
தவிர்க்க முடியாத காரணத்தால் கவியரங்கில் கலந்து கொள்ள முடியவில்லை
கவியரங்கில் நான் வாசிக்க இருந்த கவிதை
ஆஹா என்ன அற்புதம்
சூரியன் உதிக்கிறது
தாமரை மலர்கிறது
மழைத்துளி மண்பார்த்து
விழுகிறது
காற்று தென்றலாய்
வீசுகிறது
மண்வாசனை தான்
எத்தனை மகத்துவமானது
மூங்கிலாய் இசையை
எங்கே ஒளித்துவைத்திருக்கும்
இந்தப் புல்லாங்குழல்
பழைய நினைவுகளை
அவ்வப்போது அசைபோடுவதற்கு
வாழ்க்கையில் மறக்க
முடியாதபடி
ஏதேனும் நடந்திருக்கவேண்டும்
இரவும் பகலும்
சந்தித்துக் கொள்ளும்
வானம் எனக்கு மட்டும்
கேட்கும்படி சேதி சொல்லும்
காற்றின் தழுவல்களால்
அலை எழுகிறது
கரை தொட்டு
பின்வாங்குகையில்
பாதத்தின் அடியில்
குழி பறிக்கிறது
அவரவர் வாழ்வு
அவரவர் உலகம்
இங்கு எல்லாம்
சரியாகத்தான் இருக்கிறது
என்னைத் தவிர!
