பகவான் செய்த பரிகாசம்/சிவ.தீனநாதன்

(ஸ்ரீ ரமண விருந்து பாகம் 3)
திருவண்ணாமலையில். பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள் இருந்த காலத்தில் வாழ்ந்த மற்றொரு மகான் சேஷாத்ரி சுவாமிகள் ஆவார். இவர் பித்தராய், பேயராய் ஓரிடத்திலும் தங்காமல் அலைந்து திரிந்து கொண்டிருப்பார். இவர் பகவானை விட வயதில் மூத்தவர்.

தம்மைப் புகைப்படம் எடுப்பதை மகான்கள் விரும்புவதில்லை. புகைப்படக்காரர்களி டமிருந்து தப்பிக்க முடியாத ஒரு சூழ்நிலையில் ஆசிரமத்தோடு கிடந்த பகவானை புகைப்படக்காரர்கள் பல கோணங்களிலிருந்து பலவிதமாகப் புகைப்படம் எடுத்தி ருக்கிறார்கள்.

ஆனால் சேஷாத்திரி சுவாமிகள் யாராவது கேமராவும், கையுமாக வருவதைப் பார்த்தால் கல்லை வீசி எறிந்து அவர்களை விரட்டி டுவார், இவ்விதமாக அவர் புகைப்படக்காரர்களிடமிருந்து தப்பித்து வந்தார்.

1929 ஆம் வருஷம் சேஷாத்திரி சுவாமிகள் மகா சமாதி அடைந்த நாள். சமாதி வைபவத்தில் ரமண பகவானும் கலந்து கொண்டார். புகைப்படக்காரர்கள் பலர் சேஷாத்திரி சுவாமிகளின் பூதவுடலை புகைப்படம் எடுக்க வந்திருந்தனர்.

இதை பகவான் கவனித்தார்: “போட்டோக்காரங்க கிட்ட யிருந்து தப்பிச்சா ஒரே ஆசாமி, இந்த சேஷாத்ரி ஸ்வாமிதான்! இன்னைக்கு அவரும் மாட்டிண்டார்; விடாதீங்கய்யா, நல்லா நிறையப் படம் எடுங்கோ, ‘ என்று கூறி நகைத்தார்.

இவ்வாறு நினைத்ததை யெல்லாம் புகைப்படம் எடுக்கும் புகைப்படக்காரர்களின் போக்கை பரிகாசம் செய்தார், பகவான்.