கல்யாண்ஜி கவிதை

அதே சோப்புக் கரைசல்.
அதே ஊது குழல்.
அதே மூச்சுக் காற்று.
ஒரே ஒரு குமிழி மட்டும்
தன்னைப் பெரிதாக்கிக்கொண்டே போகிறது.
ததும்பித் தளும்புகிறது
ஊது குழல் நுனியில் தேன்கூடாகத் தொங்குகிறது.
தன் சுழியத்தை நெளித்து நடனம் இடுகிறது.
முழுக்கொப்புளத்தின் மேல் வானவில்லை வைக்கிறது.
அப்படியே இருந்து அவதானிக்கிறது.
தனிக்கோளமாகக் காற்றில் நகராமல்
குழல் நுனியில்
தன் கண்ணாடிப் பூவை
தானே பறித்து
தானே சூடிக்
காணாமல் போகிறது.