தாற்காலிகம்/ஆர். வத்ஸலா

இன்றைய கவிதை வாசிக்கலாம் கூட்டத்தில் நான் வாசித்த கவிதை👇🏾

காலையில் பணிக்குச் செல்லும் பெற்றோர்
அவசரமாய் திணிக்கும்
குழவிகளின் ஓலத்தை
விளையாட்டால் ஓட்டி

மாற்றி மாற்றி
(சில சமயம் இரண்டுமூன்று ஒன்று சேர்ந்து கூட)
‘அந்த‘ முழியுடன் கூப்பிடும்போது
ஓடிச்சென்று
அவை நின்ற இடத்திலேயே ஏதும் நேராதிருக்க
அவசரமாய் தூக்கி
கழிப்பிடம் ஓடி
சிரித்த முகத்துடன் மலம் கழுவி

தான் சாப்பிட்டறியாத ஆப்பிளையும் பிஸ்கோத்தையும்
காயையும், பாலையும், பருப்பையும், தயிரையும்
அவற்றிற்கு ஊட்டி

தூங்க முரண்டும் சிட்டுகளை
குப்புறப் போட்டு தட்டி ‘தாச்சி‘ சொல்லி
தூங்க வைத்து

பெற்றோர் வரும் நேரத்திற்கு
‘மேடம்‘ சொல்படி
அவற்றின் முகம் கழுவி
பௌடர் பூசி
தலை சீவி விட்டு

நிழல்கள் நீளுகையில்
அவற்றின் ஏக்கம்
விம்மலாக வெடிக்காமலிருக்க
தனக்கு புரியாத மொழியில் ‘ரைம்’ சொல்லி
திசை திருப்பி

உரிமையுடையோர் வந்ததும்
பிஞ்சுகளை ’டாடா’ சொல்லி ஒப்படைத்துவிட்டு

வீடு திரும்புகிறாள்
அம்மா மடியில் படுக்க ஏங்கும்
அந்த குட்டி ‘ஆயா‘