பங்காளி /சுஜாதா


(வெளிவந்த வருடம் 1981)

முகநூலில் : ராம் ஸ்ரீதர்


ஐதராபாத்தில் பிளேன் இறங்கினபோது சற்று கைகால்களை நீட்டிக்கொள்ளலாம் என்று வெளியே வந்தேன். விமான நிலையத்தின் பெரிய ஹாலில் கூட்டமாக இருந்தது. கண்ணாடிக் குப்பைகளை அலங்கரித்து விற்றுக்கொண்டிருந்தார்கள். காலர் இல்லாத சட்டையும், ஆந்திர வகை பஞ்சகச்சமும் அணிந்தவர்கள் இங்கும் அங்கும் உலாவிக்கொண்டிருந்தார்கள். ஒரு குடும்பம் மொத்தமும் ஒரே ஒரு சேட்டை வழியனுப்ப வந்திருந்தது சுவாரஸ்யமாக இருந்தது.
முப்பது வயதிலேயே அவனுக்கு இளம் தொந்தி. நெற்றியில் அவசரக் குங்குமம். பக்கத்தில் மனைவி, சுற்றத்தார். நிமிஷத்துக்கு நிமிஷம் பளிச் பளிச்சென்று ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்கள். வெளிநாடு போகிறான் போலும்.கல்கத்தா வழியாகவா என்று யோசித்தேன். அவன் மனைவிக்கு இருபத்து ஐந்து வயசு இருக்கலாம். தலை, முகமெல்லாம் போர்த்தியிருந்தாலும் துணியின் சன்னத்தால் அழகாக, பிள்ளை பெற்றுக் களைத்த முகம் தென்பட்டது. இடுப்பில் சிவப்பாக ஒரு குழந்தை ஒட்டிக்கொண்டு ரவிக்கையை விலக்க முயற்சித்துக்கொண்டிருந்தது. அவள் அணிந்திருந்த ஏராளமான வளையல்கள் புலம்பின. மற்றொரு முறை உண்டாயிருக்கிறாள் போலும். சேட்டு அவளுடன் அந்நியோன்யமாகப் பேசிக்கொண்டிருக்க வார்த்தைக்கு வார்த்தை சிரித்துக் கொண்டிருந்தான். ஸஃபாரி சூட் அணிந்த பையனின் தொணதொணப்பை யாரும் கவனிக்கவில்லை. பெண் ஒன்று ஆறு ஏழு வயசில் ‘அமர் சித்ரகதா’ படித்துக்கொண்டிருதது.
பிளேன் புறப்படுவதை அறிவித்துவிட, குடும்பத்தார் அனைவரும் முத்தம் கொடுக்காத குறையாக அவனுக்கு வழியனுப்பிப் பால்கனியிலிருந்து டாடா கட்ட மாடிப்படி நோக்கிச் சென்றார்கள். அந்த ஊட்டமான சேட் எனக்குப் பின்னால் க்யூவில் சேர்ந்துகொண்டு என்னைப் பார்த்துச் சிரித்தான். செக்யூரிட்டி முடிந்து வெளியே வந்து விமானம் நோக்கி நடக்கும்போது பால்கனியைத் திரும்ப நோக்கி டாடா காட்டினான். தூரத்தில் ஏரோப்ளேன் படிகளிலிருந்து திரும்பி நிதானமாக டாடா காட்டி முத்தங்களைப் பறக்கவிட்டான். என் பக்கத்தில் உட்கார்ந்தான். விமானம் புறப்படும்வரை முட்டைக் கண்ணாடி வழியாக டாடா காட்டினான். ரன்வேயில் ஓடும்போது கூடத் தூரத்தில் தெரிந்த புள்ளிகளை நோக்கி டாடா காட்டிவிட்டு கடைசியாகத் திரும்பும்போது கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக்கொண்டான். அழுகிறான் ! எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
“வெளிநாடு போகிறீர்களா?” என்று கேட்டேன்.
“இல்லை, கல்கத்தா வரைதான்”
“ரொம்ப நாள் கல்கத்தாவில் தங்கப்போகிறீர்களா?”
“இல்லையே ! இரண்டு மூன்று தினங்கள்தான்…ஓ “
என் கேள்வியின் காரணத்தைப் புரிந்துகொண்டு “என் மனைவியை விட்டு என்னால் ஒரு தினம்கூடப் பிரிந்திருக்க முடியாது. அதனால்தான்.” எனக்கு ஆச்சரியம் குறையவில்லை. மூன்று நாள் பிரிவுக்கு இத்தனை ஆர்பாட்டமா? அதுவும் புதுசாகக் கல்யாணம் ஆனவனாகவும் தெரியவில்லை. எனக்குத் தெரிந்தவரையில் வயிற்றில் உள்ளதையும் சேர்த்து நான்கு குழந்தைகள் எண்ணினேன். சேட்டுடன் பேச்சுக்கொடுத்ததில் ஐதராபாத்தில் டெக்ஸ்டைல் மொத்த வியாபாரம் பண்ணுகிறானாம். “அபிட்ஸ்” அருகில் ஏதோ ஒரு சந்தில் விலாசம் சொல்லிக் கார்டு கொடுத்தான். எங்கெங்கே எது சல்லிசாகக் கிடைக்கிறதோ அதையெல்லாம் போய் வாங்கி வந்துவிடுவானாம்/ தமிழ்நாடு என்று சொன்னதும் பவானி ஜமக்காளம், சேலம் கைத்தறிச் சேலை எல்லாம் சொன்னான். தசராவுக்கு முன் சீப்பாக கிடைக்குமாம். நாற்பது, ஐம்பதாயிரத்துக்கு எடுத்து வருவானாம்.
ஏரோப்ளேனில் சப்பணமிட்டு உட்கார்ந்துகொண்டு ஜிப்பாவுக்குள் ஒளித்து வைத்திருந்த சின்ன டப்பாவை எடுத்து அதிலிருந்து சூரணம் கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக்கொண்டு எனக்கும் காட்டினான்.
“வேண்டாம். நான் இதெல்லாம் சாப்பிடுவதில்லை.”
“வெறும் ஜீரண சூரணம். ஜர்தா எதுவும் இல்லை. என் மனைவி கைப்படச் செய்தது…”
நான் சாஸ்திரத்துக்கு ஒரு சிட்டிகை எடுத்து வாயில் போட்டுக்கொண்டேன். ஏலம், லவங்கம், ஜாதிபத்திரி எல்லா வாசனையும் வந்தது.
“எப்படி இருக்கிறது?”
“குட்”
“என் வீட்டில் எல்லாமே சுத்த நெய்யில் தயார் செய்தது. உங்கள் தென்னிந்திய பிராமணர்களைவிட சைவம். முட்டைகூடத் தொடமாட்டோம். வெளியே சாப்பிட மாட்டோம். இப்போது இரண்டு நாட்களுக்கு உண்டான சப்பாத்தியை என் மனைவி கட்டிக் கொடுத்திருக்கிறாள். வெளியூர்களில் மோர்தான் சாப்பிடுவேன். ஏர்லைன்ஸ் கொடுக்கும் சாப்பாட்டில் ‘புடிங்’ மட்டும்தான் உண்பேன்” என்றான்.
பையிலிருந்து கத்தையாக நூறு ரூபாய் நோட்டுக்களைப் பிரித்து வைத்துக்கொண்டு எண்ணினான். நோட்டில் அவர்கள் எண்ணிக்கையில் கணக்குப் போட்டான். போட்டு முடித்ததும் “கடவுள் எனக்கு குறை வைக்கவில்லை. இரண்டு பையன், ஒரு பெண். பையன் இப்போதே உல்லி உல்லி, ஜார்ஜெட் எல்லாம் சொல்கிறான். ‘பிட்டு’ இப்போதே கால்குலேட்டரில் கணக்குப் போடுகிறது. என் மனைவி போல ஒருத்தியைப் பார்க்க முடியாது. அதனால்தான் அவளைப் பிரிந்திருக்க ஒரு நாள்கூட இயலவில்லை. அவளைப் பார்த்தீர்கள் அல்லவா? ஏர்போர்ட் வந்திருந்தாள் !”
“பார்த்தேன்.”
“உங்களுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா?”
“ஆகிவிட்டது. என் மனைவி ஏர்போர்ட்டுக்கெல்லாம் வந்து டாட்டா காட்டமாட்டாள்” என்றேன்.
“நாங்கள் உறவில்தான் பெண் எடுப்போம். சொத்து குடும்பத்தை விட்டுப் போகக்கூடாது பாருங்கள். எங்கள் வீட்டில் எத்தனை பேர் வசிக்கிறோம் சொல்லுங்கள் பார்க்கலாம்?,”
எனக்குச் சொல்லத் தெரியவில்லை.
“பதினெட்டு பேர். இந்தியக் குடும்பம் சிதைந்துவிட்டது. பெரியவர்கள் பேச்சை யாரும் கேட்பதில்லை. இன்றைக்கும் என் அப்பா பெரியவர் வந்திருந்தாரே, பார்த்தீர்கள் இல்லையா? தொன்னூறு !. என் மனைவி வேலைக்குப் போவதில்லை. மனைவியின் இடம் வீட்டில்தான். என் மனைவி மாதிரி ஒரு பெண் அரிது. காலை ஐந்து மணிக்கு எழுந்திருப்பாள். நான் கடைக்கு ஆறரைக்குக் கிளம்பிவிடுவேன். என் தம்பிமார்கள் கோடவுனைப் பார்த்துக்கொள்ள, நான்தான் கடையைப் பார்த்துக்கொள்வேன். கணக்கெல்லாம் இன்னும் அப்பாதான். தொன்னூறு வயசு. கால்குலேட்டர் தேவையில்லை அவருக்கு. மனைவி எனக்கு வெந்நீர் எடுத்து வைப்பாள். பனியன், ஜட்டி எல்லாம் எடுத்துவைத்து ஷேவிங்குக்கு வெந்நீர் எடுத்து வைப்பாள். ‘காக்கா’வுக்கு தேநீர் போட்டுத் தந்துவிட்டு, அம்மாவுக்குப் பூஜை சாமான்கள் எடுத்துவைத்துவிட்டு எனக்கு ரொட்டி, நாஷ்தா. அப்புறம் குழந்தைகளைக் காரிலேற்றி கான்வெண்டுக்கு அனுப்ப வேண்டும், அவர்களைக் குளிப்பாட்டி. என் குழந்தைகள் மட்டுமல்ல, தம்பி பிள்ளையும்.”
அவன் மனைவி அவன் குடும்பத்தில், வீட்டில் எல்லா வேலைகளையும் செய்யும் ஒருவிதமான அச்சாணி என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அவன் சொன்ன டைம்டேபிள்படி இரவு பன்னிரண்டு மணிவரை அவளுக்குக் கைக்காரியம் ஏதாவது இருக்க வேண்டும்.
“அதன்பின்தான் துளசிதாஸ் ராமாயணம் கொஞ்சம் படித்துவிட்டு …அவள் அதிகம் படித்ததில்லை. படிக்காவிட்டால் என்ன?”
“மற்ற மருமகப் பெண்கள்?”
“அவர்களும் பங்குகொண்டுதான் செய்வார்கள். ஒரு சண்டை கிடையாது. சினிமா, கினிமா ஏதும் கிடையாது. எப்போவாவது ராத்திரி ஷோ போவோம். வேண்டுமென்றால் வீடியோ பார்த்துக்கொள்வோம்…” இந்த நாட்களில் இப்படியொரு குடும்பம் இருப்பதை நம்ப முடிகிறதா?
விமான பணிப்பெண் வெஜிடேரியன் விசாரித்துக்கொண்டு ஜிகினா மூடிய பிளாஸ்டிக் தட்டில் உணவை வைத்துவிட்டுச் சென்றாள். அதில் டெஸர்டை மட்டும் எடுத்துக்கொண்டு தன் கைப்பையிலிருந்து சின்ன டிபன்பாக்ஸ் எடுத்து அதிலிருந்து ரெண்டு சப்பாத்தியும், ஊறுகாயும் விடுவித்துக்கொண்டு சின்னதாக இன்ஜெக்ஷன் வையல் அளவிருந்த பாட்டிலிலிருந்து நெய்யும் எடுத்துக்கொண்டு “சொல்லுங்கள், நம்ப முடிகிறதா?”
“இல்லை” என்றேன்.
“எங்கள் வெற்றிக்குக் காரணம் என்னவென்று சொல்லட்டுமா?”
நான் வேண்டாம் என்றாலும் சொல்லத்தான் போகிறான். எனவே, “சொல்லுங்கள்” என்றேன். “நம்பிக்கை! கணவன் மனைவி மேல், மனைவி கணவன் மேல் ! விசுவாசம் ! இது இருந்துவிட்டால் மற்றதெல்லாம் ஒரு பொருட்டல்ல. இப்போது நான் வெளியூர் வந்திருக்கிறேன் அல்லவா? என் மனைவி டிரஸ் பண்ணிக் கொள்ள மாட்டாள். அன்னிய புருஷர்களுடன் பேசமாட்டாள். என் அப்பாவிடம் கூட – தொன்னூறு வயசு – முகத்தைக் காட்டமாட்டாள். இத்தனைக்கும் உறவுதான்! இப்படியல்லவா இருக்க வேண்டும் மனைவி ! இவளை விட்டுப் புரிவதில் எனக்கு வருத்தம் இருப்பது நியாயம்தானே? பெண்ணுரிமை என்கிறார்களே, என் மனைவியை நான் எப்படிக் கூப்பிடுவேன் தெரியுமா?”
நான் எப்படி என்று கேட்பதற்கு அவன் காத்திருக்கவில்லை.
“பாகவான் என்று. பாகவான் என்றால் பங்காளி, வாழ்வின் சுகதுக்கங்களில் பங்காளி என்று அர்த்தம்”
“பொயட்டிக்” என்றேன்.
“கூட்டுக குடும்பம் சிதையாமல் கணவன் மேல் மனைவிக்கும், மனைவி மேல் கணவனுக்கும் விசுவாசம் இருந்தால் உலகத்தில் பிரச்சனைகளே கிடையாது” என்றான்.
“என் கடையிலே எத்தனை பெண்கள் வேலை செய்கிறார்கள். அவர்களை எரித்துப் பார்க்கமாட்டேன். தேவையில்லை. மனைவி வீட்டில் இருக்கும்போது இதெல்லாம் எதற்குச் சொல்லுங்கள். என்ன சொல்லுகிறீர்கள்?”
வாழ்க்கை என்பது அத்தனை எளிதாக இருந்தால் பரவாயில்லை என்று சொல்லத் தோன்றியது. அந்த மனைவி எப்பேற்பட்ட இந்திய பெண், தாய்க்குலத்தின் தங்கப் பிரதிநிதி, கணவன் இல்லையெனில் மையிட்டு எழுதாத, மலரிட்டு முடியாத மனைவி, அவள் பெருமையைப் பிரயாணம் முழுவதும் பேசிக்கொண்டிருந்த கணவன் ! இம்மாதிரி ம்யூஸியம் பிறவிகளும் இருப்பதைக் கண்டு எனக்கு சந்தோஷமாகவே இருந்தது.
கல்கத்தா விமான நிலையத்துக்கு வந்து இரங்கி லக்கேஜ் கிளியர் பண்ணிக்கொண்டு அவனிடம் கடைசி முறையாக விடைபெற்றபோது “யூ ஆர் லக்கி” என்றேன்.
கடைசிமுறை என்றா சொன்னேன்?
கெஸ்ட்ஹவுஸில் பெட்டி படுக்கையைப் போட்டபோது பசித்தது. இருட்டியிருந்தது. பார்க் ஸ்ட்ரீட்டில் ஒரு ரெஸ்டாரண்டில் போய் தந்தூரி ரொட்டியும் சப்ஜியும் கட்டித் தயிரும் சாப்பிட்டுவிட்டு, நியான்களின் ஊடே நடந்தபோது சந்தின் இறுதியில் ரிக் ஷாக்காரன் பின்னால் முணுமுணுத்துக்கொண்டே வந்தான். கிட்டத்திலேயே நிறையப் பெண்கள், பற்பல மாநிலங்களிலிருந்து என்னுடைய சந்தோஷத்துக்காக காத்துக்கொண்டு இருப்பதாக. பார்க் ஸ்ட்ரீட் விளிம்புவரைகூட இந்த வியாபாரம் வந்துவிட்ட கல்கத்தாவின் முன்னேற்றத்தை வியந்து விரைவாக நடக்க, என்னை மெதுவாக ‘பாஜு பாஜு’ என்று கடந்து சென்ற ரிக் ஷாவில் ஒரு பெண்ணின் தோளின்மேல் கைபோட்டுக்கொண்டு, மணிக்கட்டில் மல்லிகை மாலையும் மற்றொரு கையில் ஃபில்டர் சிகரெட்டுமாகச் சென்றவனை உற்றுப்பார்த்ததில்….சேட் !
நம்ப முடியவில்லை! பெங்கால் காட்டன் ஸாரிகளின் மொத்த விலை கேட்கிறான் போலும் அந்தப் பெண்ணிடம் !

One Comment on “பங்காளி /சுஜாதா”

  1. அழகா எடுத்துக்கொண்டு செல்லும் கதை.
    “பெங்கால் காட்டன் ஸாரிகிளின் மொத்த விலை கேட்கிறான் போலும் அந்தப் பெண்ணிடம்” முடிவில்
    என்ன ஒரு நையாண்டி வார்த்தைகள்.
    கடைசி லைன் பஞ்ச் வைப்பதில் மன்னர் அவர்

Comments are closed.