எஸ் . சண்முகம் கவிதை

வசித்த அறைகளில் ஒன்றுமட்டும்
மூடி திறந்ததாய் ஞாபகமில்லை
விளக்கும் எரிந்திருக்கலாம் அன்றி
இருள் நிரவப்பட்டு இருந்ததாக எண்ணம்

எந்த திசைநோக்கி உறங்கினேன்
தலை எந்த திசையில் இரவெல்லாம் அசைந்தாடியிருக்கும்
இடையிடையே எழுந்து நீர்பருகும் போது
தரையில் நிழல் கிடந்ததைப் பார்க்கவில்லை

மின்வெட்டிலிருந்து மீளும்
இரவுநேர நீலக் குமிழ் விளக்கு
இடம் வலம் திரும்பும் தருணங்களில்
பெயராதிருக்கும் வாலிழந்த பல்லி
விழிப்பிலிருந்து கண்ணயர்வினுள் பிரவேசித்தது

அலாரம் ஒளிக்கும் நேரத்தை
சரியாகத் திருகினேனா என்று நினைவில்லை
விழித்த பின்னர் பிழையாய் ஒலித்தால்
இடைப்பட்ட நிமிடங்களை என்னவென்று கொள்வது

பாத்திரங்களின் உரசல் கேட்கும்
பக்கத்துவீட்டின் சமையலறையைக் கொஞ்சம்
திசைமாற்றி அப்பக்கம் கட்டியிருக்கலாம்
என் வீட்டின் வாசல்கதவின் பூட்டைத் திறக்கும்
இரும்புசத்தமும் சளைத்ததல்ல

எஞ்சியிருக்கும் அயர்ச்சியை உறக்கமற்ற கிடத்தலில்
கரைக்க அறைக்குள் நுழைகையில்
சமீபத்திய ஈரக்காலடிச் சுவடுகளுடன்
இரவெல்லாம் புரண்டு படுக்காத
இன்னொரு பக்கமிருந்தது.


  • (எண் : 006 )