Genius is the recovery of childhood at will/எம்.டி.முத்துக்குமாரசாமி


ஃப்ரெஞ்சு கவி ஆர்தர் ரிம்போவின் (Arthur Rimbaud) புகழ்பெற்ற கவிதைத்தொகுதி “ஒளிர்வுகள்” (Illuminations) அளவில் சிறியதுதான். ஆனால் பல ஃப்ரெஞ்சு இலக்கிய விமர்சகர்கள் தங்கள் இலக்கியத்தில் அளவில் மிகப் பெரிய நாவலான மார்சல் ப்ரொஸ்டின் ( Marcel Proust) Things of the past remembrance ஐ விட ரிம்போவின் ஒளிர்வுகள் தொகுதியே முக்கியமானது என்று எழுதியிருக்கிறார்கள். 2009 ஆம் ஆண்டு தி கார்டியன் நாளிதழ் ஃப்ரெஞ்சு நாட்டின் பொதுஜன வாசிப்பில் முக்கியமானதாக மார்சல் ப்ரொஸ்டின் நாவல் கருதப்படுவதாக ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டபோது எனது தோழியும் ஃப்ரெஞ்சு இலக்கிய விமர்சகருமான மிட்செல் ஃப்ரெஞ்சு பொதுஜனத்தின் வாசிப்புத் தரம் கெட்டுவிட்டதாக எனக்குக் கடிதம் எழுதினார். அளவில் சிறிய ஓளிர்வுகள் தொகுதியில்தான் மனதை ஆக்கிரமிக்கும் எத்தனை வரிகள்! “Genius is the recovery of childhood at will” என்ற வரியை நான் என் வாழ்க்கையின் வழிகாட்டி தத்துவமாகவே எப்போதும் கருதி வருகிறேன். “மௌனங்களையும் இரவுகளையும் நான் வார்த்தைகளாக வடித்திருக்கிறேன்”, “நான் நரகத்தை நம்புகிறேன் எனவேதான் நான் நானாகிறேன்”, “ஓராயிரம் கனவுகள் என்னுள் மெதுவாக எரிகின்றன”, “I is another.” என ரிம்போவின் எத்தனை வரிகளை மன எதிரொலிப்பிலிருந்தே சொல்லமுடியும் என்பது ஆச்சரியமான வாசக அனுபவம். இலக்கியத்தில் அளவில் பெரியது என்பதற்கு எந்த மதிப்பும் கிடையாது.