
குழந்தை உலகத்தில்
கொஞ்சமே இடம் உண்டு
தாயுண்டு தந்தையுண்டு
பால் உண்டு படுக்கை உண்டு
வயிற்றுப் பசியால்
வருகின்ற அழுகை உண்டு
தாயைப் பார்த்தவுடன்
தானாகச் சிரிப்புண்டு
நடைபழகி விழுவதுண்டு
எழுந்து நடப்பதுண்டு
தாங்கிடுவாள் தாய் என்று
ஓடி வந்து சாய்வதுண்டு
விளையாட்டு பொம்மையைப்
பிடுங்கினால் அழுகை உண்டு
வீதியெல்லாம் வியப்புண்டு
வெளிச்செல்ல விருப்பமுண்டு
அம்மாவின் இடுப்புண்டு
அப்பாவின் கையுண்டு
மாறி மாறிப் பயணிக்கும்
மறக்காத தெருக்களுண்டு
டாட்டாக்கள் சொல்வதற்கு
விரல்களுக்குப் பழக்கம் உண்டு
அப்பா திரும்பியதும்
ஆசையுடன் ஓட்டம் உண்டு
வீட்டுக்கு வருகின்ற
விருந்தாளி பயம் உண்டு
முத்தத்தின் எச்சிலுக்குக்
கன்னத்தில் மறுப்புண்டு
இரவின் இருட்டுக்கு
அம்மாவின் அணைப்புண்டு
அப்படியே கால் போட்டு
தூக்கத்தில் சுகம் உண்டு
வயது போவதுண்டு
உலகம் விரிவதுண்டு
இயந்திர வாழ்க்கையின்
அங்கம் ஆவதுண்டு
தொலைந்து போன
குழந்தை உலகத்தை
எப்போதோ நினைப்பதுண்டு
ஏக்கம் வருவதுண்டு
————
