
கை கோர்த்து
உடன் நடந்த
பயண நடுவில்
விலகி முன்னால்
ஒரடி எடுத்து நீ
செல்கையில்
புரியவில்லை.
பேச்சு குறைந்து
பார்வையும் தவிர்க்கையில்
புரிந்து போனது.
பிரிந்து போக நினைக்கிறாய்
என்பதே வலிக்கிறது.
பிரிவைத் தாங்குவேனா?
தெரியாது.
எல்லாமும் என் தவறுதான்.
காரணமின்றி மாளாக் காதல்
உன்மீது கொண்டது தவறு .
கேள்விகள் ஏதுமின்றி
நீ சொன்னபடியெல்லாம்
.கேட்டது தவறு.
சொற்களாலும் ரணப் படுத்திய
வேளைகளில் மாறிவிடுவாய்
என நம்பியது தவறு.
நானே விரல்களைப் பிரித்து
கையை விட்டுவிட
வேண்டுமென நினைக்கிறாய்.
உன்மீதான அன்பில்
நிரம்பித் ததும்பும் என் மனசு
சொல்கிறது, போகட்டும்
விட்டுவிடுவென.
அதைக் கேட்கத் தோன்றுகிறது,
அதுவும் என் தவறு.
.

இழக்கப்போகும் காதலின் சோகத்தை அழகாகப் படம்பிடித்தீர்கள்!