ஆசாரக்கோவை46—50/பாச்சுடர்வளவ.துரையன்

பாடல் 46 : இல்லம் பொலியச் செய்வன

காட்டுக் களைந்து கலங்கழீஇ இல்லத்தை
ஆப்பிநீர் எங்கும் தெளித்துச் சிறுகாலை
நீர்ச்சால் கரகம் நிறைய மலரணிந்து
இல்லம் பொலிய அடுப்பிலுள் தீப்பெய்க
நல்ல துறல்வேண்டு வார்.

‘பொருள் :
நல்ல செல்வத்தை அடைய விரும்புபவர், அதிகாலையில் எழுந்து, பாத்திரங்களைக் கழுவி, வீட்டைப் பெருக்கி (பசுஞ்சாணம் தெளித்துத்) தூய்மை செய்து, குடங்களில் நீர் நிறைத்து, மலரணிந்து, இல்லம் விளங்கும்படி அடுப்பில் தீ மூட்டுதல் வேண்டும்.

பாடல் 47 : படிக்கலாகாத நாட்கள்

அட்டமியும் ஏனை யுவாவும் பதினான்கும்
அப்பூமி காப்பார்க் குறுகண்ணும் மிக்க
நிலத்துளக்கு விண்ணதிர்ப்பு வாலாமை பார்ப்பார்
இலங்குநூல் ஓதாத நாள்.

பொருள் :
அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி, சதுர்தசி, அரசர்க்கு (நாட்டிற்கு) ஆபத்துக் காலம், பூகம்பம், இடிமுழக்கம், தமக்குத் தூய்மை போதாத நாள் என்னும் இவை வேதம் ஓதக்கூடாத நாட்கள்.

பாடல் 48 : அறஞ்செய்தற்கும் விருந்திடுதற்கும் உரிய நாள்கள்

கல்யாணம் தேவர் பிதிர் விழா வேள்வியென்று
ஐவகை நாளும் இகழா தறஞ்செய்க;
பெய்க விருந்திற்குங் கூழ்.

பொருள் .
திருமண நாளிலும், தெய்வங்களுக்கு சிறப்பான நாளிலும், பித்ருக்களுக்கு சிறப்பு செய்யும் நாளிலும், திருவிழா நாளிலும், வீட்டில் விசேஷ யாகம் முதலானவை செய்யும் நாளிலும் தானம் முதலான அறங்களைச் செய்யவேண்டும்; அன்னதானமும் செய்யவேண்டும்.

பாடல் 49 : இன்னதற்குத் தக இன்னது செய்தல்

உடைநடை சொற்செலவு வைதலிந் நான்கும்
நிலைமைக்கும் கல்விக்கும் ஆண்மைக்கும் தத்தம்
குடிமைக்கும் தக்க செயல்.

பொருள் :
உடை உடுத்தும் முறை, நடத்தை முறை, பேசும் முறை, பிறரைத் திட்டும்முறை ஆகிய நான்கும் அவரவருடைய (அப்போதைய) நிலைமை, அறிவு, தைரியம், குடும்ப பாரம்பர்யம் ஆகியவற்றின் அடிப்படையில் அமையும்.

பாடல் 50 : தவிர்வன சில

பழியார் இழியார்; பலருள் உறங்கார்;
இசையாத நேர்ந்து கரவார்; இசைவின்றி
இல்லாரை எள்ளி இகழ்ந்துரையார்; தள்ளியும்
தாங்கருங் கேள்வி யவர்.

பொருள் :
நல்ல கேள்வி அறிவுடையவர் பலர் முன்னிலையில் ஒருவரை பழி சொல்லிப் பேசமாட்டார், இழித்தும் பேசமாட்டார்; பலர் முன்னிலையில் படுத்துறங்க மாட்டார். தம்மால் செய்ய முடியாததை செய்வேன் என்று பிறருக்கு வாக்குக் கொடுத்துப் பின்பு செய்யாமல் இருக்கமாட்டார்; இல்லாதவரைக் கேலிசெய்து இகழ்ந்துரைக்க மாட்டார்.