புஷ்பா விஸ்வநாதன்/கவிதைக் குறித்து கேள்வி – பதில்

1) ‌. கவிதை எழுத உகந்த நேரம் என்ன?

என்னைப் பொறுத்தவரை எந்தநேரமும். காலையில் குளிக்கும் போதும் கவிதை வரிகள் பளிச்சிடும். இரவில் தூங்க விடாமலும் துரத்தும். உடனுக்குடன் பதிவு செய்யாமல் மறந்த, மறைந்த கவிதைகள் நிறைய.

2) கவிதை தானாக எழுத வருமா அல்லது செயற்கையாக நீங்கள் யோசிக்க வேண்டுமா?

பல தடவைகள் தானாக வரும். சில தடவைகள் யோசிக்க வேண்டியும் வரும்.

3) ‌கவிதையை எழுதத் தலைப்புக் கொடுத்தால்தான் எழுதுவீர்களா? ‌

இல்லை. கண்ணில் பட்ட, கருத்தில் விழுந்த, மனதைப்பாதித்த விஷயங்களைப்பற்றி எழுதுவேன். ஆனால் தலைப்பு
தந்து, படம் போட்டு எழுதச்சொல்லும் சவால்களால், எழுதும் சுவாரஸ்யம் இன்னும் கூடும். மேலும், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் முடிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், என்னால் முனைப்புடன் எழுதி முடிக்க முடிகிறது. இன்றைய என்‌குடும்பச் சூழ்நிலையில் எழுதுவதற்கு அதிக நேரம் கிடைக்காததால், இத்தகைய சவால்களை என் எழுத்தார்வத்திற்குப் போடும் தீனியாக நான் உணர்கிறேன்.

4). உங்கள் கவிதை சரியாக இருக்கிறதா என்பதை அறிய என்ன முயற்சி செய்வீர்கள்?

‌‌ எழுதி விட்டு 2, 3 முறை படித்துப் பார்ப்பேன். அதை மூடி விட்டு சற்று நேரம் கழித்து மறுபடியும், ஒரு மூன்றாவது மனுஷியாக நினைத்துக்கொண்டு படித்துப் பார்ப்பேன். நான் சொல்வது உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்கிறதா, படிப்பவர்களுக்கு எளிதில் புரியுமா என்று மட்டும் பார்ப்பேன்.

5). உங்கள் கவிதை மூலமாக சமுதாயக் கோபத்தைக் காட்ட விரும்புகிறீர்களா?

சமுதாயக் கோபமா, தெரியவில்லை. கட்டாயம் சமுதாய‌ அவலங்களைக்காட்ட விரும்புகிறேன். என் தவிப்பைத் தெரியப்படுத்தவும், ஒரு விழிப்புணர்வுக்காகவும் என்று சொல்லலாம். ஏன், இந்த அவலங்களைக் கண்டும் நான் எதுவும் செய்யவில்லையே, என்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற என் கையாலாகாத்-
தனத்தின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.