான அவனுக்கு துணிச்சலும் அதிகம். நாங்கள் தெருவில் விளையாடும்போதெல்லாம் டாங்கே, தன் வீட்டுக் கேட்டைப் பிடித்துக் கொண்டு ஏக்கத்தோடு பார்ப்பான். சில சமயம் கேட் திறந்திருந்தால் ஓடிவந்து எங்களுக்கு அருகாக நின்றபடி தன்னையும் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்பான்.
“போடா சின்னப் பசங்கள்லாம் வேணாம்,” என்று கத்துவான் ரிச்சி.
“அவங்களோட சேர்ரியா, இரு இரு, அம்மா வந்ததும் சொல்றேன்,” என்று உள்ளே இருந்து சோனு கத்தும்.
ஒருநாள் ரிச்சி, சோனுவின் குட்டைப் பாவாடையை குடைவிரித்துவிட்டான். அவன் கையை கடித்துவிட்டு சோனு ஓடிவிட்டது. வீட்டில் சொல்லவே இல்லை. ரிச்சியைக் கண்டால் பயம்.
ஒரு நாள் சோனு அழுதுகொண்டிருந்தது. என்னவென்று எனக்கு மட்டுமே தெரியும். ரிச்சி சோனுவை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டுவிட்டான்.
அவர்கள் வீட்டில் பேசுவது மராத்தி. ஒரு இழவும் புரியாது. சந்தோசமாக பேசிக்கொண்டிருப்பார்கள், சண்டை போடுவது போல இருக்கும். எங்களில் கோபுலு தெலுங்கு, குங்கன் மலையாளம். எல்லாரது தாய்மொழிகளையும் தெரிந்துகொள்ள ரிச்சி முயற்சிப்பான். எனக்கும் அவனுக்கும் அந்த அந்நிய மொழியை பேசக்கற்றுக்கொள்ள தோன்றினாலும் முதலில் அதிலுள்ள கெட்ட வார்த்தைகளையே தெரிந்துகொள்ள ஆசை ஏற்படும்.
“டேய், உங்க பேச்சில இதுக்கு என்னான்னு சொல்றது, அதுக்கு என்ன சொல்வீங்க என்று பச்சையாக கேட்டு சொல்லச் சொல்லுவோம். மலையாளத்திலும் தெலுங்கிலும் எல்லா கெட்ட வார்த்தைகளும் அறிந்துகொண்டிருந்தோம். கெட்ட வார்த்தைகளைத் தெரிந்து வைத்துக்கொள்ளும் உந்துதல் காரணமாகவே பிற மொழி ஞானம் பெற எத்தனிப்போம்.
“ஊகூம்… எனக்கு அதெல்லாம் தெரியாது. அதெல்லாம் எங்க வீட்டில யாரும் அதுமாதிரியெல்லாம் பேசமாட்டாங்க. எங்க பேச்சில இதுக்கெல்லாம் என்னான்னு தெரியாது என்று கெஞ்சுவான் டாங்கே.
“ஒதப்பேன்.”
“சாமி சத்தியமா.”
எப்படியோ ஒரேயொரு கெட்ட வார்த்தையைதான் வீட்டில் பேசும்மொழியில் டாங்கே எனக்கும் ரிச்சிக்கும் மட்டும் சொல்லிவிட்டான். அதை உச்சரிப்புப் பிழையோடு கெட்டதுக்கும் நல்லதுக்கும்கூட சொல்லிக்கொண்டிருப்பான் ரிச்சி. அதன்பிறகு டாங்கேயை எங்களோடு விளையாட சேர்த்துக்கொண்டாலும் பயந்து பயந்து எங்களுடன் வந்திருப்பான்.
“இரு இரு அம்மாகிட்டே சொல்றேன். அவங்களோட சேர்ரியா?” என்று சோனு மிரட்டும்போது டாங்கே அவளுக்கும் ஏதாவது லஞ்சம் தரவேண்டியிருக்கும். விளையாடுவதற்காக மட்டும் அவன் நான்கு திசையிலும் சதா கவனித்து பயந்தபடியே விளையாட்டில் கோட்டைவிடுபவனாய் இருந்தான்.
“டேய், இங்கிலீஷ் சினிமாவுக்குப் போறப்ப மாத்திரம் ஒங்க அப்பா அம்மா ஒன்னையும் சோனுவையும் ஏன்டா வீட்டிலேயே விட்டுட்டு போறாங்க?” என்று கேட்பான் ரிச்சி.
“தெரியாது.”
“தெரிஞ்சிட்டு வந்து சொல்லு. இல்லேன்னா சேர்த்திக்க மாட்டோம்.”
ஒரு மாதம் நகர்ந்திருக்கும். சீனிவாச டாங்கே அவர்கள் வீட்டு சுற்றுச்சுவருக்குப் பின்னாலேயே சோனுவுடன் விளையாடிக்கொண்டிருந்தான். நாங்கள் தெருவில் இறங்கினோம். கால்பந்து ஆடுவதற்கு தயார். கால்பந்துக்கு நாங்கள் உபயோகப்படுத்தியது கவர்பால் என்று நாங்கள் அழைக்கும் பழைய டென்னிஸ் பந்து ஒன்றை. ரிச்சியின் அப்பா டென்னிஸ் விளையாடுவார். ஆடித் தேய்ந்துவிட்ட பந்து ஒன்றை அவன்தான் கால்பந்து விளையாட எடுத்து வந்தான். நாங்கள் அதைத் தேயத் தேய ஆடுவதால் அதன் மீதிருந்த மொசு மொசுப்பெல்லாம் தேய்ந்து வழவழவென்று ரப்பர் பரப்பு தெரியத் தொடங்கியிருக்கும். இந்தப் பந்தை வைத்து கால் பந்தாட்டமாடுகையில், பந்தைக் காட்டிலும் தரையுடன்தான் எங்கள் பாதத்துக்கு உராய்வும் உதையுமிருக்கும். பந்தை உதைக்கும்போதெல்லாம் பாதம் தரையையும் சேர்த்தே உதைக்குமாதலால் பெரும்பாலும் கால் விரல்களில் நகம் பெயர்ந்தும், பாதத்தில் தோல் பிய்ந்தும். சில சமயம் ரத்தக் களறியாயும் நாங்கள் ஓய்வடைவோம். பந்து அக்கம் பக்க வீட்டுச் சுவர் தாண்டி உள்ளே போய்விடும். டாங்கேயின் வீட்டுக்குள் போய்விடும் சமயம் சோனு பந்தை எடுத்து வைத்துக்கொண்டு ஆட்டம் காட்டும். ரிச்சி நெருங்குவதாயிருந்தால் வீசிப் போட்டுவிடும்.
டாங்கே வெளியில் வந்தான். நகர்ந்து மெதுவாக எனக்குச் சொன்னான்.
“இங்கிலீஷ் சினிமாவிலே நிறைய கெட்ட வார்த்தை பண்ணறாங்களாம், சின்னப் பசங்க பாத்தா கெட்டுப் போயிடுவாங்களாம்.”
“என்னடா சொல்றான்?” அதட்டலாய்க் கத்தினான் ரிச்சி. அந்தளவுக்குக் கத்திப் பேசுவது எனக்குப் பிடிக்காது என்பதால் அவனிடம் நெருங்கிப் போய்ச் சொன்னேன். மிகப் பெரியதாய்ச் சிரித்துவிட்டு டாங்கேயிடம் ஓடிப்போய் தோளைப் பிடித்தபடி கேட்டான் ரிச்சி.
“எங்கிட்ட ஒரு தபா சொல்லு.”
“இங்கிலீஷ்படத்தில கெட்ட வார்த்தைப் பண்றாங்களாம்.”
கேட்டுவிட்டு மீண்டும் பெரிதாகச் சிரித்தான் ரிச்சி. அதற்கப்புறம் சீனிவாச டாங்கேயை எங்களோடு விளையாடச் சேர்த்துக்கொள்ளுவதில் சிச்சி எவ்வித தடையையும் விதிக்கவில்லை. விடுமுறை நாட்களில் விளையாட்டுக்குப் பிறகு பிள்ளையார் கோயிலில் உட்கார்ந்து கதைப்பது ஒரு பொழுதுபோக்கு, அது போன்ற சமயத்தில் ரிச்சி மெதுவாகக் கெட்டான்.
“சோனுûவுயும் கூட்டிட்டு வாடா, பாவம் அங்கியே நின்னுகிட்டு இங்கியே பாக்குது.”
“அது வராது.”
“ஏன்?”
“சரி நாம் போறேன் என்று ஓடிவிட்டான் டாங்கே.”
அதன் பிறகு டாங்கேயை அதிகம் சீண்டாமல் தாஜா பண்ணுவதும். அவனுக்குப் பக்க பலமாயிருந்து விளையாட்டிலுள்ள சூட்சுமங்களை சொல்லித் தருவதுமாயிருந்தான் ரிச்சி. டாங்கேயைத் தோளில் கை போட்டு மிக்க பாசத்தோடு தூரமாய்ப் போய் விடுவான். என்னைத் தவிர அந்த மாதிர சமயம் மற்றவர்களை அண்டவிடமாட்டான். அம்மாதிரியான அந்தரங்க வேளையொன்றில் நானும் அம்மாதிரியான அந்தரங்க வேளையொன்றில் நானும் அருகிலிருந்தபோது டாங்கேயைக் கேட்டான்.
“நீ சீக்கிரம் தூங்கிடுவியா?”
“இல்ல. ரொம்ப நேரமாகும்.”
“தூங்காம என்ன பண்ணுவ?”
“கண்ண மூடுவேன் திறப்பேன்”
“இருட்டையா?”
“ப்ளூவா லைட் இருக்கும்.”
“சோனுவா? ”
“அவ சீக்கிரமே தூங்கிடுவா.”
“அம்மா அப்பா? ”
“ஊகூம்.”
“சும்மா சொல்லுடா.”
“ஐயோ வேணாம். சொன்னா சாமி கண்ணைக் குத்திடும்.”
“யார் சொன்னா? ”
“அம்மா.”
“எதுக்கு சொன்னா? ”
“நா தூங்காம பாத்துட்டிருந்தத அவ பாத்துட்டா.”
“அப்பா பாக்கலையா ஒன்ன? ”
“அம்மா என்ன சொன்னா? ”
“கெட்ட வார்த்தைப் பண்ணறதையெல்லாம் பாக்கக்கூடாது. யார்கிட்டயும் சொல்லக்கூடாது. சொன்னா சாமி கண்ணக் குத்திடும்னு அம்மா சொன்னா, அதனால நா சொல்லமாட்டேன்.”

நான் ரிச்சியின் வீட்டுக்கு அரிதாகத்தான் போவேன். அப்படி போனாலும் வெளியிலேயே இருப்பேன். திடீரென்று அவன் என்னை மாடிக்கு அழைத்துப் போனான். ஒரு சுருக்குப் பையை எடுத்து எனக்குக் காட்டினான்.

“என்னோட பொக்கிசம்,” என்று சொல்லிவிட்டு சுருக்குப் பையைத் திறந்தான், அதில் நிறைய ரூபாய் நோட்டுகளும் நாணயங்களுமிருந்தன. எவ்வளவு இருப்பு என்பது தெரியாது.
“ஏது?”
“சேர்த்து வச்சிருக்கேன்.”
“அப்பா தருவாரா?”
“அதுவும் அதோட அப்பா பர்சிலேந்து அப்பப்போ நைசா எடுத்துக்குவேன்.”
“இவ்வளுவுமா திருடினே?”
“கொஞ்சம் கொஞ்சமாடா. எவ்வளவு மாசமா சேர்ந்துக்கிட்டு வர்ரேன் தெரியுமா. எடுத்ததே தெரியாது.”
எனக்கு அந்தச் சுருக்குப் பை மீது அடங்காத ஆசை ஏற்பட்டுப் போனது. அவ்வளவு பணத்தை அந்த வயதில் நண்பன் ஒருவனிடம் ரகசியமாயிருப்பதை அப்போதுதான் முதன்முதலாகப் பார்க்கிறேன்.
“டேய், ஒரு விசயம் சொல்லுவேன். யார்கிட்டேயும் சொல்லிட மாட்டியே.
“சொல்லு.”
“இந்த துளசியில்லே,”என்று ஆரம்பித்தான்.
“யாரு?” என்றான். ஆனால் பேச்சை நிறுத்திவிட்டு கண்ஜாடை செய்தான்.
அவர்கள் வீட்டு சமையற்காரம்மாள் இரண்டு தம்பளர்களில் தேநீர் ஏந்திக்கொண்டு வந்தாள்.
“டீ” என்று சொல்லி வைத்துவிட்டுப் போய்விட்டாள்.
“எங்க வீட்டு குக்கு,” என்று சொல்லிவிட்டுச் சிரித்தான்.
தேநீர் குடித்தானதும் தாழ்ந்த குரலில் பேசினான் ரிச்சி.
“நா இங்கதான் படுத்துக்குவேன். அம்மாவுக்கு உடம்பு முடியாமப் போனதிலேந்து துளசி வீட்டோடயே இருக்கா. புருசன் இல்லே. குழந்தையுமிலே..”
“பாவம்,” என்றேன்.
“பாவமா, ரெண்டு தடவை ராத்திரி ரூமுக்கு வந்திட்டா. வாயைப் பொத்தறா. சொல்லிடாதே சொல்லிடாதேன்னு கெஞ்சறா…”என்று சொல்லிவிட்டு விழுந்து விழுந்து சிரித்தான். அவனுக்கு பதினாறு வயது அப்போது. என்னைவிட ஒரு வயது மூத்தவன்.
அதன்பிறகு கோடைவிடுமுறையில் ஒருநாள் மாலை அவனைப் பார்த்து வரலாமென்று வீட்டுக்குப் போனபோது ஆளவரமின்றி தோன்றியது. மின்சார மணியை அடித்தபோது துளசி வெளிப்பட்டாள். “வா, அவங்களெல்லாம் மெட்றாசுக்குப் போயிருக்காங்க. தெரியாதா,” என்றாள்.
“எனக்குத் தெரியாது. என்னிடம் அவன் ஊருக்குப் போவதாகச் சொல்லவில்லை.” எனக்கோ அவனுடைய சுருக்குப் பை பொக்கிஷம் வந்து போட்டு வதைத்தது. நிமிர்ந்து பார்க்க, துளசி என்னையே கவனிப்பதை உணர்ந்தேன். “தேநீர் போடவா,” என்று கேட்டபோது, வேண்டாம் என்றேன்.
“இரு,” என்று சொல்லிவிட்டு அவள் வெளியே போனாள். நான் நெஞ்சுப் படபடக்க மாடிப் படிக்கட்டிலேறி மாடி அறைக்குள் நுழைந்து அவன் மேஜை இழுப்பறை திறந்து, உள்ளே மேஜையில் பதுங்கியிருந்த பொக்கிசப் பையை எடுத்தேன். தயங்காமல் கால் சட்டைப்பைக்குள் போட்டுக்கொண்டு அதே வேகத்தில் கீழே வந்து அமர்ந்தேன்.
துளசி திரும்பி வரும்போது எதோ தின்பண்டத்தையும் கோலவையும் கொண்டு வந்து சாப்பிடச் சொன்னாள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது என் தலையை வருடிவிட்டாள். ஜேபிக்குள்ளிருக்கும் சுருக்குப் பை எனக்குள் படபடப்பை அதிகரித்தது.
“பயப்படாதே,” என்று துளசி தன் கையை கீழே கொண்டு வந்தாள். பயம் அதிகரித்தது. அவள் கை என் கால் சட்டைக்கு வந்தபோது படபடப்பு அதிகரித்தது. போலீசிடம் அகப்பட்டுக் கொண்டாற்போல ஒரு நடுக்கம். சுருக்கப்பையைக் கண்டுபிடித்து எடுத்துவிட்டால் மானம் போய்விடும்.
“போறேன்,” என்று சத்தமாய் கூறிவிட்டு எழுந்தபோது அவள் அதிர்ச்சியோடு கையைப் பிடித்துக்கொண்டு, “இரு போவியாம், மெதுவா போலாம்,” என்றாள். நான் விடுவித்துக் கொண்டு வேலையிருப்பதாய்ச் சொல்லி ஓடி வந்துவிட்டேன்.
இரண்டு மூன்று நாட்கள் போனதும் ரிச்சியின் குடும்பம் ஊர் திரும்பியது.
“ஒங்கிட்டே தனியா பேசணும்,” என்று சொல்லி மாடிக்கு அழைத்துப் போனான் ரிச்சி. எனக்கு உதறல் கண்டது.
“நாங்க ஊருக்குப் போயிருந்தப்ப நீ வீட்டுக்கு வந்திருந்தியா, துளசி சொன்னா.”
“ஆமா. நீ ஊருக்குப் போனது தெரியாது.”
“என்னோட பொக்கிசம் காணோம்டா.”
“சுருக்குப் பையா?”
“நானூறு ரூபாய்க்கு மேலே இருக்கும்.”
என் உடம்பு தகித்தது.
“அது எனக்கும் ஒனக்கும் மட்டும்தான் தெரியும். ஒன்னத் தவிர யாருக்குமே அது தெரியாது.”
“ஒருவேளை துளசி?.” நான் தப்பும் யத்தனிப்பில்..
“சே சே. இந்த வீடு பூரா அங்காங்கே அப்படியப்படியே காசு பணம் கிடக்கும். தொடவே மாட்டா. அவ சம்பளப் பணத்திலயிருந்தே எனக்கு சாக்லெட்டெல்லாம் வாங்கித் தருவா,” சொல்லிவிட்டு என்னையே அவன் உற்று ஊன்றிப் பார்ப்பதாய் எனக்கு குடையும்.
“எப்படி போயிருக்கும், யார் எடுத்திருப்பா?” என்று நானும் அப்பாவிபோல் கேட்பேன். அவன் என்னையே பார்த்தபடி சொல்லுவான்.
“எனக்கும் ஒனக்கும் மட்டுமே அது தெரியும்.”

அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்து ஓட்டலில் சாப்பிடுவதும் நிறைய சினிமா பார்ப்பதுமாய் இருந்தேன். ரிச்சியைப் பார்ப்பதைத் தவிர்த்தேன் என்பதில் அதையளவு அவனும் என்னை சந்திப்பதைத் தவிர்த்தான் என்பதும் அடங்கும். கொஞ்சம் கொஞ்சமாய் என்னோடான சினேகத்தை அவன் குறைத்துக்கொண்டு வருவது புரிந்தது. பேச்சும் மிகவும் அளவானது.
இந்த சமயம் அப்பாவை மதறாசுக்கு மாற்றிவிடவே எங்கள் குடும்பம் இடம்பெயர்ந்து விட்டது. ரிச்சியிடம் சொல்லிக்கொண்டபோது அவன் என் பிரிவைப் பெரிதாக எடுத்துக் கொண்டதாய்ப் படவில்லை. அவனுக்கும் எனக்குமிடையிலான தொடர்பு நின்று போனது. பட்டணவாசம், படிப்பு, வயது எல்லாம் ஏற ஏற பழைய சினேக நிகழ்ச்சிகள் யாவும் கனவுகளாய் மிதந்தன.
மீண்டும் டாங்கேயும் மரண அறிவிப்பைப் பார்த்தேன். அதில் தொலைப்பேசி எண் எதுவும் குறிப்பிடப்படாததால் யாரோடும் தொடர்புகொண்டு பேசமுடியவில்லை. சேலம் என்பதால் ரிச்சியைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலும் ஏற்பட்டது. அதில் கண்டிருந்த பெயர்களில் அவன் ஒருவனோடுதான் நான் தொடர்பு கொள்ள முடியும். அதுவும் ஊருக்கே போய்த்தான்.
இத்தனை காலத்துக்குப் பின் அவனைச் சந்திக்கும்போது நிச்சயம் தவிர்க்கமாட்டான். எங்கள் உறவைக் கெடுத்துவிட்ட பொக்கிச சுருக்குப்பை விவகாரம் அவனிடம் இன்னும் நிலைத்திருக்குமா என்பது உறுதியில்லை. நான் புறப்பட்டு விட்டேன்.
மறுநாள் அந்த ஊரில் இறங்கிய கையோடு அறைபிடித்து தங்கிக்கொண்டு சாவகாசமாய் மாலை ஐந்து மணிக்கு அந்தப் பகுதியை அடைந்தேன்.
எல்லாம் மாறிவிட்டிருந்தது. ரிச்சர்டு பால் புஷ்பதுரை-இந்தியன் நேவி- என்ற பெயர்ப் பலகை பளிச்சென்றிருந்தது. மின்சார மணியை அடித்தேன்.
அடர்ந்து நரைத்த சிகையும் கண்ணாடியுமாய் நெடிதான உருவம் வந்தது.
ரிச்சர்டு பால் புஷ்ப துரைராஜ்.
ஒரு சில நொடிகளுக்கு இருவரும் பார்த்துக் கொண்டிருந்தோம்.
“ரிச்சி,” என்றேன்.
“ஏய் குண்டா,” என்று கத்திக்கொண்டே என்னை இறுகக் கட்டித் தூக்கிவிட்டான்.
உட்கார்ந்தோம். அவன் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றதையும், நான் ரெயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்றதையும் சொல்லிக்கொண்டு ஏக காலத்தில் இருவரும், “எத்தனை காலமாச்சி,” என்றோம்.
“எத்தனை காலமானாலும் உன்னோட பொக்கிஷப்பை ஞாபகத்திலேயே இருக்கும்,” என்று நான் உளறியபோது, அவன் வெறுமனே உரக்கச் சிரித்துவிட்டு என் கையைப் பிடித்து சற்றே முரட்டுத்தனம் கூடின மிருதுவோடு அமுக்கியவாறே கேட்டான்.
“சரி, எங்கே வந்தே, திடீர்னு என்னைப் பார்க்க வந்திருக்கே?”
“நேத்து பேப்பர்ல அபிச்சுவார காலத்ல நம்ம டாங்கே படம்பார்த்தேன்.
அவன் மௌனமாயிருந்தான்.
“அதில, ஒன்னோட பேரும் இருந்தது.”
ரிச்சி தலையைத் திருப்பிக் குரல் கொடுத்தான்.
“டார்லிங், யார் வந்திருக்கிறது பாரு.”
நரைத்த தலையும் பருத்த உடலுமாய் சீனிவாச டாங்கேயின் சகோதரி சோனு மெதுவாக நடந்து வந்து பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்.

(நவீன விருட்சம் – இதழ் 85-86 – பிப்ரவரி 2010)

One Comment on “ரிச்சியும் நானும்/விட்டல்ராவ்”

  1. நன்று. காலம் மாறினாலும் சிறு வயது நண்பர்களின் நினைவு நம்மை விட்டு அகலாது. எனக்கு அந்த நினைவு  60 வருடங்கள் கழித்து நிஜமானது 
    Gemini Sridhar

Comments are closed.