கம்பனைக் காண்போம்—75/வளவ. துரையன்



பெயர் சூட்டல்

கரா மலைய தளர் கைக்கரி எய்த்தே
அரா அணையில் துயில்வோய் அந்நாள்
விராவி அளித்தருள் மெய்பொருளுக்கே
இராமன் எனப் பெயர் ஈந்தனன் அன்றே [297]
[கரா=முதலை; கரி=யானை; அரா அணை=ஆதிசேடனாகிய படுக்கை; விராவி=வந்து;]

”முதலையுடன் போர் செய்து தளர்ச்சி அடைந்த துதிக்கையை உடைய கஜேந்திரன் என்னும் யானை, இறைவனின் அருளை அறிந்து ‘ஆதிசேடன் மீது அறிதுயில் கொள்ளும் ஆதிமூலமே’ என்று அழைக்க, அக்கணத்திலேயே அங்கு வந்து அதனைக் காத்த உண்மைப் பொருளான திருமாலுக்கு வசிட்டன் ‘இராமன்’ என்னும் பெயரினைச் சூட்டினான்” என்பது இப்பாடலின் பொருளாகும்.

கரி என்பது யானையைக் குறிக்கும் இந்த இடத்தில் கரி என்பது துதிக்கையையே ஆகுபெயராகக் குறிக்கிறது என்பர். ‘கை’ என்பதே தேவையற்ற அடைமொழியாகும். ஏன் துதிக்கையைச் சொன்னார் எனில் யானையானது பிற உறுப்புகளெல்லாம் நீர்க்குள் அமிழ்ந்து கிடக்கத் துதிக்கை மாத்திரம்தான் வெளியில் தெரிந்ததாம். போரிட்டுத் தளர்ந்துவிட்டது. அதைத்தான்’ தளர்’ என்னும் சொல் காட்டுகிறது.

தமிழில் ஈதல் என்னும் சொல் தம்மைவிடத் தாழ்ந்தவர்க்குத் தருவதைக் காட்டும். உண்மைப் பொருள் என்று மேலானவனாகச் சொல்லப்பட்ட திருமால்  உயர்ந்தவன்தானே; அவரை விடத் தாழ்ந்த வசிட்டன் பெயர் கொடுத்ததை எப்படி ‘ஈதல்’ என்று குறிப்பிட்டார் என்னும் கேள்வி எழலாம். திருமாலுக்கு ஆயிரம் பெயர்கள் எல்லாம் இருந்தாலும் தனியாகச் சிறப்பாகக்  குறிப்பிட பெயர் இல்லையாம். வசிட்டனுக்குத் தனிப்பெயர்  உண்டென்பதால் அவர் உயர்ந்தவராம். அதனால்தான் வசிட்டன் ஈந்தான் என்று காட்டப்படுகிறது.