
இன்றைய நவீன விருட்சம் ‘ சொல் புதிது ‘ கவிதை நிகழ்வில் நான் வாசித்த கவிதை
கூட்டத்தோடு சேர்ந்து வெயிலும் ,
மூடிய அந்த ரெயில்வே கேட்டை
வெறித்துப் பார்த்துக் கொண்டு
இருக்கும்
தார் ரோட்டை உருக்கும்
தனலான வெயில் நேரம்
மேற்கே போக வரும்
மதுரை ரெயில் நேரம்
அடைத்த கேட்டருகே
பெட்ரோல் புகை நாற்றம்
அதற்குள் பீடிப் புகையோடு
மடித்துக் கட்டிய கைலிகள்
அனைவரையும் நிறுத்திய
பெருமைச் சிரிப்போடு
இடுப்புக் கேட்டுச் சாவியோடு
வெத்திலை வாய்ச் சிகப்பன்
பத்து டிக்கெட்டை
பாக்கெட்டில் வைத்துக் கொண்டு
விசிலை எடுத்துப் பார்த்துக் கொண்டு
ரெயில்வே ஆபீசர்
திருவிழாத் தேரோட்டம் பற்றி
பேசித் தீர்க்கும்
விடுமுறைக் குடும்பம்
கைகளில் எண்ணெய்ப்
பிசுக்கை விட்டு விட்டு
வயிற்றுக்குள் போய்க்
கொண்டிருக்கும் வடைகள்
கழுவிய கண்ணாடி டம்ளர்களில்
மஞ்சள் டீ பாதி நுரையோடு
போய் வந்து கொண்டு இருக்கும்
வெள்ளரிப் பிஞ்சுகளை
விற்கும் சிறுசுகளிடம்
பேரம் பேசும் பெருசுகள்
ரப்பர் செருப்பை விலக்கி விட்டு
தார் ரோட்டுச் சூட்டைத்
தடவிப் பார்த்தபடி
அலுத்தபடி
கருவாட்டுக் கூடையோடு
டிக்கெட் வாங்காமல்
காத்திருக்கும் கிழவி
திடீரென்று ஆபீசரின் விசில்
கொஞ்சம் மக்கர் பண்ணி விட்டு
சரியாக ஊதும்
தண்டவாளம் தடதடக்க
வந்து சேரும் வண்டி
கொஞ்ச நேரப் பரபரப்பு
அதன்பின் வெயில் மட்டும் தனியாக
விரியும் கேட்டை
வெறித்துப் பார்த்துக் கொண்டு இருக்கும்
————

நாபா-வின் ரயில்வேகேட் கவிதை மிகச் சிறப்பாக உள்ளது.