பகவான் ரமணர் கோவணாண்டி ஆனது எப்படி?/சிவ.தீனநாதன்

(ரமண விருந்து பாகம் 3 புத்தகத்திலிருந்து)

பகவான் ரமணர் தான் கோவணாண்டி ஆனதற்குக் காரணம் என்னவென்று ஒரு நாள் மிகவும் நகைச்சுவையாகக் கூறினார்.

பகவான் கூறினார், ‘அப்போது எனக்கு வயது 14 இருக்கும். அன்று ஸ்ரீ ஜெயந்தி நாள்; வீட்டிலே சித்தி கொழுக்கட்டை பிடித்துக் கொண்டிருந்தாள்.

சித்தி என்னை பார்த்து, ‘வெங்கட்ராமா! போய் குளிச்சு,கௌபீனம் மடிய வந்து எனக்குக் கொழுக்கட்டை பிடிக்கக் கொஞ்சம் சகாயம் பண்ணுடா, ‘ என்றாள்.

அதற்கு நான், ‘போ போ என்னால் முடியாது நான் விளையாடப் போகிறேன், ‘ அப்படின்னு சொல்லி ஓடிப் போய் விட்டேன்.

‘இதற்கு தண்டனையாக என் அப்பன் அருணாசலன் என ஆயுசு பூரா கோவணாண்டியா உட்கார வைத்து விட்டான் , ‘ என்று ஹாஸ்யமாகவும், மிகவும் உருக்கமாகவும் கூறினார் பகவான்.

முற்றும் துறந்த முனிவர் பகவான், தான் கோவணாண்டி ஆனதற்கு இப்படியும் காரணத்தைக் கற்பித்துக் கூறினார்.

பகவான் தன் சித்தியிடம் பேரன்பு பூண்டிருந்தார் . அன்று தான் சித்திக்கு உதவி செய்ய மறுத்ததற்கு பகவான் வருத்தம் தெரிவிப்பது இல்லையா, இது?