அம்மா இறந்தாள்/பாலகுமாரன்

அம்மா இறந்தாள். நான் அழுதேன். அம்மாவை ஹாலில் கிடத்தியிருந்தார்கள். என்னுடைய நெருங்கிய நண்பர் தேவக்கோட்டை வா. மூர்த்தி வந்தார். அவரைப் பார்த்ததும் அம்மாவின் நினைப்பு அதிகரிக்க அழுதேன். தேவக்கோட்டை வா. மூர்த்தியை தனது இரண்டாவது மகன் என்று அம்மா அடிக்கடி சொல்வார். என்னுடைய சகோதரன் போன்ற நினைப்பு எழுந்ததால் அழுதேன். அம்மாவை வேனில் வைத்து அடையார் மின்சார சுடுகாட்டிற்கு எடுத்து போனோம். அம்மாவை அங்கு கிடத்தியிருந்தார்கள். அடுத்த சிதைக்காக காத்திருந்தார்கள். அம்மாவுக்கு அருகில் உட்கார்ந்த படி, அம்மாவையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன், மிக ஆ சையாய் அவள் நெற்றியை, முகவாயை, தோள்பட்டையை தொட்டு தடவி விட்டேன். எத்தனை அழகு,எத்தனை அமைதி, எத்தனை அனுபவம் என்று பெருமிதப்பட்டேன். அம்மாவை தண்டவாளம் போன்ற இடத்தில் வைத்து, வயிற்றில் வரட்டி வைத்து, மேலே கற்பூரம் வைத்து என்னை கொளுத்தச் சொன்னார்கள். சீதைக்கு தீ மூட்டியது போல அந்த கற்பூரத்தை ஏற்றினேன். அம்மாவை சடேர் என்று உள்ளே தள்ளினார்கள். நெருப்பு உள்ளே வாங்கி கொண்டது, அம்மாவை விழுங்கத் துவங்கியது. நான் கதறினேன். என்னைப் பலரும் தாங்கிப்பிடித்து சமாதானம் செய்தார்கள். அதற்கு பிறகு நான் அழவில்லை. ஏனெனில் அம்மா தனியாக இல்லை. என்னோடு இரண்டறக் கலந்து விட்டார். இன்றைய என் தமிழ் அம்மா எனக்கு பிச்சையிட்ட தமிழ். என் தமிழில் அம்மா இருக்கிறார்.


  • நன்றி: பழனியப்பன் சுப்பிரமணியம்