ஹலோ/அழகியசிங்கர்

                                

                                           


எனக்கு ஹலோ சொல்ல பிடிக்காது.  யாரையாவது பார்த்து ஹலோ சொல்வது குட்மார்னிங் வைப்பதையெல்லாம் நான் வெறுக்கிறேன்.  அதற்கு முதல் காரணம் எனக்கு இப்படிச் சொல்வது இயல்பாக இருப்பதில்லை.  ஏன் இன்னும் கேட்டால், யாருக்கும் இயல்பாக இல்லாத விஷயம்தான் என்று எனக்குத் தோன்றும்.  நான் அலுவலகத்தில் சேர்ந்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஓடி விட்டன.  நான் யாருக்கும் ஹலோ சொன்னதில்லை.  அதவாது இயல்பாக சொன்னதில்லை.  செயற்கையாகத்தான் சொல்லியிருக்கிறேன்.  அல்லது சொல்வதற்குமுன் ரொம்பவும் யோசித்திருக்கிறேன்.  அதனால் அதிகாரிகளுக்கு என்னைப் பிடிக்காமல் போய்விடும்.  மரியாதைத் தெரியாதவனாக இருக்கிறான் என்று திமிராகச் சிலர் நினைக்கக்கூடும்.  அதேபோல் என்னைப் பார்த்து யாராவது ஹலோ சொன்னால் எனக்கு சிரிப்புத்தான் வரும்.  அதற்கு எப்படி ரியாக்ட் பண்ணுவது என்பதும் எனக்குத் தெரியாது. 
ஆனால் உண்மையில் நான் எல்லோருக்கும் ஹலோ சொல்லி சௌஜன்யமாய் இருக்க நினைப்பதுண்டு.   ஆனால் அப்படி இருக்கும்படியான சூழ்நிலை ஏற்படுவதில்லை. 
உண்மையில் பல ஆண்டுகள் இது ஒரு பிரச்சினையாகவே இருந்ததில்லை.  என் இயல்பை   அறிந்து பலர் அதைக் கண்டுகொள்வதில்லை.  கடந்த பத்தாண்டுகளாக இந்த வட்டார அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன்.  பல அதிகாரிகளுக்குக் கீழ் நான் இருந்திருக்கிறேன்.  ஒரு சமயத்தில் நான் தினமும் தாமதமாக வருவதைப் பார்த்து ஒரு அதிகாரி என்னைப் பார்த்து ஏன் தாமதமாக வருகிறாய் என்று கேட்டதில்லை. நான் தினமும் எதிர்பார்ப்பேன்.  தாமதமாக வருவதைப் பார்த்து என்னைக் கண்டிப்பாரென்று.  ஆனால் அவர் கண்டு கொள்ளவே இல்லை.   அவருக்குக் கூட நான் ஹலோ சொன்னதில்லை.  ஒருமுறை அவரைப் பார்த்துக் கேட்டேன்.  “ஏன் நீங்கள் என்னை கேட்கவில்லை? தாமதமாக வருவதைப் பற்றி.”  அவர் சிரித்துக் கொண்டாரே தவிர, கேட்கவில்லை.  ஆனால் அவரிடம் எனக்குப் பிடிக்காத ஒன்று உண்டு.  அவர் அடிக்கடி சிகரெட் பிடிப்பார்.  அவரிடம் அந்தச் சிகரெட் ஸ்மெல் தாங்கமுடியாமலிருக்கும்.  சிலசமயம் அவர் அதிகாரியாக இருப்பதைவிட அந்தச் சிகரெட் ஸ்மெல்லாக மாறிவிட்டிருப்பாரோ என்று தோன்றும். ஏன் இவ்வளவு சொல்கிறேனென்றால், ஒருவர் ஹலோ சொல்ல வேண்டுமென்றால் அதற்குத் தகுதியான நபர் அவர்தான் என் அலுவலகத்தில்.  ஜென்டில்மான்.  அதன்பின் வந்த பல அதிகாரிகள் திமிர் பிடித்தவர்கள். அவர்கள் எனக்கு முன்னால் வங்கியில் சேர்ந்து, எந்தவிதமான திறமைகளையும் வளர்த்துக்கொள்ளாமல், பதவி உயர்வு பெற்றவர்கள்.  அதனாலயே அவர்கள் உலத்தில் எதையோ சாதித்துவிட்டதாக நினைத்துக் கொள்பவர்கள்.  அவர்களைப் பார்த்து ஹலோ மட்டுமல்ல, பேசக் கூடப்பிடிப்பதில்லை.  உண்மையில் நான் மரியாதை உள்ளவனாக இருக்க வேண்டுமென்று நினைப்பவன்.  அந்தக் காரணத்தினாலேயே புதிதாகச் சேர்ந்த ஒரு அதிகாரியிடம் ஒரு நாள் நான் ஹலோ சொன்னேன்.  அவரோ அதைப் பற்றி சிறிதும் கவனிக்கவில்லை.  அவருடைய அந்தத் திமிரைப் புரிந்துகொண்ட பிறகு நான் அவருக்கு ஹலோ சொல்வதை நிறுத்திவிட்டேன்  இப்படி சில பிரகிருதிகள் உண்டு.  என்ன செய்வது?     ஒரு சமயத்தில், நான் ஸ்பெஷல் அசைன்மென்டிற்காக ஒரு ஓய்வுபெற்ற அதிகாரிக்கு உதவியாளராக இருந்தேன்.  கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கான பணி அது.  அவருக்கென்று பிரத்தியேகமான அறை.  இன்னும் இரண்டு மூன்று அதிகாரிகளுடன் அவர் பந்தா பண்ணுவதற்கு ஏற்பாடாயிற்று.  அவர் வங்கி சம்பந்தமான எல்லாப் புத்தகங்களையும் தருவித்து அதிலிருந்து பக்கம் பக்கமாகக் குறித்துக்கொண்டு அப்படியே என்னை அடிக்கச் சொல்வார்.  பின் அது குறித்து எதோ யோசனை செய்வதுபோல் பாவனை செய்வார்.  அவருக்கும் இன்னொரு குட்டி அதிகாரிக்கும் அடிக்கடி சண்டை வரும்.
முதன்முதலாக அவர்தான் என்னைப்பார்த்து, “ஏம்பா நான் இந்த வங்கியில் பல வருஷமா டிஜிஎம்மா இருந்திருக்கிறேன்.  அதுக்கு மதிப்பு தந்தாவாது, ஹலோ, üகுட் மார்னிங்ü சொல்லக்கூடாதா?” என்று கேட்டார்.  அவர் சொன்னதைக் கேட்டவுடன், குட்மார்னிங் சொல்றது முக்கியம்னு தோன்றியது.  ஆனால், நான் வழக்கம்போல் அவரைப் பார்த்து ஹலோ சொல்ல மறந்துவிடுவேன்.  ஒருமுறை அவரைப் பார்த்துச் சொன்னேன் ஙி  “எனக்கு இது இயல்பா வருவதில்லை,” என்று.  ஆனாலும் அவர் விடாமல் அலுவலக அறைக்கு நுழைந்தவுடன், என்னை குட்மார்னிங் சொல்ல வைத்துவிடுவார்.
பொதுவா அலுவலகம் மட்டுமல்ல, வெளியில் கூட நான் ஹலோ சொல்வது கிடையாது.  இது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.  என் வீட்டில் யாராவது விருந்தாளி வந்தாலும், என் இயல்பா இருந்துவிடுவேன்.  ஆனால் என் மனைவி, மரியாதைத் தெரியாதவன் என்று கோபித்துக் கொள்வாள்.  üஎன்ன மனுஷனோ யாராவது வந்தால் விஜாரிக்கக் கூடத் தெரியாது' என்று பலமுறை அவள் முணுமுணுத்திருக்கிறாள்.  நான் என்னைச் சரி செய்ய வேண்டுமென்று நினைத்துக் கொண்டாலும், பழையபடியே இருந்துவிடுவேன். 
மடிப்பாக்கத்திலிருந்து என் பேத்தி மதுவந்தி எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள்.  என்னைப் பார்த்து மதுவந்தி,”என்ன தாத்தா நீ யாருக்கும் ஏன் குட்மார்னிங் சொல்ல மாட்டேங்கறே?”என்று கேட்டாள்.
“யார் சொன்னா?”
“பாட்டிதான்..”
“எப்ப சொன்னா?”
“அது இருக்கட்டும்..நான் ஸ்கூல் போனாக்கா எல்லோருக்கும் குட்மார்னிங் சொல்லணும்னு மிஸ் சொல்லியிருக்கா...அது நல்ல பழக்கமாம்..”

“நான் படிக்கும்போது யாரும் என்கிட்ட அதுமாதிரி சொல்லலை..”
“நான் உன்கிட்டே இனிமே குட்மார்னிங் சொல்லித்தான் பேசுவேன்..”
அன்று தூங்கும்போது என் கனவில் மதுவந்தி குட்மார்னிங் குட்மார்னிங் என்று பலமுறை சொல்வதுபோல் கனவு.
வழக்கம்போல்  அலுவலகம் சென்ற நான், ஒவ்வொருவரையும் பார்த்து குட்மார்னிங் குட்மார்னிங்  என்றேன்.  என்னை எல்லோரும் விசித்திரமாகப் பார்த்தார்கள்.

(92வது இதழ் – ஜனவரி 2013 ல் வெளிவந்தது)