டாக்டர் வள்ளுவர்/Dr.S.முருகுசுந்தரம்

  1. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
    என்புதோல் போர்த்த உடம்பு

உள்ளத்தில் அன்பு இருப்பவர்களின் உடலில், உயிரானது நிலை
பெற்றிருக்கும். உள்ளத்தில் அன்பில்லாதவர்களின் உடல் வெறும்
எலும்பின் மேல் தோல் போர்த்திய வெற்றுடல் தான்.
உயிருள்ள உடல் என்பது வாழும் நிலை. உயிரற்ற உடல் என்பது
வாழ்வற்ற நிலை. உயிருள்ள வாழும் நிலையை, மேலும் இரண்டு
நிலைகளாகப் பிரிக்கிறார் வள்ளுவப் பெருந்தகை. ஒன்று உள்ளத்தில்
அன்பு நிறைந்து உயிர்ப்போடும் உடல்நலத்தோடும் வாழும் உன்னத
நிலை. மற்றொன்று உள்ளத்தில் அன்பு அறவே இல்லாமல்,
வெறுப்பும், பொறாமையும், ஆசையும், சினமும், சீற்றமும் நிறைந்து
உயிர் இருந்தும் இல்லாத, உடல்நலமற்ற நடைப்பிணம் போன்ற
நிலை. மனிதனின் நாடியும், மூச்சும், இதயத்துடிப்பும் அவன்
உடலில் உயிர் உள்ளதை உறுதி செய்கின்றன. ஆனால் அந்த உயிர்
நிலை பெற்றிருக்குமா, என்பதை அவன் உள்ளத்தில்
நிறைந்திருக்கும் அன்பே உறுதி செய்யும். ஒரு உடலில் உயிர்
நிலை பெற்றிருக்க வேண்டுமென்றால், அந்த உடல், நலத்தோடு
இருத்தல் அவசியம். உடல் நலத்தோடு இருக்க வேண்டுமென்றால்

உள்ளத்தில் அன்பு நிறைந்து நிலைத்து இருத்தல் அவசியம்.
அன்றேல், நலமற்ற வெறும் நடைப்பிணம் தான்.
உள்ளத்தில் அன்புடனும், கருணையுடனும், பாசத்துடனும்,
நேசத்துடனும் இருப்பதே உயிர்ப்புள்ள உடல்நலத்துக்கான வழி,
என்று இந்தப் பேரண்டத்தில் இன்று வரை யாரும் சொல்லாத
பேருண்மையைச் சொல்கிறார் பெருஞ்சித்தர் வள்ளுவர்…

HEALTHY LIFE DEPENDS ON LOVE ALONE…
OTHER WISE ITS ONLY SKIN AND BONE…