இரு கவிதைகள்/ந.பானுமதி

01/09/23

ஒளவையும் மரமும்

மாலையில் சூழ்ந்த கருமேகங்கள்

இரவினில் பெய்த மழையில்

குளித்து சிலிர்த்த மரங்கள்

தெரு பக்கத்துக் கிளையை ஒரு கை வெட்டி எறிந்தது

முறிந்த இடத்தில் பால் கசிய

நீள் வட்ட உடலும் கூரிய நுனியில் வைரச் சிதறல்களும் பார்த்த பரவசத்தில் நிகழ்ந்த பிரிவை நான் மறந்தும் போனேன்

நீரை வாரி இறைத்துக்கொண்டு சென்ற ஒரு நான்கு சக்கர ஊர்தி கிளையை முழுதாய் அழித்தது

முறிந்ததும் முடிந்ததும் அறிந்தோ அறியாமலோ மரம்
தன் மேனியை நடுக்கி துளிகளைச் சிந்தியது
அறச்சீற்றம் இல்லாத மரம்
அவ்வை சொன்னது சரிதான்.

ஒரு பிரார்த்தனை

வித்திடும்போதே விடையாத்தி
உற்சவ நாளும் விதிக்கப்பட்டது

கண்களில் தெரியாத கயிற்றைப் பற்றி இருந்தவன்

நீளத்தைக் குறைத்து அருகே வருகிறான் 

பிடரி மயிர் சிலிர்க்க வெண்  புரவியில் வா, தேவனே!

பற்றி அழைத்துக் கொண்டு வான் மேகங்களில் பவனி செய்து

பாற்கடலில் இருக்கும் அந்த நீலனிடம் கொண்டு சேர்த்துவிடு

வேறொன்றும் கேட்க நான் நசி கேதஸ் இல்லையே!

உன் தர்மங்கள் இருக்கட்டும்

என் வேண்டுதல் பலிக்கட்டும்