ஜெ.பாஸ்கரன்/கனடாவிலிருந்து…

ஐந்தாம் தேதி மாலை எமிரேட்ஸில் கிளம்பியாகிவிட்டது! சின்னவளுடன் ஒன்றரை மாதம், பெரியவளுடன் ஒன்றரை மாதம் என்று ஒப்பந்தம். வித்தியாசமாக வீட்டிலிருந்தே ஷாஃபர் டிரிவன் கார் – வயதாகிவிட்டதால் ஏர்போர்ட்டில் அசிஸ்டன்ஸ்! ஒன்பதரை மணிக்கு ஃப்ளைட், ஒரு மணிநேரம் லவுஞ்சில் வழக்கமான டின்னர் முடித்து விமானத்தில் பதினோரு மணிக்கு மீண்டும் ஒரு முறை ‘மினி’ டின்னர் (ஹி..ஹி.. அரை சப்பாத்தியும், நாலு பழத்துண்டுகளும் மட்டும்) முடித்து கண்ணயற முயன்றபோது, துபாயில் இறக்கிவிட்டார்கள்!

துபாயில் வெகு விரைவாக சாங்கியங்கள் முடித்து (ஏர்போர்ட் அசிஸ்டன்ஸ் உபயம்!), மீண்டும் சிவப்பு டர்பன் கட்டிய எமிரேட்ஸ் அழகிகளின் வரவேற்பில்… அலுங்காமல், குலுங்காமல் 40,000 அடி உயரத்தில் மிதந்து டொரண்டோ வந்தோம். அங்கிருந்த கியாஸ்கில் பாஸ்போட்டை ஒத்தி, ‘ஓகே’ ரசீது பெற்று, இமிக்ரேஷனில் சிரித்து, வெளியே வந்தோம். இங்கு சிறிது காத்திருந்து காரில் கிளம்பினோம்.

ஷாஃப்ர் அகிய்ல் யாகூப் ஒரு சுவாரஸ்யமான மனிதர். அசால்டாக எங்கள் சூட்கேஸ்களை காரில் ஏற்றினார் – என் கணிப்பில் அவருக்கு சுமார் ஐம்பத்தி ஐந்து வயதிருக்கலாம். முகவரியை ஒரு முறை சரிபார்த்து, திரையைத் தொட, அது ஒளிர்ந்து வழி காட்டியது! “கனடா மிகச் சிறந்த நாடு. மனிதர்கள் நல்லவர்கள். ஒரு சில நாடுகளைப் போல நம்மிடம் வெறுப்பு காண்பிக்க மாட்டார்கள். இங்கு பணம் சம்பாதிப்பது கடினம். வரிகளும் அதிகம். அதனால் எல்லாவற்றையும் குறைத்துக் கொண்டுவிட்டேன்! நீங்கள் செல்லும் இடம் மிகவும் ‘பாஷ்’ ஏரியா. அவர்கள் தேர்வு செய்யும் கார்கள் கூட மிகவும் விலை உயர்ந்தவை. இந்த மாதிரி கார்களில் (செவர்லெ, சிக்ஸ் சீட்டர்) வர விரும்ப மாட்டார்கள். வருடத்திற்கு ஒரு முறை என் பெண்ணைப் போய் பார்த்து வருவேன்” (எந்த ஊர் என்று தெளிவாகக் காதில் விழவில்லை – ஆனாலும் ஒரு அப்பாவாக எனக்கு அவரைப் புரிந்து கொள்ள முடிந்தது!)

வெளிநாட்டில் முகம் தெரியா ஒரு மனிதர் என்னுடன் இவ்வளவு பேசியதில்லை. ஃபுல் சூட்டில் சிரித்த முகத்துடன் நல்ல மனிதர். வண்டியை அழகாக திருப்பி நிறுத்தி, லக்கேஜ் எல்லாம் இறக்கி வைத்துவிட்டு, ‘டிப்ஸ்’ க்குக் காத்திராமல், ‘குட் டே’ சொல்லி அவர் சென்ற திசையை சிறிது நேரம் பார்த்துக்கொண்டே நின்றேன்! மனிதர்கள் எங்கும் இருக்கிறார்கள், அவர்கள் நம் கண்ணில் படுவதுதான் நமது நல்லூழ்!

வாசலிலேயே காத்திருந்த மகள், மாப்பிள்ளை, பின்னர் பள்ளியிலிருந்து திரும்பிய பேரன் பேத்திகள் முகம் முழுக்க மகிழ்ச்சி!

இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பா………!

+3