கோபி/அழகியசிங்கர்

பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பரசுராமன் பையன் கோபியைப் பார்க்கும் போது நானும், மனைவியும் கிலி அடைந்து விடுவோம்.

உண்மையில் அவர் பையனை எங்கள் வீட்டுக்கு அனுப்பி வேடிக்கைப் பார்க்கிறாரென்று நினைத்துக் கொள்வேன். நாங்கள் அவர் பையனிடம் மாட்டிக்கொண்டு அவதிப் படுவதை ரசிக்கிறாரோ என்று தோன்றும்.

மற்ற நாட்களில் அலுவலகம் செல்வதால் நான் தப்பித்து விடுவேன் ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் மாட்டிக் கொண்டு விடுவேன். மற்ற நாட்களில் என் மனைவி பாடுகிற பாட்டை நினைத்து நான் பதட்டமாகி விடுவேன்.
கோபி பள்ளிக்கூடம் விட்டவுடன் எங்கள் வீட்டிற்குத்தான் வருவான். கூத்தடிப்பான்.

ஒன்றும் சொல்ல முடியாமல் அவள் முழிப்பாள்.

எங்களுக்குப் பல ஆண்டுகளாக என்ன முயற்சி செய்தும் குழந்தை பிறக்கவில்லை. இது அடிப்படையான காரணம் கோபிமீது அன்பு செலுத்த.
மேலும் கோபியை எதாவது கண்டித்தால் அவர்களுக்குக் குழந்தை இல்லை. அதனால்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று கூறி விடுவார்கள் என்ற பயம் என்னை விட என் மனைவிக்கு அதிகம்.

ஒருமுறை சமையல் அறையில் உள்ள தண்ணீரை கொட்டிவிட்டான். அப்போது பளாரென்று கன்னத்தில் அடித்து விட்டேன். அன்று அழுதுகொண்டே அவன் வீட்டிற்குப் போய் விட்டான்.
என் மனைவி கூட என்னிடம் கோபித்துக் கொண்டாள்.
“இந்த வால் பையன் இனிமேல் வர மாட்டான், நிம்மதியாய் இருப்போம்,” என்றேன்.

அடுத்தநாள் கோபி வரவில்லை. அவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்த என் மனைவிக்கு ஏமாற்றம்.

நான் கூட நினைத்தேன். அவனை அடிக்காமல் கண்டித்திருக்கலாமென்று

மூன்றாம் நாள் பரசுரம் என் வீட்டிற்கு வந்தார்.
“கோபியை அடித்தார்களா?”
“ஆமாம். உங்கள் பையன் விஷமம் தாங்க முடியவில்லை. குடிக்கிற தண்ணீயைக் கொட்டிட்டான்.”
“அவன் கன்னத்தில் நீங்கள் அடித்தத் தழும்பு இருக்கிறது.. சுரமாகப் படுத்திருக்கிறான். “

கேட்கும்போது எனக்கு என்னவோபோல் இருந்தது.
என் மனைவி என்னை எரித்து விடுவது போல் பார்த்தாள்.

“நீங்கள் இருவரும் வீட்டிற்கு ஒருமுறை வந்து பார்த்து விட்டுப் போங்கள்.”

நாங்கள் உடனே கிளம்பிப் போனோம்.

கோபி பரிதாபமாகப் படுத்திருந்தான். என்னை மிரட்சியுடன் பார்த்தான்.

“கோபி என்னை மன்னித்து விடு. உன்னை அடிக்க மாட்டேன்,” என்றேன்.

அவன் ஒன்றும் சொல்லவில்லை.

” நீ எப்போதும் போல் என் வீட்டிற்கு வா..விளையாட..” என்றாள் என் மனைவி.

கோபி சிரித்தான் எங்களைப் பார்த்து.

“நான் இனிமேல் உங்கள் வீட்டிற்கு வர மாட்டேன்,” என்றான்.