தவப்பயனே வாழ்க்கை /கோ.முத்துசுவாமி

சிவாயநம. இன்றைய விருட்சம் நிகழ்வில் வாசித்த கவிதை :

ஊழ்நின்று வருத்திடினும் வளையா நெஞ்சில்
உயர்வெல்லாம் தாமேவந் தடையும் தஞ்சம்;
சூழ்கின்ற துயர்தளரும்; சுமைகள் நீங்கும்;
சுற்றிவரும் பகைவிலகும்; சீர்மை ஓங்கும் ;
தாழ்கின்ற நிலைவரினும் தளரா உள்ளம்
தன்கடமை விடுவதில்லை; துணியும்; வெல்லும்!
வாழ்கின்றோம் என்பதனை உணர்ந்து வாழ்நீ!
வாழவைக்கும் பரம்பொருளை வணங்கி வாழ்நீ!

எங்கெங்கும் சக்திமயம்; ஈர்த்துக் கொண்டால்
இதயத்தில் சக்தியதே இதமாய்த் தங்கும்!
பங்கமிலா சக்தியதன் பங்க ளிப்பாம்
பிரபஞ்சம்; பேருணர்வாய் நிறையும் சக்தி!
இங்கங்கே அலையாமல் உள்வாங்கிக் கொள்
இருக்கின்ற பேருணர்வை; இருப்பை நேசி!
பொங்குமின்பம் வாழ்க்கையிலே; புரிந்து வாழ்நீ!
பேரறிவுப் பரம்பொருளைப் பணிந்து வாழ்நீ!

கவலைகளைக் குப்பையெனக் கொட்டி வைக்கும்
கூடையாமோ மனமதுவும்? விரிந்து செல்லும்
புவனியிலே வாழ்க்கையினை விரித்துக் கொள்ளப்
புரியவைக்கும் கருவிமனம்; புதுப்பித்துக் கொள்!
அவலமதே சிந்தனையை அள்ளிக் கொண்டால்
அல்லலிலா ஒருநொடியும் உலகில் இல்லை;
தவப்பயனே வாழ்க்கையிது; துணிந்து வாழ்நீ!
தந்தவந்தப் பரம்பொருளைத் துணைகொள்; வாழ்நீ!