
நாளை நெல்லை கண்ணன் பெயரில் சாலையொன்று நெல்லையில் திறக்கப்படுவதையொட்டி மீள் பதிவாக என் மனப்பதிவு
1967 இல் காங்கிரஸ்ஸில் நல்ல பேச்சாளர்களே கிடையாது. இவ்வளவுக்கும் சத்திய மூர்த்தி போன்றோர் பேசிப்பேசியே வளர்த்த கட்சி. சொல்லின் செல்வர் ஈவிகே சம்பத் எல்லாம் கூட அங்குதான் 1967இல் இருந்தார். மாநில அளவில் நிலைமை இப்படி என்றால் நெல்லையைப் பொறுத்து மேடைப்பேச்சின் குறைந்த பட்ச அலங்காரம் கூட இல்லாமல் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசுபவர்களே அதிகம். அப்போதெல்லாம் நெல்லை கண்ணன் போன்றவர்களுக்கு இருபது வயது இருக்கும் அவர் வீட்டுக்கு அருகாமையில் உள்ள தெருக்களில் அவர் நன்றாகப் பேசுவதாக நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன், ஆனால் அவரெல்லாம் மற்ற பெரிய மேடைகளிலேறி நான் பார்த்தில்லை. காங்கிரஸ் செய்த தவறுகளில் அது ஒன்று.
நெல்லையப்பர் ஹை ரோட்டில் இருக்கும் ரத்னா பார்வதி சென்ட்ரல் தியேட்டர்களில்த்தான் அதிகமான புதுப் படங்கள் அப்போதெல்லாம் வரும்.படம் பார்க்கப் போவதென்றாலும் சரி, வசூல் நிலவரம் அறியப் போனாலும் சரி கிட்டு வீட்டின் முன்பாகத்தான் செல்வோம். (நெல்லை கண்ணனின் செல்லப் பெயர் அதுதான்). அப்போதெல்லாம் அவரைப் பார்த்தலும் பேசிக் கொள்வதில்லை. யாருடனாவது கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருப்பார். அனேகமாக சிவாஜி ரசிகர்களாகத்தான் இருக்கும்.
ஒரு நாள் அவரே என்னை அழைத்து “ வே மாப்ளை வாரும், அவாள் வண்ணதாசன் அண்ணாச்சி கதை ஒண்ணு தினமணி கதிர்ல பரிசு வாங்கியிருக்கு போலயே” என்று பேசினார். அப்போதுதான் ஒஹோ இவரும் வித்தியாசமான விஷயங்களையும் படிக்கிறவரு போல என்று தெரிந்து கொண்டேன். அப்புறம் அவரைப் பற்றி அவரது அருகாமை வீட்டு சுடலைமுத்து சொன்னான்,
அவன் எம்.ஜி.ஆர் ரசிகன், ”கம்பராமாயணத்தையும் பாரதியாரையும் தலை கீழா ஒப்பிப்பாருப்பா..” என்று அவனே நேரடியாக முழுதாக அறிமுகப்படுத்தவும் செய்தான்.
அப்படி அறிமுகமான அன்றைக்கு ‘பேராசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ’சிறியன சிந்தியாதான்’ பற்றிப் பேச்சு வந்தது.அவரின் இலக்கிய வாசிப்பு குறித்து அன்றைக்குண்டான வியப்பு அப்புறம் எனக்குத் தீரவேயில்லை.
காங்கிரஸ் கட்சியில் திராவிட இயக்கப் பாணியில் நன்றாகப் பேசுபவர்கள் சம்பத்திற்குப் பிறகு இல்லை என்பதாலேயே எம். பி. சுப்ரமணியம் போன்றவர்களை காங்கிரஸ் கமிட்டியின் தலைமைப் பொறுப்பிற்கு நியமித்தார்கள்.( சம்பத் இருந்த போது அவருக்குத் தலைமைப் பொறுப்பு அளிக்கவில்லை என்பது இன்னொரு சாதி அரசியல், பின்னால் இந்திரா காலத்தில் செயலாளராக இருந்த நினைவு. அது அவரது அந்திம காலம்) அப்போது கூட கண்ணன் போன்றவர்களைப் பற்றிய யோசனை அந்தக் கட்சியில் எழாதது ஆச்சரியமே. அல்லது அதுவும் அரசியல் தானோ என்னவோ.
ஆனால் வாழப்பாடி ராமமூர்த்தி காலத்தில் நெல்லை கண்ணன் ஐ.என்.டி யு.சி தலைவர்களில் ஒருவராகப் பணியாற்றி நெல்லைப் பகுதியில் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்காப் போராடியிருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் அவரது அரசியல் வாய்ப்புகள் சற்றே பிரகாசமாக இருந்தது. அவரது அரசியல் அறிவும் ஞாபகத் திறனும் வியப்புக்குரியது. அரசியல் கூட்டங்களில் ஒன்று தொட்டு ஒன்று என்று பழைய அரசியல் நிகழ்வுகளை கட்சி எல்லை தாண்டிப் பேசுவது ஆச்சரியமாயிருக்கும். அவருக்கு ஜீவா, ராமமூர்த்தி, நல்லகண்ணு போன்றவர்களின் மீது மிகுந்த நல்ல அபிப்ராயம் உண்டு.பல அரசியல் தலைவர்களுடனும் நேரடிப் பழக்கமும் உண்டு.
அது நெருக்கமானதா என்று எனக்குத் தெரியாது. அவரது வெளிப்படையான பேச்சு போன்ற சில குணாதிசயங்களால் அதற்கு சாத்தியம் குறைவு என்பதும் அதைப் பற்றி அவருக்குக் கவலையில்லை என்பதும் என் போன்று அவர் மீது அரசியல் சார்பை மீறி நட்புக் கொண்டவர்களுக்கு ஆச்சரியமில்லாதது. எல்லாவற்றையும் விட எப்போதும் சைவமும் தமிழும் அவரது இரண்டு கண்கள் என்று வாழ்ந்தவர் என்பேன். அதைக் காப்பாறுவதற்காகவே அவரது மேடைப்பேச்செனும் மூன்றாவது கண் எப்போதும் விழிப்புடனிருக்கும்.
இன்று அவர் பெயரில் நெல்லையில் ஒரு சாலை அமைவது கட்சி அரசியலைத் தாண்டி தமிழுக்காகத் தி.மு. கழகத்தலைவர் தமிழக முதல்வர் செய்கிற மாபெரும் காரியம்.
தமிழுக்குத் தொண்டு செய்தோன் சாவதில்லை என்று தலைவரைப் போலவே தளபதியும் நிரூபித்திருக்கிறார். இவ்வரிய செயலுக்குத் துணை நின்ற அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கும் எனது அருமை மகள் தமிழச்சி தங்கபாண்டியனுக்கும் அன்பு வாழ்த்துகள்
