“அப்பா வாயில மாத்திரை போடு அம்மா”/ரேவதி பாலு

கண்ணன் அடம் பிடிக்கும் குழந்தையை தூக்கிப் பிடித்துக் கொண்டான். லலிதா கையில் ஒரு ஸ்பூனில் மருந்துடன் அவனை சாப்பிடுமாறு கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

“என்னடி இது புதுசா இம்சை ஆரம்பிச்சிருக்க,?” என்றான் கண்ணன் கோபத்துடன்.
” குழந்தை ரொம்ப சோனியா இருக்கான்னு டாக்டர் தான் இந்த டானிக் குடுக்க சொன்னார் சாப்பிட்ட உடனே ” என்றாள் ரெட்டை நாடியான கண்ணனை ஏற இறங்க பார்த்து ஒரு நமட்டு சிரிப்போடு.

“இப்பதானே நீ சாதம் ஊட்டினே? ஒழுங்கா சாப்பிடுறான் தானே?”

“ஆமா! அவனுக்கு புடிச்ச உருளைக்கிழங்கு கறி பண்ணி ஊட்டினேன்.”

” என்னது? எனக்கு கோஸ் கறி தானே போட்ட? உருளைக்கிழங்கு கறி போட்டா நான் சாப்பிட மாட்டேனா?” என்றான் கண்ணன் கோபமாக.

“உங்களுக்கு போட முடியாதுங்க. உங்களுக்கு சுகரும் பிபியும் இருக்கே?”

கண்ணன் கோபத்தில் தொப்பென்று குழந்தையை கீழே இறக்க அவன் தப்பித்தோம் பிழைத்தோம் என்று பொம்மைக் காரை ஓட்டப் போனான்.

” அய்யய்யோ!” என்றாள் லலிதா.
” என்னடீ? ” என்றான் கண்ணன் கோபம் குறையாமல்.

” நீங்க சாப்பிட்ட உடனே போட்டுக்கிற சுகர் ,பிபி மாத்திரை எல்லாம் போட்டுக்க மறந்துட்டீங்களே?” என்ற வள் போய் மாத்திரையை எடுத்து வந்தாள்.

கண்ணன் கோபத்தோடு உடம்பை திருகிக் கொண்டு வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொள்ள, குழந்தை பொம்மைக்காரை தூக்கி போட்டு விட்டு ஓடி வந்தான்.

” அம்மா ! நான் கெத்தியா அப்பாவ புச்சிக்கிறேன். நீ மாத்திரை அப்பா வாயில போடு!” என்றான் சீரியஸான முக பாவத்துடன்.