திடீர் மழை/மீனாட்சி சுந்தரமூர்த்தி

நெடுநாளாய்ப் பூக்காத மரம்
கிளையெலாம்
கொத்து கொத்தாய்
மலர்ந்தால்,

சுடுமணலாய் உலர்ந்திருந்த
மண்சாலை
கரைபுரண்டு நதியாய்
ஓடினால்,

அன்றாடப் பாட்டிற்கே
ஆலாய்ப்
பறந்தோர் குடம் கனக்கப்
புதையல்
எடுத்திட்டால்,

கஞ்சன் ஒருவன் வந்தவர்
போனவர்
எவர்க்கும் வாரி வாரி
வழங்கினால்.

நெடுநாளாய்க் காய்ந்திருந்த
வயல்வெளி
பச்சைப். பட்டு
விரித்தால்,

இருண்ட வானில் மின்மினித்
தாரகை
சூழ வெள்ளிநிலா முகம்
காட்டினால்.

கொள்ளை இன்பம் பொங்கும்
அதுபோல்
சடசடவென வந்தாய்
திடீர் மழையே. !

ஆனால் நீயோ சரம்சரமாய்
அம்பெடுத்துத்
தைப்பதுதான் ஏனோ ???

.