உலகமே அழும்போது நான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தேனா?/எம்.டி.முத்துக்குமாரசாமி



நம் காலத்தில் நிகழ்த்துவதற்கான நாடகப் பிரதி சாமுவேல் பெக்கெட்டின் End Game என்பது என் அபிப்பிராயம். எண்ட் கேம் நாடகத்தில் நான்கே கதாபாத்திரங்கள்தான்; இரண்டு பெண் கதாபாத்திரங்கள் நெற்குதிர் அளவுள்ள குப்பைத்தொட்டிக்குள் மேல் மூடியை மூடிக்கொண்டு உடகார்ந்திருப்பார்கள் ( நாம் கொரோனாவின்போது வீட்டுக்குள் அடைந்திருந்தது போல) குருடும் நொண்டியுமாய் ஒரு ஆண் கதாபாத்திரம் குப்பைத்தொட்டிகளிலிருந்து சற்று தூரத்தில் நாற்காலியிலும் அவரைத் திட்டிக்கொண்டே அவருக்கு உதவியாளாக இன்னொருவரும் இருப்பார்கள். பெக்கெட்டின் புகழ் பெற்ற நாடகமான கோடோவுக்காக காத்திருத்தல் நாடகத்தில் ஒரு பட்டுப்போன மரத்தின் கீழே ஒரு பெஞ்சில் விளாடிமிர், எஸ்ட்ரோஜென்

என்ற இரண்டு tramps கோடோ என்பவருக்காக காத்திருப்பார்கள். நாடகத்தில் ஒரு கட்டத்தில் விளாடிமிர் உடைந்துபோய் ‘உதவி’ என்று கதறுவான். எஸ்ட்ரோஜென் ‘உலகமே அழும்போது நான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தேனா’ என்று கேட்டுக்கொண்டிருப்பான். இந்த எளிய வரிகளையே ஒரு நூற்றாண்டின் பிரச்சனையை சொல்லும் வரிகளாக விமர்சகர்கள் குறிப்பிடுவார்கள். பெக்கெட்டின் நாடகக் காட்சி அமைப்புகள் அதுவரை இருந்த நாடகங்களின் காட்சி அமைப்புகளை முற்றிலுமாக மாற்றின. பெக்கெட்டின் ஒரு நாடகத்தில் புதைகுழிகளில் மார்பளவு அமிழ்ந்துகொண்டு, அது பற்றிய உணர்வேயில்லாமல் சாதாரணமாக பல் துலக்கி, உண்டு, பேசி களித்து இருப்பார்கள். Krapp’s Last Tape நாடகத்திலோ ஒரு டேப் ரிகார்டரை நிறுத்தி ஓட விட்டு பேசும் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே உண்டு. பால் எலுவார்ட் போன்ற ஃப்ரெஞ்ச் சர்ரியலிச கவிஞர்களை பெக்கட் மொழிபெயர்த்ததன் விளைவாக அவற்றின் தாக்கத்தில் பெக்கட்டின் காட்சி அமைப்புகள் உருவாகியிருக்கலாம். நாவல், கவிதை, நாடகம் அனைத்திலும் பெக்கெட் எளிய பேச்சுமொழிக்கு அணுக்கமான சொற்களையே பயன்படுத்தினார் ஆனால் அவைதான் எவ்வளவு கவித்துவமாக நம் சமூகப் பிரச்சனைகளை நம் முன் நிறுத்தின! இரண்டாம் உலகப் போரின் போது ஃப்ரான்ஸ் நாஜிப்படைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டபோது பெக்கட்டும் அவர் மனைவி சுசானும் பாரீசிலிருந்து தப்பி மூன்று வாரங்கள் இரவு பகலாக தலைமறைவாக ஓடி ஒளிந்து ஃப்ரான்ஸின் தெற்குக் கோடியிலுள்ள கிராமம் ஒன்றில் அடைக்கலம் புகுந்து அரைப்பட்டினியும் கால் பட்டினியுமாய் வாழந்தார்கள். இந்த அனுபவமும் கூட பெக்கெட்டின் படைப்புகளில் தாக்கங்களை விளைவித்திருக்கலாம். அமைதி காலங்களில் பாரிசில் வாழ்ந்த பெக்கெட்டுக்கு ஜேம்ஸ் ஜாய்ஸ் பெரிய ஆதர்சமாக திகழந்தார். ஜாய்ஸின் காலடியிலேயே பெக்கெட் விழுந்து கிடந்தார் என்று சொல்லக்கூடிய விமர்சகர்களும் உண்டு. ஜாய்ஸும் பெக்கெட்டும் சந்தித்துக்கொள்ளும்போதெல்லாம் அவர்கள் மௌனமாக இருந்த நேரங்களும் அதிகமாம். ஜாய்ஸ் தன் சொந்த சோகத்தில் மௌனமாக மூழ்கியிருக்கையில் பெக்கட் உலக சோகத்தில் மூழ்கி மௌனமாக இருந்தார் என்று வேடிக்கையாகக் குறிப்பிடுவார்கள். பெக்கெட்டின் தனிமையும் மௌனமும் கூட மிகவும் பிரசித்தி பெற்றவை. அவர் இலக்கியத்திற்கான நோபெல் பரிசை வென்ற பிறகும் கூட அவர் வசித்த தெருவில் இருப்பவர்களுக்குக் கூட இவர் யார் என்று தெரியாதபடிக்கு அநாமதேயமாகவே வாழ்ந்தார். பத்திரிக்கையாளர்களை சந்தித்ததில்லை பெரிதாக பேட்டிகளும் கொடுத்ததில்லை. நீங்கள் யார் உங்கள் புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று கேட்ட யாரோ ஒருவருக்கு அவர் -நோபல் பரிசு பெற்ற பிறகு நடந்த சம்பவம்- தன்னுடைய புத்தகங்களை அனுப்பிக்கொடுத்தார். பெக்கெட் நான்கே நான்கு உண்மைகளை மட்டுமே தன் எழுத்தில் அறுதியிட்டுச் சொன்னார்; 1. நான் இவ்வுலகில் பிறந்திருக்கிறேன் 2. நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் 3. நான் என்றாவது ஒரு நாள் இறக்கப்போகிறேன் 4. தெரிந்த காரணங்கள் சிலவற்றினாலும் அறியவே முடியாத காரணங்களாலும் என்னால் மௌனமாக இருக்க முடியவில்லை.
பெக்கெட்டின் நாவல் triology ஒன்றின் கடைசி நாவலின் பெயர் Unnameable.