அப்பா திரும்பவும் வந்து விட்டார்

அழகியசிங்கர்

சமீபத்தில் என் இலக்கிய நண்பர் ஒருவர் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, நீங்கள் வாராவாரம் கூட்டங்களை நடத்துவதை விட்டு விட்டு, அப்பாவைப் பற்றி ஒரு நாவல் எழுதுங்கள் என்று கூறியது சற்று வியப்பாக இருந்தது.

அப்பாவைப்பற்றி கட்டுரைகள் எல்லாம் எழுதி விட்டதாக எனக்குத் தோன்றியது. நாவலில் என்ன எழுதுவது என்று தெரியவில்லை. கற்பனையாக அப்பாவை உருவாக்கி, நிஜமாக நான் பழகிய அப்பாவைக் கலந்து நாவல் எழுதலாமென்று நினைத்தேன்.

ஆனால் ஆரம்பிக்கவில்லை. இரண்டாண்டுகள் முன் நான் ‘அப்பாவின் அறை’ என்ற கதை எழுதி அதை ஒரு சிறுகதைப் போட்டிக்கு அனுப்பினேன். முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசெல்லாம் கிடைக்குமென்று பகல் கனவு கொண்டிருந்தேன். மூச்..ஆறுதல் பரிசுகூட கிடைக்கவில்லை.

சுயசரித பாணியில் எழுதப்பட்ட கதை இது. தேர்ந்தெடுப்பவர்களுக்குப் பிடிக்கவில்லையோ என்று தோன்றியது. எனக்கு இது சற்று வருத்தமாகவும் நம்ப முடியாமல் இருந்தது.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தபோது, எத்தனைப் பேருக்கு என்னைத் தெரியும். ஆயிரக்கணக்காகப் போட்டியில் கதைகள் வந்திருக்கும். என் கதையை எப்படி அடையாளம் கண்டு பிடிப்பது.

இப்போது கூட அசோகமித்திரன் கூறியதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. அவர் சுதேசமித்திரன் என்ற பத்திரிகைக்குத் தியாகராஜன் என்ற பெயரில் கதைகள் அனுப்புவாராம். அப்படி அனுப்புகிற கதைகள் எதுவும் பிரசுரம் ஆகவில்லையாம். நகலெடுத்து அனுப்பாததால் அக் கதைகளைச் சுதேசமித்திரன் பத்திரிகை அலுவலகத்தில் அவரே போய்த் தேடுவாராம். அப்போது தியாகராஜன் என்ற பெயரில் இன்னொருவர் எழுதிய கதைகள் கிடைக்குமாம். சொல்லி சொல்லி சிரிப்பார் அசோகமித்திரன்.

நவீன விருட்சம் என்ற சிற்றேடு நடத்துவதற்குக் காரணம். பெரும் பத்திரிகைகளில் இடம் கிடைக்காது என்பதால்தான். இதை எழுபதுகளில் க.நா.சு, ஞானக்கூத்தன் போன்றவர்கள்கூறியிருக்கிறார்கள். ஞானக்கூத்தன் ‘தமிழை எங்கே நிறுத்தலாம்’ என்ற கவிதையை கசடதபற சிற்றேட்டில் எழுதியிருக்கிறார்.

விருட்சத்தில் எல்லோருக்கும் இடம் தந்திருக்கிறேன். எழுதத் தெரியாதவர்களுக்கும் எழுதத் தெரிந்தவர்களுக்கும். 33 ஆண்டுகளாக இன்றுவரை தொடர்ந்து நடத்தி வருகிறேன். இப்போது 107வது இதழ்.

‘நகுலன் கட்டுரைகள்’ என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன். நகுலனின் பெரும்பாலான கட்டுரைகள் விருட்சம் இதழ்களில் வந்திருக்கின்றன. இன்று தினமணி கதிரில் வெளிவந்த ‘அப்பாவின் அறை’ என்ற கதை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உயிர்பெற்று வந்துள்ளது.

இன்னும் கூட அப்பாவின் அறையில் படுத்துக்கொள்ளும்போது அப்பா ஞாபகம் வரத்தான் வருகிறது.

இன்று ஒரே மழை. நண்பர்கள் மூலம் தினமணி கதிரில் கதை வந்திருக்கிறது என்று தெரிந்தது. ஆனால் முனையில் உள்ள கடைக்குப் போய் வாங்கி வரமுடியவில்லை. தெரு முழுவதும் தண்ணீர் தேங்கி விட்டது.

என் வீட்டிற்குத் தினமணி பேப்பர் போடுகிற பையன் இன்று பத்திரிகைப் போட முடியாது என்று கூறிவிட்டான். அதை ஏன் கோபமாகக் கூறினான் என்று தெரியவில்லை.

நண்பர் தினமணி கதிர் இதழைக் கொண்டு வந்து கொடுத்தார். வெளியிட்ட தினமணி கதிருக்கு என் நன்றி.

1