தனம்/அழகியசிங்கர்

அவள் நினைத்த மாதிரி எந்த விஷயமும் நடக்கவில்லை.

கல்லூரியில் படிக்கும் அவள் பெண் ரேவதி யாரோ ஒரு பையனுடன் சுற்றிக்கொண்டிருக்கிறாள் என்ற செய்தியைக் கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்து விட்டாள்.

பெண்ணிடம் இதைப் பற்றி எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை.

இந்த விவரம் தனத்திற்கு தெரிந்த ஒருத்தர் மூலம் தெரிய வந்தது.

உடனே சிக்கல் தொடங்கிவிட்டது. எப்படி பெண்ணிடம் இதைப் பற்றிப் பேசுவது ?

பல நாட்களாக இதே சிந்தனையாக இருந்தாள்.

தனம் வாழ்க்கை விசித்திரமானது. இடர்பாடுகளைக் கொண்ட வாழ்க்கை அது.

அவள் கணவன் எதிர்பாராத விதமாக அவளை விட்டுப் போன பிறகு. எப்படி வாழ்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்.

தனம் கல்லூரியில் படித்த காலத்தில் அவளும் ஒரு பையனை விரும்பினாள். அப்போதெல்லாம் தமிழ் நாடு முழுவதும் நடந்த ஆணவக் கொலைகள் அவளுக்கு விபரீதமான எண்ணத்தை உருவாக்கியது.

அப்போதே அவனைப் பிடித்திருந்தாலும் அவனை விட்டு விலகி நடந்து கொண்டாள். அவனும் அவள் விலகலைப் புரிந்துகொண்டு விட்டான்.

கல்லூரி படிப்பு முடிந்தவுடன் அவளுக்குத் திருமணம் நடந்தது. அவளுக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்காத மண வாழ்க்கை. ஜாதி அபிமானியான அவள் அப்பா ஏற்பாடு செய்த திருமணம்.

ரேவதி பிறந்தவுடன் அவள் கணவன் அவளுடன் தொடர்ந்து வாழவில்லை.
அவனுடன் வாழ்வதைவிட பிரிந்து இருப்பதே மேல் என்று நினைத்தாள்.

அவன் பிரிந்து போகிற சமயத்தில் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி இருந்தாள். அவளுக்கும் சாதாரண உதவியாளர் வேலை கிடைத்தது.

இப்போது யோசித்துப் பார்க்கும்போது கிட்டத்தட்ட அவள் காலமும் முடிந்து விட்டது என்றே தோன்றியது.

தன் பெண் வாழ்க்கை சரியாக அமைந்தால் போதும் என்ற நிலைக்கு வந்திருந்தாள். பெண்தான் அவளுக்கு எல்லாம். அவள் வாழ்க்கை சரியாக அமைந்தால் போதும். ரேவதி யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். தடுக்க ஜாதி வெறிப் பிடித்த பெற்றோர் இல்லை.

அன்று காலையில் ரேவதி அலுவலகத்துக்குப் போவதற்கு முன்னால் அவளிடம் பேசலாமென்று நினைத்தாள் தனம்.
ஆனால் அன்று அவசரமாக அலுவலகத்திற்கு ரேவதி போக வேண்டியிருந்தது. அதனால் அம்மா என்ன பேசப்போகிறாள் என்பதை கேட்கக் கூட அவளுக்கு நேரமில்லை .

இனிமேல் சனி ஞாயிறுகளில்தான் ரேவதியுடன் பேசமுடியும்.

ஆனால் அவள் சனி ஞாயிறுகளில் பொதுவாக வீட்டில் இருக்கும்போது அதிக நேரம் தூங்குவாள்.

எது பேசினாலும் எரிந்து எரிந்து விழுவாள்.

தனத்திற்கு எப்படி அவளிடம் இதைப் பற்றி பேசுவது என்ற சிக்கல் காலையிலிருந்து ஆரம்பித்து விட்டது.

அன்று சனிக்கிழமை. அவளுடன் பேச வேண்டுமென்று தீர்மானித்திருந்தாள். எப்போது பேசலாமென்று காத்துக் கொண்டிருந்தாள்.

பகல் 12 மணிக்கு தனம் அவளுடன் பேச ஆரம்பித்தாள்.

“எனக்கு எல்லாம் தெரியும் நீ ஒரு பையனுடன் தொடர்ந்து பழகிக் கொண்டி ருக்கிறாய் என்று.”

இதைக் கேட்டவுடன் ரேவதி அதிர்ச்சியுடன் அம்மாவைப் பார்த்தாள்.

“இப்போது என்ன அதற்கு?” என்று கொஞ்சம் நிதானமாக அம்மாவைப் பார்த்து கேட்டாள் ரேவதி.

“நான் பயந்த மாதிரி உனக்கு ஏற்படக் கூடாது. நீ விரும்புகிறேன் என்றால் திருமணம் செய்து கொள். என் காலத்துல என்னைத் தடுத்தா மாதிரி உன்னைத் தடுக்கவில்லை.”

நிதானமாக ரேவதி சொன்னாள்.
“நாங்கள் இருவரும் சேர்ந்து வாழப் போகிறோம். திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை.”

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து விட்டாள் தனம்.
அவளுக்குத் துக்கம் தாங்க முடியவில்லை.
கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது.