விழிப்புணர்வு பலகை/செ.புனிதஜோதி

பேருந்து நிலையத்தில்
தொழுநோய் ஒழிப்பு பலகை
கவனிப்பாரற்று
வெறித்தபடி நிற்பதைப் பார்கிறேன்
சட்டெனப் பள்ளிகால
விழிப்புணர்வு நாடக மேடைக்குள்
அழைத்துச்செல்கிறது

வண்ணத்துப்பூச்சிகள்
நிறைந்த ஊதா நிறப்புடவையில்
வலம் வருகிறேன்
மருத்துவ ஆலோசகராய்

இன்று முழுநேரம்
வாழ்க்கைப்பிடிக்குள்
முடங்கிக்கொள்ளும்
கூட்டுப்புழுக்களில்லை

சிறகுகள் விரிந்து பறக்கும்
வண்ணத்துப்பூச்சிகள்
நிறைந்திருந்தன

எவரிடத்திலும்
சிறு வட்ட பத்தை,தழும்பை
கண்டவுடன்
கிள்ளிப்பார்த்து
உணர்ச்சி இருக்கிறதா?
கேட்பதற்கு முன்
‘ஆ’ என்ற அலறலில்
உணர்ச்சி இருக்கிறது
உங்களுக்கு தொழுநோயில்லை
கத்தி ஓடிச்செல்லும்

ஞாபகத்தை அள்ளிசேர்கையில்
கூட்டுப்புழுக்கள் உடைந்து
மீண்டும்வண்ணத்துப்பூச்சிகள்
என்தோள்களில் அமரகின்றன

பட்டோளி வீசி பறக்கிறது
விழிப்புணர்வு பலகை