சும்மாவா சினிமாஆசிரியர் – டாக்டர் ஜெ. பாஸ்கரன்/SL நாணு

நூல் விமர்சனம்


குவிகம் பதிப்பகம் வெளியீடு
விலை ; ரூபாய் 200

டாக்டர் பாஸ்கரன் முகநூலில் ஒரு சின்ன பதிவு போட்டாலே அதில் அவருடைய உழைப்பும் மெனக்கெடுதலும் பளிச்சென்று தெரியும். பல அரிய தகவல்களை தேடிப் பிடித்து அதில் சேர்த்திருப்பார். ஆனால் படிப்பதற்கு அது செய்தித் தொகுப்பாக இருக்காது. அவருடைய சரளமான எழுத்து நடையில் கொஞ்சம் நகைச்சுவையையும் தூவி அந்தப் பதிவை விறுவிறுப்பாக்கி ஜனரஞ்சகமாக்கி விடுவார்.

ஒரு பதிவுக்கே இவ்வளவு மெனக்கெடுபவர் ஒரு நூலை வெளிக் கொண்டு வந்தால் கேட்க வேண்டுமா?

“சும்மாவா சினிமா” நூலில் மொத்தம் நாற்பத்தொம்பது கட்டுரைப் பதிவுகள். நாற்பத்தொம்பதா என்று முதலில் மலைத்தாலும் படிக்க ஆரம்பித்தால் முடிக்காமல் விட மாட்டேன் என்று ஆசிரியரின் எழுத்து நம்மை ஆக்ரமித்து கட்டிப் போட்டு விடும்.

லேடீஸ் ஸ்பெஷல் மாத இதழில் “மாதம் ஒரு ஹீரோ” என்று எழுதிய தொடருடன் ஆசிரியரின் சில முகநூல் பதிவுகளையும் இணைத்து தொகுக்கப் பட்டது தான் இந்த நூல்.

என்னுரையிலேயே ஆசிரியர் சினிமாவைப் பற்றின தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தி விடுகிறார்.

“அந்தக் காலப் படங்கள் நல்லவைகளையேப் பேசின. தீயவைகள் அழிவதாகவும், தர்மங்கள் வெல்வதாகவும், நல்லவர்கள் மகிழ்வதாகவும், தீயவர்கள் வருந்தி தண்டிக்கப்படுவதாகவும் காட்டப்பட்ட அந்தக் காலப் படங்கள் நல்ல ஒரு சமுதாயத்தை உருவாக்கப் பயன்பட்டன”

நூலின் தலைப்பு “சும்மாவா சினிமா” தான் முதல் கட்டுரை. அது ஆசிரியரின் சினிமா அனுபவம் பற்றிய கட்டுரை.

“சினிமா ஒரு பவர்ஃபுல் மீடியம். நாற்பது வருடம் மருத்துவம் செய்து மெதுவாகக் கிடைத்த பப்ளிக் அறிமுகம் நாற்பது நொடிகளில் தோன்றி மறையும் “நிபுணன்” பட டீசரில் உடனே கிடைத்தது”

என்று கட்டுரையின் முதல் வரியிலேயே சினிமா என்ற மீடியத்தின் அதீத தாக்கத்தை பளிச்சென்று பதிவு செய்திருக்கிறார்.

நிபுணன் திரைப்படத்தில் ஒரு காட்சியில் அவர் நடித்த அனுபவத்தையும் சினிமா சம்பந்தப்பட்டவர்களின் கடுமையான உழைப்பையும் சிலாக்கித்திருக்கிறார்.

“ஒரு கல்யாணம் செய்வதைப் போல, ஒரு குழந்தை பிறப்பது போல சினிமா என்பது பல சோதனைகளையும் இடர்களையும் தாண்டி உருவாகி வெளிவர வேண்டியிருக்கிறது.

உண்மையிலேயே ஏன் இவர்கள் இவ்வளவு சிரமப்படுகிறார்கள்? பணம், பெயர், புகழ் இவற்றைத் தாண்டி ஏதோ ஒன்று – ஆத்ம திருப்தி – அது தான் இவர்களைக் கைபிடித்து உயரத்திற்கு அழைத்துச் செல்கிறது என்று தோன்றுகிறது”

இதுதான் திரைப்படத்துரையினரைப் பற்றிய ஆசிரியரின் கணிப்பு.

அடுத்து நாஸ்டால்ஜிக்கான “டூரிங் டாக்கீஸ்” பற்றிய கட்டுரை.. ஆசிரியரின் விவரிப்பில் அந்தக் காலத்து டூரிங் டாக்கீஸில் மீண்டும் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு விடுகிறது.

அதேபோல் நாவல்கள் திரைப்படங்களாக உருவெடுப்பதைப் பற்றின கட்டுரையும் அபாரம்..

பல நடிகர்கள் பற்றி அரிய தகவல்கள்.

ராமபுரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆர். அவருடைய அம்மாவுக்காக ஒரு கோவில் கட்டியிருந்தாராம். தினமும் கோவிலில் அம்மாவை வணங்கி விட்டுத் தான் வெளியே கிளம்புவாராம்.

”அன்பே வா” திரைப்படத்துக்காக டைரக்டர் ஏ.சி. திரிலோகச்சந்தரை ஏ.வி.எம். நிறுவனத்துக்கு அறிமுகப் படுத்தியவர் நடிகர் எஸ்.ஏ. அசோகனாம்.

அந்தக் காலத்தில் இங்கிலீஷ் படங்களே ஓடும் கேசினோ தியேட்டரில் 275 நாட்கள் ஓடிய தமிழ்படம் “அன்பே வா”.

இப்படி இன்னும் பலப்பல தகவல்கள்..

“நீங்க ஏன் டைரக்‌ஷன்ல இறங்கலை” அப்படின்னு நடிகர் திலகம் சிவாஜி கணேசனிம் ஒரு முறை கேட்டார்களாம்.

அதற்கு சிவாஜி..

“அவனவன் அவனவன் வேலையைப் பண்ணணும். நான் டைரக்ட் பண்ணி நடிப்பு சொல்லிக் கொடுத்தா எல்லார்கிட்டேயும் சிவாஜி தான் தெரிவான். படத்துல ஒரு சிவாஜி இருந்தாத் தான் நல்லா இருக்கும்”

ஒரு கால கட்டத்தில் நாகேஷ் வருடத்திற்கு முப்பத்தைந்து படங்கள் நடித்தாராம். மணிக்கணக்கில் தான் கால்ஷீட் கொடுப்பார். ஒரே சமயத்தில் ஆறு படங்களில் நடிப்பாராம்.

ஆசிரியர் குறிப்பிட்டிருக்கும் நாகேஷ் பஞ்ச்..

“தழிழ் சினிமாவில் காமெடியன்கள் சிலருக்கு டைமிங் நல்லா இருக்கு.. சிலருக்கு டைம் நல்லா இருக்கு”

இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரிடம் நடிகர் ஏ.ஆர்.எஸ். ஒரு முறை கேட்டாராம்..

“நீங்கள் உங்கள் பழைய நாடகங்களை மீண்டும் போடலாமே”

அதற்கு பாலசந்தர் அளித்த பதில்..

”ஓ.. தாராளமாப் போடலாம்.. ஆனால் என் நாகேஷ் எங்கே?”

கண்ணதாசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், பாலையா, நம்பியார், ரங்காராவ், சரோஜா தேவி, தேவிகா, பத்மினி, சாவித்ரி, ஜெயலலிதான்னு ஆசிரியரின் கட்டுரைப் பட்டியல் நீள்கிறது.

”கொஞ்சும் குமரி”யில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை மனோரமா நகைச்சுவை நடிகையாக மாறியதற்கு காரணம் கவிஞர் கண்ணதாசன் தானாம்.

விசு, விவேக், எஸ்.பி.பி. … இவர்களைப் பற்றின பதிவுகள் நெகிழ்ச்சி..

சோ அவர்களைப் பற்றியும் துக்களக் பத்திரிகை பற்றியும் மூன்று பதிவுகள்.

அதில் ஒரு சாம்பிள்..

இரண்டு வருடங்களுக்கு முன் திரு. சோவை சந்தித்தபோது நான் தயங்கியபடி கேட்டது..

“உங்களுக்குப் பிறகு உங்களைப் போல் துக்ளக்கில் யார் எழுதுவார்?”

அதற்கு சோவின் பதில்..

“நானே போனபின் யார் எதை எழுதினால் எனக்கென்ன?”

இப்படி பல சுவாரஸ்யமான தகவல்கள் இந்த நூல் முழுவதும் சிதறிக் கிடக்கின்றன.

இதைத் தவிற பல மேடை நாடகங்கள் பற்றின பதிவுகள்..

மெட்ராஸ் தியேட்டர்ஸ் வழங்கிய “ட்ரினிட்டி” என்ற ஆங்கில நாடகம். சங்கீத மும்மூர்த்திகளின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாக தயாரிக்கப்பட்ட நாடகம். இந்த நாடகத்தில் பிரபல கர்நாடக இசை பாடகர் விஜய் சிவா முத்துசாமி தீட்சதராக நடித்தார் என்பது உபரிச் செய்தி.

தொடர்ந்து டி.வி. வரதராஜனின் “தியாகராஜர்”, சந்திரமோகன் எழுதிய “வந்தியத்தேவனின் வீர பயணம்”, ஸ்டேஜ் க்ரியேஷன்ஸின் “ஜுகல்பந்தி” போன்ற நாடகங்களின் விமர்சனப் பதிவுகள்.

ஏற்கனவே சித்ராலயா கோபு அவர்களைப் பற்றி ஒரு தனி பதிவு இருந்தாலும் இந்த நூலில் நிறைவாக “கலாட்டா கல்யாணம்” பற்றி பதிவு.

சிறுவயதில் சிதம்பரம் தில்லை டூரிங் டாக்கீஸில் கண்டு களித்த “கலாட்டா கல்யாணம்” திரைப்படத்தை மீண்டும் ஒரு தீபாவளி அன்று மதியம் ஒரு தொலைக்காட்சி சேனலில் ஆசிரியர் பார்த்திருக்கிறார்.

“விரசமில்லாத வசனம், இயல்பான நடிப்பு, காமெடிக்கேற்ற சிச்சுவேஷன்கள், நல்ல பாடல்கள், இனிய இசை என ஒரு தரமான நகைச்சுவைப் படம் பார்த்த திருப்தி. இந்த வருட தீபாவளியை சிறப்பாக்கி, அந்தக் கால சினிமா நினைவுகளையும் மனதில் கருப்பு வெள்ளைப் படமாய் ஓடவிட்டது..

அதற்குப் பிறகு மாலை 6.30 மணிக்கு தீபாவளிச் சிறப்புப் படத்தை நான் பார்க்கவில்லை. மனதில் சிதம்பரம் தில்லை டாக்கீஸ் படமே நிறைந்திருந்தது”

என்று அந்தக் காலப் படங்களின் பால் தனக்கிருக்கும் மோகத்தை மீண்டும் வெளிப்படுத்தி நூலை முடிக்கிறார்.

நிச்சயமாக இது ஒரு தகவல் பெட்டகம்..

எல்லோரும் அவசியம் படித்து மகிழ சிபாரிசு செய்கிறேன்.