மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 161/அழகியசிங்கர்

காற்றில் கரையும் கணினி/க.வை.பழனிசாமி

ஜன்னல் திறப்பேன்

நெடுது வளர்ந்த
மரமல்லி மரங்கள்
கண்கள் மீது மோதும்

பூக்கள் கருணையோடு
பார்க்கின்றன என்பாள்
வீட்டுக்கு வந்த தோழி

காற்றடிக்கும் போதெல்லாம்
பாவாடை விரித்து
பூக்களை அள்ளி வருவாள்
பெரிய மகள்

பெயர்கள் மறந்து
வீட்டிற்கு வெளியே
பறவைகளைப் பார்த்திருப்பேன்

நிறம் தெறிக்கப்பேசும்
பூக்களோடு
அலைந்து திரும்புவேன்

புடவை நுனியைப் பிடித்து
என்னோடு வீட்டிற்குள்
குழந்தையாக குதித்து வரும்
மலைக்காற்றை ருசிப்பேன்

மடிக்கணினியில்.
புதைந்து கிடக்கும் அவரை
சற்றே நின்று பார்த்து
நகர்வேன் ஒவ்வொரு நாளும்.

நன்றி : காற்றில் கரையும் கணினி – கவிதைகள் – வெளியீடு : காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் ( பி) லிட், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629002
பக்கம் : 80 விலை : ரூ.70.