பாரதிபாஸ்கர்

(முகநூலில் ஆர்.கந்தசாமி)

சிறந்த பட்டிமன்ற பேச்சாளர், தனியார் வங்கியில் உயர் பதவி வகிப்பவர், மகாகவி பாரதி மீது அபரிமிதமான பற்று கொண்டவர், தமிழ் இலக்கியத்தின் மீது பாசம் கொண்டவர். தனது தாயார் கல்பகம் குறித்து பகிர்ந்து கொள்கிறார்:முகநூலில்க்ஷ
“எனது தாயார் பெயர் கல்பகம். இவர் அனந்தராம ஐயர் அவர்களின் பேத்தி. அனந்தராம ஐயர்தான் “கலித்தொகை’ என்ற நூலை கண்டெடுத்தவர். எங்கள் குடும்பமே தமிழ் மீதும், தமிழ் படைப்புகள் மீதும் ஆழமான பற்று கொண்டவர்கள். இன்னும் சொல்லப் போனால் எங்கள் குடும்பத்தின் முதல் பட்டதாரி என் அம்மா தான். அதுமட்டுமல்லாமல், அதற்கும் மேலே படித்து வேலைக்கும் சென்றவர். இவர் இன்டர்மீடியட் (Intermediate) என்று அன்று சொல்வோமே (பட்டதாரி படிப்பிற்கு முன்) அந்த படிப்பை ராணிமேரி கல்லூரியில் பயின்றவர். அதில் தேர்ச்சி பெற்றபின் அவரது படிப்பை நிறுத்த அவரது தந்தையார் முடிவு செய்தார். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதால் மவுனமாக இருந்தார். எல்லா வகுப்பிலும் முதல் இடம் பெற்று தேர்ச்சி பெறும் இவர் வகுப்பிற்கு வரவில்லை என்றதும் காரணத்தை அறிந்த கல்லூரி நிர்வாகத்தினர், என் பாட்டி வீட்டிற்கு சென்று தாத்தாவிடம் பேசி மீண்டும் கல்லூரிக்கு வரவழைத்தனர்.

பின்னர் பிரெசிடென்சி கல்லுரியில் பட்ட மேற்படிப்பு படித்து தங்கப் பதக்கம் பெற்று வெளியே வந்தார் அம்மா. அக்கவுன்டண்ட் ஜெனரல் (AG’s) அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்து உயர் பதவி வகித்து ஓய்வு பெற்றார். எதுவுமே பக்கத்தில் இருந்தால் அதன் மதிப்பு தெரியாது என்று கூறுவார்கள். அது 100-க்கு 200 சதவிகிதம் உண்மை என்று இன்று நான் உணருகிறேன்.
எங்களுடைய குடும்பம் நடுத்தர குடும்பம் தான். எல்லா வீட்டிற்கும் இருக்கும் பிரச்னைகள் எங்களுக்கும் உண்டு. என்னுடன் பிறந்தவர்கள் இரண்டு பேர். அவர்கள் இருவரும் எனக்கு முன் பிறந்த சகோதரிகள். என் அம்மா சந்தோஷம் என்றாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளமாட்டார். துக்கம் ஏற்பட்டாலும் ஓரமாக உட்கார்ந்து அழவும் மாட்டார். எது வந்தாலும் அதை சந்திக்கப் பழகவேண்டும் என்று கூறுவார். அந்த அளவிற்கு மன உறுதியானவர். எதையும் தாங்கும் இதயம் பெற்றவர்.

பள்ளியில் படிக்கும் நாட்களிலேயே நான் பல்வேறு பேச்சுப் போட்டிகளில் பங்கு கொண்டு பரிசுகள் வாங்கினேன். கொடுக்கப்பட்ட தலைப்புகளில் நான் என்ன பேச வேண்டும் என்று எனக்கு எழுதிக் கொடுப்பதும் அம்மா தான். அதைத்தான் நான் மனப்பாடம் செய்து மேடையில் பேசி பரிசு பெறுவேன். ஒருமுறை வழக்கம்போல பேச்சுப் போட்டியில் எனக்குத்தான் முதல் பரிசு. எனது சக மாணவத் தோழிகளுடன் பஸ் பிடித்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தோம். வெற்றி பெற்ற சந்தோஷத்தில் என் கழுத்தில் உள்ள செயின் காணாமல் போனதை கவனிக்கவில்லை.

வீட்டை நெருங்குவதற்கு முன் கழுத்தில் செயின் இல்லை என்று தெரிந்த பிறகு பயம் என்னை பற்றிக் கொண்டது. எனக்கோ அம்மா என்ன சொல்வார்களோ என்று பயம் ஒருபுறம். திட்டினால் என்ன செய்வது என்ற நினைப்பு மறுபுறம். நடுத்தரக் குடும்பத்தில் ஒரு தங்க செயின் காணாமல் போனால் என்ன செய்வார்கள் என்று தெரியும். எனது தோழிகள் அனைவரும் தங்கள் வீட்டிற்கு செல்லாமல் என் கூடவே நடந்து என் வீட்டிற்கு வந்தார்கள்.

எல்லோரும் என் அம்மாவிடம் சொல்லி என்னை காப்பாற்ற முடிவு செய்தனர். நான் உள்ளே நுழையவும் என் முகத்தை பார்த்தே அம்மா ஏதோ நடந்திருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டார். “”பரிசு கிடைக்கவில்லையா?” என்று கேட்டபோது “முதல் பரிசு கிடைத்தது’ என்று கூறிவிட்டு, தங்க செயின் காணாமல் போனதை கூற, “பரிசு பெற்றதை கொண்டாடுவோம். உன்னுடையதாக இருந்தால் அது உனக்கு கிடைக்கும். அதற்காக கவலைப்படாதே” என்றார். பேச்சுப் போட்டிகளில் நான் கலந்து கொள்ளும் போது, பரிசு வாங்கினாலும் வாங்கா விட்டாலும் கவலைப் படாதே. பங்கு கொள்வதே முக்கியம் என்று கூறுவார்.

அம்மா எப்போதும் ஒரு வார்த்தை கூட அதிர்ந்து பேசியது கிடையாது. சரியான வார்த்தைகள் விழாமல் இருந்தால் அது பெரிய பிரச்னையை உருவாக்கிவிடும். பின் அதை அள்ள முடியாது என்றும் கூறுவார். “இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்ப காய் கவர்ந்தற்று’ – இப்படி பேசும் போதெல்லாம் ஒரு திருக்குறள் கூறுவார்.

உடன் பிறந்த எல்லாரும் சேர்ந்து, அம்மா திருக்குறள் சொல்ல தொடங்கிவிட்டார் என்று அவரை அன்று கேலி செய்வோம். ஆனால் அவர் எதைப் பற்றியுமே கவலைப்படாமல் வாழ்ந்து வந்தார். மேடையில் எப்பொழுதாவது ஒரு திருக்குறள் சொல்வது எப்படி? நாள் தவறாமல் ஒவ்வொரு நாளும் பலமுறை திருக்குறள் சொல்வது எவ்வளவு பெரிய விஷயம். என் அம்மாவின் தமிழ் பற்றிற்கு இது ஒரு சிறிய உதாரணம்.
தமிழ் இலக்கியத்தில் எந்த அளவிற்கு ஆர்வம் அதிகமோ அந்த அளவிற்கு ஆங்கில இலக்கியத்திலும் அவருக்கு பற்று உண்டு. காலையில் தனது வேலைகளை எல்லாம் முடித்து விட்டு ஆங்கில நாளேடு முழுவதும் படித்துவிடுவார். வரி விளம்பரத்தையும் விடமாட்டார். அதே போன்று ஆங்கில கவிதைகளையும் அவர் ஆர்வத்தோடு படிக்க தவறாதவர். அவரது இலக்கிய ஆர்வத்தாலும், அவருக்கு மகாகவி பாரதி மீது இருந்த பற்றாலும்தான் நான் பிறந்தவுடன் எனக்கு முண்டாசுக் கவிஞன் பாரதியார் பெயரையே வைத்து அழகு பார்த்தார். அதே போன்று அவருக்கு எழுத்தாளர் ஆர்.சூடாமணி கதைகள் என்றால் விருப்பம் அதிகம்.
எனது அம்மா simple living, high thinking என வாழ்ந்தவர். தெய்வ நம்பிக்கை அதிகம். எல்லாரது வீட்டிலும் வம்பு பேசுவது உண்டு. எங்கள் வீட்டிலும் அது அவ்வப்போது நடக்கும். ஆனால் அதில் என் அம்மா என்றுமே கலந்து கொண்டது இல்லை. அதில் அவருக்கு விருப்பமும் கிடையாது. யாராவது வந்துவிட்டு போனால் நாம் எல்லாரும் ஏதாவது குறை அல்லது குற்றம் கூறுவோம். அதையும் அவர் செய்ய மாட்டார். “அவர்களுக்கு என்ன நிலைமையோ, என்னவோ’ என்று சாதாரணமாக கூறிவிட்டு வேறு இடத்திற்கு சென்று விடுவார்.
கல்லூரி நாட்களில் நான் குரூப் ஸ்டடி(group study) என்று கூறிவிட்டு எனது வகுப்பு மாணவிகளுடன் அரட்டை அடிக்க கிளம்பி விடுவேன்.

ஒருமுறை அப்படி சென்ற பின் திடீரென்று என் தோழியின் வீட்டுக் கதவு தட்டப்பட நான் எட்டிப் பார்த்தேன். என் அம்மா நின்றிருந்தார். சரி, நாங்கள் படிக்கிறோமா, இல்லையா என்று நம்மை உளவு பார்க்கத்தான் வந்திருக்கிறார் என்று நானும் என் தோழிகளும் நினைத்தோம். கதவை திறந்த பின்னர் என்னைப் பார்த்து “நீ சாப்பாட்டை மறந்து வைத்துவிட்டு வந்து விட்டாய்’ என்று கூறி சாப்பாட்டுப் பையை கொடுத்து விட்டு வேறு எதுவும் பேசாமல் நடக்க தொடங்கினர். அவர் போகும் வரை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு அது ஒரு நீண்ட நடையாக தோன்றியது. இந்த அம்மாவுக்கு நாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம் என்று என் மனம் என்னை கேட்பது போன்று இருந்தது. நான் நன்றாக வாழ விரும்பும் தெய்வம் எனது அம்மா என்று எனக்கு தோன்றிய பிறகு அவர் விரும்பும் அனைத்தையும் செய்ய நான் முடிவெடுத்தேன். அப்படியே இன்றுவரை வாழ்கிறேன்.

  • சலன்
    நன்றி: விகடன்

One Comment on “பாரதிபாஸ்கர்”

  1. திருமதி பாரதி பாஸ்கரின் அடித்தளம் எது என்று நன்றாக தெரிகிறது.
    பாரதி அவர்களின் ஆழமான பேச்சு , இன்றைய உரைநடை தமிழாகி விட்ட பட்டி மன்றங்களில் கூட, தெளிவான அழகு தமிழில் வெளிப்படுவது அவலின் சிறப்பு. அவர் உடல்நலம் குன்றி இருந்த போது அவர் மீண்டு வரவேண்டும் என்று வேண்டிய கோடி பேர்களில் நானும் ஒருவன்.

Comments are closed.