பூனைகளோடு ஒரு உடன்படிக்கை/எம்.டி.முத்துக்குமாரசாமி

டி.எஸ்.எலியட்டின் கவிதைகளின் மேலுள்ள தீராத மோகத்தால்தான் நான் பூனைகளை இல்லை இல்லை பூனைகளின் புகைப்படங்களை அவ்வபோது பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன் என்று நம்புகிறேன். அவர்தானே கூரைகளின் மேல் நழுவிச் செல்லும், ஜன்னலகளின் கதவுகளில் உரசிச் செல்லும் காலைப்பனியைக் கூட பூனையாக வருணித்தவர்?. உண்மையில் பூனை கவிஞர்களின் ஆதர்ச பிராணி. பூனைக் கவிதைகள் என்று தேடிப்பார்த்தால் ஆயிரக்கணக்கில் கவிதைகள் சிக்குகின்றன. மகாபாரதம் சைசில் ஒரு anthology பதிப்பிக்கலாம் போல. நன்றியுள்ள பாசத்தை நம் மேல் கொட்டுகின்ற நாய்களுக்கு உலகத்தில் கவிதைகள் குறைவு. நாய்கள் திட்டுவதற்கே பயன்படுகின்றன என்பது கூடுதல் செய்தி. இதற்கான காரணமாக முதலில் என் அனுமானம் பூனைகள் photogenic ஆக இருப்பதால்தான் என்பதாக இருந்தது ஆனால் எல்லா பிராணிகளுமே புகைப்படங்களில் அழகாய்தானே இருக்கின்றன? பூனைகளிடத்தே நம் கண்களை உற்று ஊடுருவிப்பார்ப்பது போன்ற பாவனை இருக்கிறது. நம் அந்தரங்க ரகசியங்களெல்லாம் பூனைகளுக்கு தெரியுமோ என்ற சம்சயத்தில் அவற்றோடு நமக்கு ஒரு உறவு நிரந்தரமாகிவிடுகிறது. பூனைகள் நமக்கு நாய்களைப் போல அடிமையில்லை என்பதை அவை உடனடியாக உணர்த்திவிடும். நீங்கள் ஆணாயிருந்தால் பூனைகள் பெண்கள் போலவும் நீங்கள் பெண்ணாயிருந்தால் பூனைகள் ஆண்கள் போலவும் உங்களுக்குத் தோன்றக்கூடும். பழக ஆரம்பித்த உடனேயே உங்கள் நாற்காலி, உங்கள் மேஜை உங்கள் படுக்கை என உங்கள் இடங்கள் அனைத்தையும் பூனைகள் ஆக்கிரமிப்பு செய்யும். நீங்கள் அதட்டினால் பதிலுக்கு அவை சீறும்; முறைத்து பார்த்தால் பதிலுக்கு முறைக்கும். பூனைகளின் சுதந்திரமும் தன்னம்பிக்கையும் சுய கௌரவமும் அலாதியானது; நமக்கு வியப்பு ஏற்படுத்துவது.
நம் மடியில ஏறி சிணுக்காட்டம் போடுவதும், தலையைத் தடவினால் செல்லமும் சொகுசும் பேணுவதும் கூட பூனைகளுக்கு கைவந்த கலை. ஃப்ரெஞ்ச் எழுத்தாளரான செலின் தான் வளர்த்த பூனையின் கதையை விரிவாக எழுதியிருக்கிறார். செலின் தன் பூனைக்கு கேன்சர் வைத்தியமெல்லாம் பார்த்து பராமரித்து வைத்திருந்தபோதும் அது ரயிலில் பயணம் செய்யும்போது ஜன்னல் வழி குதித்து தப்பி ஓடிவிட்டது. ஹருகி முராகமியின் புனைவுகளில்தான் பூனைகள் எத்தனை அர்த்த மடிப்புகள் ஏற்கின்றன! ஷ்ரோடிங்கரின் பூனை பரிசோதனை ஒரு முக்கியமான paradoxஐ சொல்வது. ஷ்ரோடிங்கரின் பூனையை நீங்கள் இறந்துவிட்டது என நினைத்தால் அது இறந்துவிட்டதுதான் அது உயிரோடு இருக்கிறது என நினைத்தால் அது உயிரோடு இருக்கிறதுதான். இதுதான் -ஷ்ரோடிங்கரின் பரிசோதனை இல்லாமலேயே – என் அனுமானமும் கூட. நீங்கள் உங்கள் பூனை உங்கள் அந்தராத்மாவை உற்று நோக்குகிறது என்று நினைத்தால் அது அப்படி உங்களை உற்று நோக்குகிறதுதான் இல்லை அது எங்கோ பார்க்கிறது என நீங்கள் பார்த்தால் அது எங்கோ பார்க்கிறதுதான். இப்படியாக புறவயமான உண்மை என ஒன்றோ பலவோ இருப்பதையே மறுப்பதுதான் பூனை அனுபவமாகும். பாரதியின் பூனை ஏன் மஞ்சள் நிறம் நகுலனின் பூனை ஏன் அவரைப்போலவே தனிமையில் உழல்கிறது என்ற கேள்விகளுக்கும் பதில் இதுதான். No objective truth is possible when it comes to cats. இதனாலேயே நான் பூனைகளைத் துறக்க விரும்புகிறேன். மேலும் ஒரு காரணமும் இருக்கிறது. இப்போது என் நாவலை நான் தினசரி எழுதிக்கொண்டிருக்கிறேனா பக்கத்திற்கு ஒரு முறையாவது – என்னுடைய பூனைப்புகைப்படங்களைப் பார்க்கும் பழக்க தோஷத்தினால்- பூனைகள் ஏதோ ஒரு உருவகமாக எட்டிப்பார்க்கின்றன. இதையும் நான் விரும்பவில்லை. இதனால் நான் இப்போது செய்திருப்பது என்னவென்றால் கண்ணோடு கண் நோக்கி, ஆழமான ஆத்ம பரிமாற்றம் செய்து, ரகசியங்களைப் பகிர்ந்து, மேன்மைகளில் கரைந்து, கீழ்மைகளில் கூசி என் பூனைகளிடமிருந்து நான் விடைபெற்றதுதான். I seek objective truths.