துப்பாக்கி எதற்கு/சிவ. தீன நாதன்

(ரமண விருந்து பாகம் 3 என்ற புத்தகத்திலிருந்து)

ராணுவத்தில் பணிபுரிந்த மேஜர். சாட்விக் என்ற ஐரோப்பியர். 1936 ல் திருவருணைக்கு வந்து பகவான் ரமணரிடம் அடைக்கலம் புகுந்தார். அதன் பிறகு சாதி அருணாசலா என்ற பெயருடன். ஸ்ரீ ரமணாச்ரமத்தில் தங்கி தவ வாழ்க்கை மேற்கொண்டார்.

அக்காலத்தில் திருடர்கள் ஸ்ரீ ரமணாஸ்ரமத்தில் அடிக்கடி புகுந்து தொந்தரவு கொடுத்து வந்தனர். ஆச்ரம சர்வாதிகாரியான நிரஞ்சனானந்த சுவாமிகள். ஒரு பழைய போலீஸ் துப்பாக்கியை எங்கிருந்தோ வாங்கி ஆச்ரமத்தில் வைத்திருந்தார். ஆச்ரமத்தில் துப்பாக்கி வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்தால் திருடர்கள் வருவதற்கு அஞ்சுவார்கள் என்று அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். எனவே அவர் மேஜர் சாட்விக் அவர்களின் பெயரைப் பயன்படுத்தி ஆச்ரமத்தில் துப்பாக்கியை வைத்துக்கொள்ள அரசாங்கம் அனுமதியும் பெற்றார்.
ஒரு நாள் சர்வாதிகாரி சாது அருணாசலாவிடம் அந்தத் துப்பாக்கியைக் காட்டி அதைப் பயன்படுத்தும் அதிகாரத்தை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.

துப்பாக்கியோ மிக மிகப் பழமையானது. அதை உபயோகப்படுத்தினால் துப்பாக்கியே வெடித்து விடும் நிலையிலிருந்தது.!

சாது அருணாசலா அவர்கள் சர்வாதிகாரியிடம் தான் ராணுவ பணியை விட்டு அகன்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்றும் தான் இப்போது ஒரு சாதுவாக இருப்பதாலும், போர்க் கருவிகளைப் பயன்படுத்துவதற்கி ல்லை என்றும் கூறிவிட்டார்.

ஆனால் சர்வாதிகாரியோ விடுவதாக இல்லை. மீண்டும் மீண்டும் சாது அருணாசலாவிடம் இப்பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டும், மற்றும் பல அடியார்கள் மூலம் வற்புறுத்தியும் வந்தார்.

சாது அருணாசல இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமெ ன்று தீர்மானித்தார். ஒருநாள் அவர் பகவானை தனிமையில் சந்தித்து இவ் விஷயத்தைக் கூறினார்.
பகவான் சற்று நிதானித்து.
“உன் அறையின் அலமாரியில் அந்த துப்பாக்கியை சும்மா வைத்துக் கொள்ள முடியாதா?” என்று கேட்ட பகவானின் கருத்தைப் புரிந்துகொண்ட சாத்விக், “இது கட்டாயம் என்னால் முடியும்” என்றார் .
“அப்படியே செய்,” என்றார்.
சாது அருணாசலம் அவர்கள் தனது அறையில் துப்பாக்கி வைத்துக்கொள்ள பகவானின் சம்மதித்தைப் பெற்று விட்டார் என்ற கேள்விப்பட்டு சர்வாதிகாரி அவர்கள் ஆச்சரியப்பட்டார்.

நல்ல வேளையாக துப்பாக்கியை ஒரு முறை கூடப் பயன்படுத்திய சூழ்நிலை அதன் பிறகு அவருக்கு ஏற்படவில்லை.

பிறகு ஆச்ரமம் விரிவடைந்து அடியார்கள் கூட்டம் பெருகிவிட்டது. அதன் பின் சில ஆண்டுகள் கழித்துத் துப்பாக்கியை அரசாங்கத்தாரிடம் திருப்பிக் கொடுக்கும் போதுதான் சாது அருணாசலா அவர்கள் துப்பாக்கியை மீண்டும் தொடும் வாய்ப்பு தனக்கு ஏற்பட்டது என்று நகைச்சுவையுடன் கூறினார்.