லீலை/ப.மதியழகன்

கண்ணன்
பல பரிமாணங்கள் கொண்டவன்
அவன் மனம்
யூகித்து அறிய முடியாத ஒன்று
போர்க்களத்தில் பொய்யுரைத்தான்
யுத்ததர்மத்தை மீறினான்
அறம் வெல்ல
அநீதியைக் கையிலெடுத்தான்
இரு தரப்புக்கும்
நடுநிலையாக இருக்க
வேண்டியவன்
பார்த்தனுக்கு சாரதியாக
மட்டுமின்றி
பாண்டவர்களுக்கு காரியதரிசியாகவும்
இருந்தான்
அவன் பிறப்பும் இறப்பும்
அசாதாரணமானவை
அவனுடைய வம்சமும், குலமும்
அழிவதை கண்ணெதிரிலேயே
கண்டான்
லீலை புரிந்தவனிடமே
விதி
வேடன் ரூபத்தில்
விளையாடிப் பார்த்துவிட்டது!