
விலை போன பூர்வீக வீட்டை
மறுபடியும் பார்க்கும்
ஒரு நிகழ்வு வாய்த்தது
எல்லாம் மாறிப் போயிருந்தன
ஜன்னல் இருந்த இடத்தில் கதவு
கதவு இருந்த இடத்தில் ஜன்னல்
குளியல் அறை பூஜை அறையாயிற்று
படுக்கையறை சமையல் கூடமாய்யிருந்தது
வீட்டில்
வெளிச்சம் குறைந்து இருள் நிறைந்திருந்திருந்தது
வீடு வீடாகவேயில்லை ….
இருக்கவே பிடிக்கவில்லை
அந்த இல்லாத வீட்டில் .
விடை பெற எத்தனித்த பொழுது
அந்த வீட்டின் இன்றைய எஜமானியம்மா
இந்தாங்க என்று ஒரு பழைய டையரி
தந்தார்கள்
அத்தனையும் சமையல் குறிப்பு
அம்மாவின் கையெழுத்தில்….
படிக்கப் படிக்க
மெல்லப் புரட்டுகிறது டையரி
என் ஞாபகங்களின் பக்கங்களை
அம்மாவின் சமையல் மணக்க.
இப்போது இருக்க பிடிக்கிறது
அந்த வீட்டில்…… ஆனால்??
வந்து சேருகிறேன்
வாசம் மாறாத அந்த பழைய வீட்டை
என்னோடு
எடுத்துக் கொண்டு
என் வாடகை வீட்டிற்க்கு.

அருமை. அம்மா என்று வந்து விட்டால் எல்லாம் பிடித்துப் போகும்.
Very True