சின்மய சுந்தரன்/கவிதைக் குறித்து கேள்வி-பதில்

  1. கவிதை எழுத உகந்த நேரம்?

ஒரு கவிதை எந்த நேரத்திலும் உள்ளத்தில் பிறந்து சொற்களாக வடிவெடுக்கலாம்; பேருந்தில் பயணம் செய்யும் போது கூட! ஆனால் எழுத முடிவது பெரும்பாலும் இரவு பத்து மணிக்கு மேல் தான். ஏற்க்கனவே தோன்றிய சொற்கள் எழுதும் போது மறந்து போய் விடுவதும் உண்டு. புதிய சொற்கள் அந்த இடங்களை பிடித்துக் கொள்ளும்! இரவு பத்து மணிக்குத் தொடங்கி விடிய விடிய கவிதைகள் இயல்பாக ஊற்றெடுத்து வெளிப்பட்ட நாட்கள் உண்டு.

  1. கவிதை தானாக வருமா? அல்லது செயற்கையாக யோசிக்க வேண்டுமா?

மனதைப் பிடித்துக் கொள்ளும் மையக் கருவை வைத்து இயல்பாக ஆற்றொழுக்காய் சொற்கள் வரும் போது நல்ல கவிதை பிறக்கிறது. சில நண்பர்களுக்காகவோ, பழகிய பத்திரிகை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளும் போதா அவர்கள் தரும் நேரக்கெடுவிற்குள்
உட்கார்ந்து யோசிப்பதும் உண்டு.

  1. கவிதை எழுத தலைப்பு கொடுத்தால் தான் எழுதுவீர்களா? ஏதோ ஒரு படத்தை அல்லது உருவத்தைப் பார்த்தால் தான் கவிதை வருமா?

பொதுவாக கவிதை முழுமையாக பிறந்த பிறகு தான் பொருத்தமான தலைப்பை வைப்பேன். பிறர் கொடுக்கும் தலைப்பில் எழுதுவதும் உண்டு. படத்தை அல்லது உருவத்தைப் பார்த்து எழுதும் பழக்கம் பொதுவாக இல்லை.

  1. உங்கள் கவிதை சரியாக இருக்கிறதா என்பதை அறிய என்ன முயற்சி செய்வீர்கள்?

இயல்பாகப் பிறக்கும் கவிதைகள் இயல்பாக சரியாகவே அமையும். சொற்கள் பிறக்கும் வேகத்தோடு போட்டி போட்டு எழுத வேண்டியிருப்பதால் நேரும் எழுத்துப் பிழைகளை மட்டுமே சரி செய்வேன். யாராவது கொடுத்த தலைப்பில் யோசித்து எழுதுவதை இரண்டு தடவைகள் மீள் வாசிப்பு செய்து தேவையான திருத்தங்களை செய்வது வழக்கம் (அழகிய சிங்கர் என்பாக்களை மட்டும் தோன்றும் போதே குழுமத்தில் பதிவிட்டு விடுவேன்! 😊 ).

  1. உங்கள் கவிதை மூலமாக சமுதாயக் கோபத்தைக் காட்ட விரும்புகிறீர்களா?

சமுதாயப் போக்குகளை பல விதங்களிலும், எங்கங்கே இயல்பாக வருமோ அங்கங்கே மெல்லிய நகைச்சுவையுடன், என் கவிதைகள் படம் பிடிக்கின்றன. கோபத்தை காட்டுவதில்லை; ஏனெனில் ஒரு குடியரசில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பொறுப்புண்டு. யார் மேல் யார் கோபத்தை காட்டுவது? ஆனாலும் அறச்சீற்றம் என்பது மெல்லிய கீற்றாக பல கவிதைகளில் வெளிப்பட்டிருப்பதும் உண்டு.